பொறையாறில் பொதிந்துள்ள 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் !
நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு மேற்கே சுமார் 1 கி.மீதொலைவில் அமைந்துள்ள சிறிய நகரம் தான் பொறையார். தரங்கம்பாடிக்கும் பொறையாறுக்கும் மிக நீளமான வரலாற்று தொடர்புடைய நெருக்கும் மிக அதிகமுண்டு. 16 ஆம், நூற்றாண்டு முதல் தரங்கம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய டேனிஷ்க்காரர்களின் அலுவலகம் மற்றும் ஆளுநர் மாளிகை நிர்வாகம் தொடர்புடைய பணிகளில் வேலை செய்த பலரும் பொறையாரில் வசித்ததாக கூறப்படுகிறது.
அதற்கான வரலாற்றுப் பதிவுகளும் ஏராளமாகவே உள்ளன. ஆசியாவில் இரண்டாவது சீர்திருத்த லுத்தரன் திருச்சபையான (புராட்டஸ்டாண்டு) 1746 இல் கட்டப்பட்டு 271 ஆண்டுகள் பழமையான பெத்லகேம் ஆலயமும் அமைந்துள்ள பெருமையும், அந்த ஆலயத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மிஷனரிகள் அடக்கம் செய்யப்பட்ட கலை நுணுக்கமான கல்லறை கட்டிடங்களும் அதிக அளவில் இருப்பதை தற்போதும் காணமுடிகிறது.

1706 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு பொறையாரில் உள்ள ஒரு கிராமமான இன்றளவும் கடுதாசிபட்டறை என்று அழைக்கப்படுகிற இடத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயந்திரம் மூலம் அச்சடிக்கக்கூடிய அச்சகத்தை அமைத்தார். அதே இடத்தில் காகித ஆலையையும், மை தயாரிக்கும் கூடத்தையும் அமைத்துள்ளார். 1710 இல் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹாலி என்னும் இடத்தில் சதுரநிலைக் குத்தலான அச்சு எழுத்துக்களை வடிவமைத்து கடுதாசிபட்டறைக்கு கப்பல் மூலம் வரவழைத்தார்.
அந்த எழுத்துக்கள் அச்சுக்கு ஏற்றதாக இல்லாததால் 1713 இல் பொறையாரில் தரங்கம்பாடியில் வசித்த பொற்கொல்லர்களை (இன்றும் தரங்கம்பாடியில் பொற்கொல்லர் தெரு உள்ளது) வைத்து பித்தளையில் ஆனஅச்சு எழுத்துக்களை வடிவமைத்துள்ளார். அதன் பின்னர் 1715 இல் முதன்முறையாக இந்திய மொழிகளிலேயே, தமிழில் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை (புதிய ஏற்பாடு) அச்சடித்து வெளியிட்டார். தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், ஆத்திச்சூடி, கொடுந்தமிழ் அகராதி, இஸ்லாமிய, இந்துக்களை பற்றிய நூல்கள் பல்வேறு சமய கடவுள்களின் வரலாறு, தமிழ் பஞ்சாங்கம், தமிழ் காலண்டர், நீதிவெண்பா, 70 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட தமிழ்அகராதியை அச்சடித்து வெளியிட்டார். மலபாரிகளின் தத்துவ வேதாந்தங்கள் (மலபார் என்பது அக்காலத்தில் மேற்கு பகுதியையும், கிழக்கு பகுதியையும் உள்ளடக்கிய தமிழகத்தை குறிக்கும்) உள்ளிட்ட ஏராளமான நூல்களை காகிதத்தில் அச்சடித்து தமிழிலேயே வெளியிட்ட பெருமை பொறையாருக்கு உண்டு.
இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய பொறையாரில், 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திற்கு முன்னரே டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரிண்டிங் மிஷின்கள் கடல்வழி மார்க்கமாக வரவழைக்கப்பட்டு ஏராளமான அச்சுக்கூடங்கள் தமிழர்களால் பொறையாரில் செயல்படுத்தப்பட்டது பெருமைக்குரியதாகும். பிறகு, தென் மாநிலங்களுக்கு படிப்படியாக அச்சுத் தொழில் வளர்ந்ததாக கூறப்படுகிறது. பொறையாரில் அதிகம் செய்யப்பட்ட நெசுவுத்தொழிலுக்கு நிகராக 18 ஆம் நூற்றாண்டின் அச்சுத்தொழிலும் வளர்ச்சி அடைந்ததாக இருந்துள்ளது.
