காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி – எளிய மனிதர்கள் – சாதனையாளர்கள் – தொடர் – 1
எளிய மனிதர்கள் – சாதனையாளர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே காலை உணவுத் திட்டத்தைப் பள்ளியில் தொடங்கிய தலைமையாசிரியர் பா.சுமதி – தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு முன்னோடி
திருச்சி, பொன்மலையை அடுத்து அம்பிகாரபுரத்தில் இரயில் நகர் உள்ளது. இங்கு இரயில்வேத் துறையில் பயணச்சீட்டு பரிசோதகராய் பணியாற்றிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மகள்தான் பா.சுமதி. இவர் புனித சிலுவைக் கல்லூரியில் இளநிலை ஆங்கிலம் முடித்து, ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார். இளமையிலேயே சமூகத்திற்கு ஏதாவது நம்மால் ஆன ஒரு நல்ல காரியத்தைச் செய்யவேண்டும் என்று விரும்பி மனதில் ஏற்றி வைத்துக்கொண்டார்.
வீட்டினரின் விருப்பப்படியே ஆசிரியைப் பயிற்சி முடித்து முதன்முதலாக திருச்சி எடத்தெருவில் உள்ள யதுகுல சங்கம் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக 1996 முதல் பணியாற்றி வந்தார். 1997ஆம் ஆண்டு சுமதிக்கு நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு பெல் சாரதா நடுநிலைப்பள்ளிக்கு 2004 ஆம் ஆண்டு விருப்ப மாறுதலில் வந்தார். இவர் வாழ்க்கைத் துணைவர் செல்வராஜ். திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள். ஒருவர் பூஜாகாவேரி, இவர் திருமணம் முடித்து தற்போது திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் முதுநிலை வேதியல் படித்து வருகிறார். மற்றொருவர் ஹரிப்பிரியா, இவர் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் வணிகவியல் இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறார்.
சாரதா நடுநிலைப் பள்ளியில் 2008ஆம் ஆண்டில் இவர் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுக் கொண்டார். காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தற்போது தான் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் தான் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பே சாரதா நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது என்பது ஆச்சரியமான செய்திதான். இதை தலைமையாசிரியர் சுமதி எவ்வாறு தொடங்கினார் என்று அவரிடம் கேட்டோம்.
அவர் அங்குசம் இதழிடம், “எங்கள் பள்ளியின் மாணவர்கள் அனைவரும் துவாக்குடி மலையில் கல்லுடைக்கும் வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகள் ஆவர். தினந்தோறும் நடைபெறும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களில் சிலர் தொடர்ந்து மயக்கமடைவர்.
திங்கட்கிழமை கொடியேற்றம் நடைபெறும் போது இந்நிகழ்வு அதிகமாக காணப்படும்.காரணம் மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் வருகை தருவதே என்பதை கண்டறிந்தோம்.
மதியம் சத்துணவு மட்டுமே வழங்கப்படும் எங்கள் பள்ளியில் காலை உணவு தருவதற்கு ஆசிரியர்கள் கூடிமுடிவு செய்தோம். அப்போதைய பள்ளிச்செயலர் S.மணி சாரின் ஊக்கமும், முயற்சியும் எங்களுக்கு பெருந்துணையாக இருந்தது.
முதன்முதலில் குருணைக் கஞ்சியாகக் காலை உணவு வழங்கப்பட்டு தற்போது ரவை உப்புமா, சேமியா கிச்சடி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் இவற்றோடு உருளை வறுவல் , மாங்காய் ஊறுகாய், பயறு, சுண்டல் இவைகளுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
நடைமுறைப்படுத்துவதில் பலவிதமான இடையூறுகள் இருப்பினும் காலை உணவு கடந்த 12 ஆண்டுகாலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து எந்தத் தடையும் இல்லாமல் செயல்படுத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்.
காலை உணவுத் திட்டத்தை செயலர் மணி சார் முதன்முதலில் பள்ளி நிதியிலிருந்து நடத்தினார். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட எங்கள் தபோவன நிர்வாகம் இன்றுவரை நன்முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
பெல் நிர்வாகம் ஆதவுடன் எங்கள் சுவாமிஜிகளிடம் தேவைகளைக் கேட்டபோது, எங்கள் சாரதா பள்ளியின் விளிம்பு நிலை மாணவர்களுக்கே அனைத்தும் செய்யுங்கள் என அன்புடன் கூறினார்.
