இரண்டாண்டு பிரச்சினை – இரண்டே நொடியில் போகிற வழியில் தீர்த்து வைத்த சீனியர் அமைச்சர் !
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏரி, குட்டைகளை தூர்வாரியதற்கான ஒப்பந்த தொகையை வழங்காமல்
இரண்டாண்டு பிரச்சினை – இரண்டே நொடியில் … போகிற வழியில் தீர்த்து வைத்த சீனியர் அமைச்சர்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏரி, குட்டைகளை தூர்வாரியதற்கான ஒப்பந்த தொகையை வழங்காமல், இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக கூறி, ஒப்பந்ததார்கள் இருவர் திடீரென்று தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சி – துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தான் மேற்கொண்ட பணிகளுக்கான ஏழு இலட்சம் ரூபாய் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை என்று சொரத்தூரை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலரும் ஒப்பந்த்தார்ருமான ரமேஷ் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 6.5 இலட்சம் பாக்கி என்று குற்றஞ்சாட்டி, ஒன்றிய அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் பத்துக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை விழுங்கி ஊராட்சி அலுவலர்களை கதி கலங்க வைத்தனர்.
துறையூர் போலீசார் தலையிட்டு அவ்விருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உரிய சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர். இருவருமே அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என்பதால், துறையூர் தெற்கு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமையில் துறையூர் பாலக்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்த இந்த மறியல் போராட்டத்தில், அவ்வழியே சேலம் இளைஞரணி மாநாட்டு தொடர்பான பணிகளை மேற்பார்வையிட்டு திரும்பிய அமைச்சர் கே.என்.நேருவின் வாகனமும் மாட்டிக்கொண்டது.
என்ன, ஏது என்று விசாரித்த அமைச்சர் கே.என்.நேருவிடம், ஒப்பந்த பணிகளில் எந்தவிதமான புகாரோ, குறைபாடுகளோ சுட்டிக்காட்டாத நிலையில், ஒப்பந்தபடி செய்து முடித்த வேலைக்கான தொகையை இரண்டு ஆண்டுகளாக செட்டில் செய்யாமல் இழுத்தடித்த ஒன்றிய அலுவலர்களின் பாரபட்ச அணுகுமுறை உள்ளிட்ட தங்களது குறைகளை கொட்டித் தீர்த்தனர்.
அவர்களின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து அமைச்சர் கே.என்.நேரு, ஓரிரு நாளில் பணத்தை செட்டில் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என அவர் அளித்த உத்திரவாதத்தையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
அரசியலில் நேரெதிரான அதிமுகவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இரண்டாண்டு பிரச்சினையை இரண்டே நொடியில் தீர்த்து வைத்து, ஸ்கோர் செய்திருக்கிறார் சீனியர் அமைச்சர் கே.என்.நேரு.
– ஜோஷ்,
துறையூர்.