தரங்கம்பாடி வணிக மையமாகவும், மாவட்ட தலைநகராகவும், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இருந்ததால், அவைகளுக்கு தேவையான பிரிண்டிங் வேலைகள் பொறையாரில் அச்சகங்கள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, பொறையாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சக்திவிலாஸ் போக்குவரத்து நிறுவனத்திற்கு ஓடிய 60-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்காக பயணச்சீட்டு மற்றும் இதர பிரிண்டிங் வேலைகளுக்கு அச்சகங்களை பயன்படுத்திக்கொண்டது. இதை தொடர்ந்து திரையரங்குகளுக்கான திரைப்பட போஸ்டர்கள், டிக்கெட்டுகள் போன்றவற்றை அச்சடிப்பதற்காக அச்சகத்தை நாடியதால் நலிவின்றி அச்சுத்தொழில் செய்யப்பட்டு வந்தது.
படிப்படியாக ஏற்பட்ட கால முன்னேற்றம் காரணமாகவும், நவீன அச்சு இயந்திரங்களின் வருகையாலும் பழமையான அச்சகங்கள் மூடப்பட்டன. திரையரங்குகளும் தொடர்ச்சி யாக மூடப்பட்டதால், அச்சுதொழிலைமட்டுமே நம்பி தொழில் செய்து வந்த அச்சக உரிமையாளர்கள் அதில் பணியாற்றிய ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வேறு தொழிலை கற்றுக்கொண்டு அதை நாடி சென்றுவிட்டனர். தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பழமையான அச்சு எந்திரங்களை எடைக்கு விற்று விட்டனர். இருந்த போதிலும் தற்போது ஓரிரு அச்சகங்கள் மட்டும் பொறையார் பகுதியில் காண முடிகிறது.
நீதி அச்சகம்
சீகன்பால்கு கற்று தந்த அச்சுத்தொழிலை பொறையார் பகுதி இன்றளவும் மறக்காததற்கு சான்றாக, பாரம்பரிய அச்சுத்தொழிலை வளர்த்தெடுக்கும் பொறையார் நீதி அச்சகத்திற்கு நேரடியாக சென்று பார்த்தபோது, சண்முகம், சிவக்குமார், சதீஷ் ஆகியோர் , “எங்கள் தாத்தா காலம் முதல் தலைமுறை தலைமுறையாக அச்சுத்தொழிலை செய்து வருகிறோம். பூர்வீக நிலத்தை விற்று எங்களது தந்தை இந்த அச்சகத்தை 1958 இல் வாங்கியுள்ளார். கணினி மயமான இந்த காலத்தில், பழமையான பலநூறு ஆண்டுகளைகடந்த எந்திரங்களை சலிப்பின்றி வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம்” என்கின்றனர்.
”17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஈகிள் மிஷின். இதில் மர எழுத்துக்களை கொண்டு பிரிண்டிங் வேலைகளை செய்யலாம். அதே போன்று 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அல்பியன் மிஷின், அதன் பிறகு 19 ஆம் நூற்றாண்டில் வந்த டெடில் லெட்டர் பிரிண்டிங் மிஷின்களை வைத்துள்ளோம். இவற்றில் ஈயத்தால் செய்யப்பட்ட எழுத்துக்களை கொண்டும் அச்சடிக்கலாம்.
இந்த 3 வகையான பழமையான மிஷின்களை கொண்டும் தற்போது பணிகளை செய்து வருகிறோம். பாரம்பரிய தொழில் அழியக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் என மனமகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். பொறையாரில் அச்சு அருங்காட்சியகத்தை அரசு சார்பில் அமைத்தால், அதற்காக தாங்கள் வைத்துள்ள எந்திரங்களை தருவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அருங்காட்சியகம்
ஜெர்மனி நாட்டிலிருந்து வந்து மொழி தெரியாமல் கலாச்சாரம் தெரியாமல், 13 ஆண்டுகளே இங்கு வசித்து தமிழை முழுமையாக கற்றுக்கொண்டு, தமிழ்மொழிக்காக உழைத்த சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 300ஆவது ஆண்டான 2006 இல் மத்திய அரசு இந்திய அச்சகத் தந்தை என சீகன்பால்குவை புகழ்ந்து தபால் தலை வெளியிட்டதோடு சரி.
தற்போது, பொறையாரில் அச்சுத்தொழிலை எதிர்வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகத்தை அமைப்பதோடு; கடுதாசி பட்டறை கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வதோடு வரலாற்று நினைவுச்சின்னங்களை அப்பகுதியில் அமைக்க வேண்டுமென பல்வேறுதரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நவீன மையத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள் பாரம்பரிய தொழிலான அச்சுத்தொழிலை பாதுகாக்க பழைய வரலாறுகளை உருவாக்கிய இதுபோன்ற அச்சு இயந்திரங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்வதற்கு பழைய அச்சக எந்திரங்களின் அருங்காட்சியகத்தை பொறையாரில் அமைக்குமா? –
— கணேசன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.