பெரம்பலூரில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பள்ளிச்சிறுவர்கள் ! குற்றவாளியை பாதுகாக்கும் போலீசார் !
பெரம்பலூரில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பள்ளிச்சிறுவர்கள் ! குற்றவாளியை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்த போலீசார் ! பெரம்பலூரில் பள்ளி மாணவர்கள் இருவர் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிச் சிறுவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய ஆசாமியை பொதுமக்கள் நையப்புடைத்து மீது போலீசாரிடம் ஒப்படைத்தும்கூட, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அவர்கள். ஒருவனுக்கு வயது 16 மற்றொருவனுக்கு வெறும் 13. கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார்கள்.
போட்டியில் பங்கேற்ற பள்ளி அணியில் இருவரும் மாற்று வீரர்களாக பங்கேற்றிருக்கின்றனர். தங்களது அணி தோல்வியை தழுவியதையடுத்து, காலை 11 மணியளவில் ஊர் திரும்ப காத்திருக்கின்றனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் (TN 68 Q 6913 – TVS Star City) வந்த கிருஷ்ணகுமார் என்பவர் பள்ளிச்சிறுவர்கள் இருவரிடமும் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.
போகும் வழியில் ஊரில் இறக்கிவிட்டுச் செல்கிறேன் என்பதாக அப்பள்ளிச் சிறுவர்களிடையே பேசியிருக்கிறார்.
54 வயதானவர் என்பதாலும் தங்கள் மீது இரக்கப்பட்டு இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார் என்பதாகவும் நம்பி ஏறிச் சென்றுள்ளனர். மேலும், ஃபுட்பால் நன்றாக விளையாட, நன்றாக படிக்க கோச்சிங் தருகிறேன் என்றும் கூறி கீழக்கணவாயில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார், கிருஷ்ணகுமார்.
வீட்டிற்கு சென்ற நேரம் கீழக்கணவாய் கிராமம் வெறிச்சோடியிருந்திருக்கிறது. பெரும்பாலோனோர் நூறுநாள் வேலை மற்றும் விவசாய வேலைகளுக்கு சென்றிருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது வீட்டில் வைத்து அச்சிறுவர்கள் இருவரிடமும் பாலியல் ரீதியில் அத்துமீறி கட்டாய வன்புணர்வில் ஈடுபட்டிருக்கிறான் கிருஷ்ணகுமார். தங்களிடம் இவ்வாறு நடந்துகொள்வார் என்பதை சற்றும் எதிர்பாராத அப்பள்ளிச் சிறுவர்கள் இருவரும் கூச்சலிட்டிருக்கின்றனர்.
அச்சிறுவர்களின் கூக்குரல் கேட்டு அலறியடித்து ஓடிவந்திருக்கின்றனர், நூறுநாள் வேலை முடிந்து வீடு திரும்பிய அக்கிராமத்தினர். அச்சிறுவர்கள் வழியே நடந்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்த கிராம மக்கள் கிருஷ்ணகுமாரை வெளியே இழுத்துப் போட்டு அடித்திருக்கின்றனர். அவனது கை கால்களை கட்டி போட்டுவிட்டு போலீசுக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சற்றுநேரத்தில் வந்த பெரம்பலூர் போலீசாரிடம் விசயத்தை சொல்லி கிருஷ்ணக்குமாரையும் ஒப்படைத்திருக்கின்றனர். போலீசாரும் அவனை பெரம்பலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில், பள்ளிச்சிறுவர்கள் இருவரையும் பத்திரமாக அவர்களது வீட்டிலேயே இறக்கிவிட்டுச் சென்ற போலீசார் கிருஷ்ணகுமாரையும் பத்திரமாக வழியனுப்பி வைத்திருக்கின்றனர். வழக்கு எதுவும் பதிவு செய்யாமலேயே.
கிருஷ்ணகுமாரின் சொந்த ஊர் கோட்டாத்தூர் என்கிறார்கள். 54 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வந்திருக்கிறார். தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு மாணவர்களை கமிஷன் அடிப்படையில் சேர்த்துவிடும் வேலையை பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறார். இதற்காகவே, சொந்த ஊரான கோட்டாத்தூரை விட்டு, கீழக்கணவாயில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.
தங்களது கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துவிடும் நபர் என்பதாலும், சொந்த சாதிக்காரன் என்பதாலும் கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து “வெயிட்”டான நபர் ஒருவர் ”பவர்”ஃபுல் ஆபிசரிடம் பேச, அவரும் லோக்கல் ஸ்டேஷனுக்கு பேச விசயம் வெளியே கசியாதபடிக்கு காதும் காதும் வைத்தாற்போல முடித்திருக்கிறார்கள்.
கீழக்கணவாய் கிராம மக்களே கண்டித்து கை காலை கட்டிப்போட்டு போலீசிடம் ஒப்படைத்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் கிருஷ்ணகுமாரை விடுவித்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதுவும் பள்ளிச்சிறுவர்கள் பாலியல் ரீதியில் வன்புணர்வுக்கு ஆளாக்கிய விவகாரத்தில் இவ்வளவு அசட்டையாக நடந்திருக்கிறார்கள் என்பது வேதனையை கூட்டியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்தறிய பெரம்பலூர் போலீசு இன்ஸ்பெக்டரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை ஏற்று அவர் பதிலளிக்கவில்லை. அவர் தரப்பில் பதில் அளித்தால் வாசகர்களுக்கு பதிவிடவும் தயாராக உள்ளோம்..
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா அரசு ?
– அங்குசம் புலனாய்வுக்குழு