ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்திய ஒரு வித்தியாசமான பாராட்டு விழா !
பாராட்டு விழா மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சிரீதேவி ஹோட்டலில் 23-06-24 மாலை 5 30 மணிக்கு ஒரு வித்தியாசமான பாராட்டு விழா நடைபெற்றது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் படித்த மாணவருக்கு ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனநிலையில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியிருக்கின்றனர் இந்த ஆசிரியப் பெருமக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1981 லிருந்து 1983 வரை +1, +2 படித்த மாணவர்களில் கா.சி. தமிழ்க்குமரன் பிரபலமான இலக்கிய பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இதுவரை இவரது சிறுகதைகள் நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.
1.மாத்திரை, 2.ஊமைத்துயரம், 3.பொலையாட்டு, 4.மந்தைப்பிஞ்சை. இது தவிர சமீபத்தில் ஒறுப்பு என்ற நாவலையும் எழுதி வெளியிட்டார். இந்த எழுத்துக்களில் கவரப்பட்ட அவருடைய ஆசிரியப் பெருமக்கள் சங்கரசுப்பு, சத்திய சாமுவேல், செல்வநாதன், சுபஹான்யா ஆகியோர் இணைந்து கா.சி.தமிழ்க்குமரனுக்கு இந்த பாராட்டு விழாவை நடத்தினார்கள்.
மாலை 5 30 க்கு நிகழ்வு ஆரம்பித்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்திய மதுக்கூர் இராமலிங்கம் நான் இதுவரை மாணவர்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதை பார்த்துள்ளேன். ஆனால் ஆசிரியர்கள் நாற்பது வருடங்களுக்கு பிறகு தங்களிடம் படித்த மாணவருக்கு பாராட்டு விழா நடத்துவது என் வாழ்வில் நான் காணும் புதிய நிகழ்வு என ஆச்சரியப்பட்டு பேசினார்.
பின்னர் ஆசிரியர்கள் புத்தகம் பற்றியும் பள்ளிக்கால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். ஷாஜகான் , சிரிரசா ஆகியோர் வாழ்த்திப் பேசினார். முன்னதாக திரு சேது மணி மாதவன் காவல்துறை ஆய்வாளர் வரவேற்க திரு தினகராஜன் நன்றி கூறினார். இறுதியில் கா.சி.தமிழ்க்குமரன் ஏற்புரை நிகழ்த்த விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களுக்கு உறுதுணையாக தன்ராஜ், சேகர், தினகராஜன் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த