கஞ்சா மயமாகும் பிரபல கல்வி வளாகம் !
கஞ்சா மயமாகும் கல்வி வளாகம் !
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் -க.இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பணம் கொடுத்தால் எந்த வகை போதைப் பொருளும் எளிதில் கிடைத்துவிடும் என்ற அளவிற்கு போதை பொருள் பயன்பாடு எளிதாக்கப்பட்டு விட்டது. குறிப்பாக கஞ்சா போதை பொருள் தற்பொழுது சில்லறை விற்பனையில் மிகப்பெரிய வர்த்தகமாக மாறி இருக்கிறது. 30 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய்க்கே கஞ்சா பொட்டலங்கள் கிடைப்பதாக கூறுகின்றனர். அதே சமயம் அரசாங்கமும், காவல் துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் பதிலளிக்கும் பொழுது கஞ்சா விற்பனையை தடுக்க கடந்த ஆண்டு மட்டும் 12, 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில் திருச்சியின் அழகியல் கல்லூரி என்று அழைக்கப்படும் பிரபல கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா எளிதாக கிடைக்கிறது என்று வந்த தகவலை கொண்டு விசாரிக்க தொடங்கினால், மாணவர்கள் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் கூறியது : ஃபர்ஸ்ட் விளையாட்டா குடிக்க ஆரம்பிச்சோம், பிறகு காசு இருந்தா குடிக்கணும் என்கிற எண்ணம் வந்துச்சு, பிறகு குடிச்சே ஆகணும்னு தோண ஆரம்பிச்சு, இப்ப கஞ்சா வரை வந்து நிக்குது. எல்லாம் ஒரு ஜாலி தான். ஒரு என்டர்டைன்மென்டுகாக தான் இது எல்லாம்.
கஞ்சா உங்கிட்ட எப்படி அறிமுகமானது?
பசங்க எல்லாரும் சேர்ந்து பேசிக்கிட்டு இருக்கும் போது, கஞ்சா அடிக்கலாம்னு ஒருத்தன் சொன்னா, எங்க கிடைக்கும்னு கேட்கும் போது ஆத்துக்கார ஓரமா விக்கிறாங்கன்னு சொன்னா போய் பார்த்தோம், அங்க போன உடனே விக்கிற அண்ணே கூப்பிட்டு கேட்டாரு, 30 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய்க்கே பொட்டலம் கிடைக்குது, அதுவும் கம்மி ரேட்ல கிடைக்கிறதால அடிக்கடி போய் வாங்க ஆரம்பிச்சோம். இப்ப அது பழகி போச்சு. தண்ணி அடிக்கிறதுக்கு செலவு பண்ற காசை விட, கஞ்சா அடிக்க செலவு கம்மி, ஆனா போத நிறைய ஏறும். காலேஜ் போகும்போது கூட சில பசங்க சில நேரத்துல கஞ்சா அடிச்சிட்டு வருவாங்க. காலேஜ் கிரவுண்ட்ல வச்சே அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க இப்ப. என்றார் ஒரு மாணவர்.
மேலும் இந்த பேராபத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு கூட்டு முயற்சியே பிரதான தேவையாக உள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், அரசாங்கம், உள்ளூர் முக்கியஸ்தர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், வியாபாரிகள், பள்ளியில் உள்ள மேலாண்மை குழு என்ற அனைத்து தரப்பினரும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து குடியிருப்பு பகுதிகளில் மாணவர்களின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது. கல்வி நிலையங்களுக்குள்ளும், வெளியிலும் மாணவர்களின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது. எங்கு மாற்றம் தெரிகிறது, எங்கு தவறு நடக்க வாய்ப்பு உள்ளது என்று சங்கிலித் தொடர் போல தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தால் தவறு தொடங்கும் பொழுதே அதை சரி செய்ய வாய்ப்பு ஏற்படும். இந்த கூட்டு முயற்சியோடு சினிமா மோகத்தில் சிக்கியிருக்கும் மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
( தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது கஞ்சா உற்பத்தி செய்வது என்பது மிக மிக குறைவாகவே இருக்க முடியும். அதே நேரம் விற்பனைக்காக இறக்குமதி செய்வது அதிகமாக இருக்கிறது. இறக்குமதியை தடுக்க தீவிர கண்காணிப்பும், விற்பனையை தடுக்க மிக மிகக் கடுமையான நடவடிக்கை தேவை )
மேலும் கூடுதலாக பெற்றோர்கள் தனது மகன், மகளின் அன்றாட செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
போதைப் பொருள் அற்ற மாநிலம்!
போதைப் பொருள் அற்ற கல்வி வளாகம்!
போதைப் பழக்கம் அற்ற மாணவர்கள்!
தொடர் கூட்டு முயற்சி..! என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்….
இது குறித்து நாம் மேலும் விசாரிக்கையில்……
திருச்சியில் அதிக மாணவ – மாணவிகள் படிக்கும் கல்லூரி என்கிற வகையில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவ – மாணவிகள் இங்கு சேர்ந்து படிக்கிறார்கள்.. சமீப காலமாக இந்த கல்லூரி வாசலில் ஹெல்மெட் கேஸ் போடுவதற்கு மட்டும் போலிசார்.. காலையும், மாலையும் வந்து குறிப்பிட்ட அளவு கேஸ் போட்டவுடன் அங்கிருந்து கிளம்புகின்றனர். இந்த பகுதியில் யார் கஞ்சா விற்கிறார் என்று தெரிந்து இருந்தும் இந்த அளவிற்கு வளர விட்டது. லோக்கல் காவல்துறையும், நுண்ணறிவு பிரிவு போலிசும் தான்… இவர்களுக்கு தெரிந்து இருந்தும் வழக்கமாக கேஸ் மட்டும் பதிந்து விட்டு, சகஜமாக விற்பனைக்கு வழி விட்டு விடுகின்றனர்… என்கிறார்கள் மாணவர்களின் நலன் விரும்புவர்கள்… நடவடிக்கை எடுக்குமா ? இந்த கல்லூரி மட்டும் இல்லாதாது, திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், தீவிரமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…