அதனால் அப்போதைய பெல் மனிதவள நிர்வாக மேலாளர்கள் முரளி, சமது, பள்ளி ஒருங்கிணைப்பாளர் மனோகரன், பெல் INTUC தொழிற் சங்கத் தலைவர் கல்யாண்குமார் மற்றும் நண்பர்கள், பெல் தொழிலாள நண்பர்கள் ராஜா, இளமதி 2024-2025 ஆண்டில் தன்னார்வலர்கள் ரகுராம் மற்றும் ரகுராஜ் ஆகியோர் இணைந்தனர்.
பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பலரும் காலை உணவிற்காகத் தேவைப்பட்ட நிதியை அள்ளி தந்தார்கள்.
இந்த கல்வியாண்டின் (2024-25) காமராஜபுரம் SBI கிளை மேலாளர் வினோத் கண்ணா மற்றும் அவரது மனைவி தீபலெட்சுமி இருவரும் இணைந்து எங்கள் பள்ளி மாணவர்களின் காலை உணவிற்கு நிதி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். காலை உணவுத் திட்டம் தற்போதுவரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது” என்று முடித்துக்கொண்டார்.
தொடர்ந்து நாம், அரசு தற்போது காலை உணவுத் திட்டம் கொண்டு வந்துள்ளதால் உங்கள் சிரமம் குறையும்தானே ? என்று கேட்டோம், அதற்குச் சுமதி,“எங்கள் சாரதா பள்ளி என்பது அரசுப் பள்ளி அல்ல, அரசு உதவிப்பெறும் பள்ளி. அதனால் இந்தக் கல்வியாண்டில் தான் அரசின் காலை உணவுத் திட்டம் எங்களுக்கும் செயல்படுத்துவர்.
ஆனால் அதற்கு நாங்கள் தனியாக சமையல் அறை கட்டவேண்டும். பிள்ளைகள் ஒன்றிணைந்து உணவு உண்ண வட்டமேசை வைக்கவேண்டும் என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. அந்த இரு விதிகளையும் நிறைவேற்றி அரசின் சார்பிலான காலை உணவுத் திட்டத்தை எங்கள் பள்ளியிலும் தொடர்வோம். இதுவரை அரசின் காலை உணவுத் திட்டம் எங்கள் பள்ளியில் தொடங்கப்படவில்லை என்பதால், நாங்கள் பழையமுறைப்படி மாணவர்களுக்குக் காலை உணவு தொடர்ந்து வழங்கிவருகின்றோம்” என்றார்.
“அன்னசாத்திரம் ஆயிரம் கட்டுதல், ஆலயம் பதினாராயிரம் கட்டுதல் என்பதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே உலகின் மிகப்பெரிய புண்ணியம்” என்று முண்டாசு கவிஞன் பாரதி குறிப்பிடுவார்.
எழுத்தறிவு பெறவந்த ஏழைக்குழந்தைகள் காலை உணவு இல்லாமல் எப்படி எழுத்தறிவு பெறுவார்கள் என்பதைச் சிந்தித்து தலைமையாசிரியர் பா.சுமதி எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது மட்டுமல்ல, இன்றைய தமிழ்நாட்டு முதல் அமைச்சர் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்க முன்னோடியாக இருந்துள்ளார் என்பதை எண்ணும் போது தலைமையாசிரியர் பா.சுமதி அவர்களைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், அவருக்குத் தமிழக அரசு பெண் பேராளிகள் சார்பில் வழங்கப்படும் விருதினை, இவருக்கு வழங்கி அவரின் செயல் தமிழகம் முழுவதும் அறியப்படவேண்டும்.
எளிய மனிதர்களின் சாதனைகள் நம்மை வியக்கவைக்கின்றதுதானே….. ? எளியவர்களின் சாதனைதான் வரலாற்றில் மகத்தான சாதனைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் பா.சுமதியின் சாதனையும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறும். வாழ்த்துவோம்.
-ஆதவன்
[…] […]