சோதனைகளை சாதனையாக்கி சாதித்து உலக புகழை எட்டி பிடித்த பதினோராம் வகுப்பு மாணவன் பிரனேஷ் !
சோதனைகளை சாதனையாக்கி தனது விடாமுயற்சியின் மூலம் சாதித்து தற்போது உலக புகழை எட்டி பிடித்துள்ளான் பதினோராம் வகுப்பு மாணவன் பிரனேஷ்.’ சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்கள் முனிரத்தினம் – மஞ்சுளா தம்பதியினர்.தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இளைய மகனான பிரனேஷ் தற்போது தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தை முனிரத்தினம் காரைக்குடியில் உள்ள கடையில் கணக்காளராக வேலை பார்த்து வரும் நிலையில்,தாய் மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராக இருந்து வருகிறார். ஏழ்மை நிலையிலேயே சிறு வருமானத்தில் வாழ்க்கையை சுமந்து வந்த இத்தம்பதியினர் ஆறு வயதில் தனது இளைய மகன் பிரனேஷின் சதுரங்க விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்டு அவனுக்கு ஊக்கம் அளித்தனர்.
சிறு சிறு போட்டிகளில் கலந்து கொண்டு எதிர் போட்டியாளர்களை திணறடிக்கும் புத்தி கூர்மையை கண்டு வியந்த பயிற்சியாளர்கள், பிரனேஷை மண்டலம்,மாவட்டம், பின்பு மாநில அளவில் விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.ஆனால் வறுமை நிலை காரணமாக சாதனை செய்யக்கூடிய வாய்ப்புகள் பல கட்டங்களில் தள்ளிப்போனது. இருப்பினும் மனம் தளராத பெற்றோர்கள் தங்களுக்கு கிடைத்து வந்த சொற்ப வருமானத்திலும் மகனுடைய சாதனை முயற்சிகளுக்கு பக்கபலமாய் இருந்து வந்தனர்.

பிரனேஷின் திறமையை கண்ட பிரனேஷ் படித்து வந்த ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன் பிரனேஷ் படிப்பு செலவை தானே ஏற்று படிப்பை தடை இல்லாமல் பார்த்துக் கொண்டார். இதனால் பெற்றோர்களின் பாரம் மிகவும் குறைந்தது. தாளார் சுவாமிநாதன் போன்ற சிலரின் பங்களிப்புடன் பிரனேஷை பல உயர்தர போட்டிகளில் பங்கேற்க செய்தனர் பெற்றோர்கள்.
தற்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் பிரனேஷிற்கு ஸ்வீடனில் நடைபெற்ற கிராண்ட் சலாம் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாமல் போட்டியில் கலந்து கொள்வது கேள்விக்குறியானது. பின்பு பள்ளியின் தாளாளர்,மற்றும் பயிற்சியாளரின் பெரும் முயற்சிக்கு பிறகு.பிரனேஷ் மட்டும் தனியாக ஸ்வீடன் சென்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் மிகப் பெரிய பெருமையை பெற்று தந்துள்ளார்.

வறுமையிலும் பல சோதனைகளை கடந்து, தனது மகனின் சாதனை கனவு நனவாக வித்திட்ட முனிரத்தினம் -மஞ்சுளா தம்பதியினரும்,ஏழ்மை நிலையிலும் பெற்றோர்களின் கனவை நனைவாக்கிய மாணவன் பிரனேஷ்சும் போற்றுதலுக்குரியவர்களே.
– பாலாஜி