அங்குசம் பார்வையில் ‘அக்யூஸ்ட்’
தயாரிப்பு : ஏ.எல்.உதயா, ‘தயா’ என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல், டைரக்ஷன் : பிரபு ஸ்ரீனிவாஸ். ஆர்ட்டிஸ்ட் : உதயா, ஜான்விகா கலாகெரி, அஜ்மல், சாந்திகா, பவன், தயா பன்னீர்செல்வம், யோகிபாபு, சுபத்ரா, தீபா பாஸ்கர், டி.சிவா, பிரபு ஸ்ரீனிவாஸ், டைரக்டர் பிரபு சாலமன். ஒளிப்பதிவு : ஐ.மருதநாயகம், இசை : நரேன் பாலகுமார், எடிட்டிங் : கே.எல்.பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் : ‘ஸ்டண்ட் சில்வா, பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
சேலத்தில் கொலை செய்யப்படுகிறார் அரசியல் கட்சி ஒன்றின் மாவட்டத் தலைவர் பவன். இந்தக் கொலை வழக்கிற்காக சென்னை புழல் ஜெயிலிலிருக்கும் அக்யூஸ்ட் உதயாவை, சேலத்திற்கு போலீஸ் வேனில் கொண்டு போகிறார்கள். போகும் வழியிலேயே உதயாவைப் போட்டுத் தள்ள போலீசும், இன்னொரு ரவுடிக் கும்பலும் தனித்தனியாக களம் இறங்குகிறது. சேலம் கோர்ட்டுக்கு உயிருடன் உதயா போய்ச் சேர்ந்தாரா என்பதற்கு விடை சொல்வது தான் இந்த ‘அக்யூஸ்ட்’டின் க்ளைமாக்ஸ்.
படம் ஆரம்பிக்கும் போதே அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் படுபயங்கரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அந்த பஸ்ஸிலிருந்து உதயாவும் கான்ஸ்டபிள் அஜ்மலும் படுகாயத்துடன் வெளியே வருகிறார்கள்.
இது ஏன் நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? யார் நடத்தியது? சில மாதங்களுக்கு முன்பு…. என ஃப்ளாஷ் பேக்கை ஆரம்பிக்கிறார் டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸ். அதன் பின் க்ளைமாக்ஸ் வரை ஃப்ளாஷ்பேக் தான், ஃப்ளாஷ்பேக்குக்குள் பல ஃப்ளாஷ்பேக்குகள், அதற்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் என நம்மை சுத்தலில்விட்டு அடிக்கிறார் டைரக்டர். இப்படியொரு ஃப்ளாஷ்பேக் படத்தை சமீபத்தில் நாம் பார்த்ததேயில்லை. படத்தில் அரசியல் கட்சித் தலைவர் டி.சிவாவிற்கு உதவும் கெட்ட போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார் டைரக்டர்.
கன்னடத்தில் ஏழெட்டுப் படங்களை டைரக்ட் பண்ணிய நம்ம தமிழர் தான் பிரபு ஸ்ரீனிவாஸ். ஆனால் தமிழில் முதல் படமான இந்த ‘அக்யூஸ்ட்’டில் ரொம்பவே திணறி, நம்மையும் திணறடிக்கிறார். உயிருக்குப் பயந்து உதயாவும் அஜ்மலும் யோகிபாபு லாட்ஜுக்குள் அடைக்கலமான பிறகு வச்சிருக்கீகளே ஒரு பிரியாணி குத்துப்பாட்டு, ரசிகர்களுக்கு முரட்டுக்குத்து, கும்மாங்குத்து டைரக்டரே..
ஹீரோ உதயா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆச்சாம். ஆனா இன்னும் அதே டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் தான். கொஞ்சமும் உயர்வில்லை, தாழ்வில்லை நிலையில் தான் அக்யூட்டிலும் வருகிறார். இவரு பரவாயில்லை போலிருக்குன்ற ரேஞ்ச்ல தான் கான்ஸ்டபிளாக வரும் அஜ்மல் இருக்கார்.
ஹீரோயின் ஜான்விகாவும் கன்னடத்திலிருந்து இறக்குமதியாகியுள்ளாராம். உதயாவைக் காதலித்துவிட்டு, கந்துவட்டி தயா பன்னீர்செல்வத்தைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தைக்கும் தாயாகிறார். ஒன்றிரண்டு சீன்களில் நடிக்க முயற்சித்துள்ளார், லைட் கிளாமரிலும் இறங்கியுள்ளார். ஆனால் படத்தின் மோசமான திரைக்கதையால் எதுவுமே எடுபடல.
படத்தில் கடுமையான உழைப்பாளிகள் என்றால் ஸ்டண்ட் சில்வாவும் கேமராமேன் ஐ.மருதநாயகமும் தான். பஸ்ஸுக்குள் நடக்கும் ஆக்ஷன் அதகளம், அதன் பின் நடக்கும் படுபயங்கர விபத்து, இதில் சில்வா சிலிர்க்க வைக்கிறார். பகலிலும் இரவிலும் நடக்கும் சேஸிங் சீக்வென்ஸில் மருதநாயகம் மிரட்டியுள்ளார். எப்பா மியூசிக் டைரக்டரு தம்பி, தமிழ் சினிமாவெல்லாம் பார்க்குற பழக்கமில்லையாப்பா? அந்தக் காலத்து ஸ்டேஜ் டிராமாவுக்கு வாசிக்கிற மாதிரியே வாசிச்சிருக்கியேப்பா.
க்ளைமாக்ஸ்ல கள்ளக்காதல், கொலை, தற்கொலைன்னு தினத்தந்திய படிச்ச மாதிரி ஆகிப்போச்சு. கொடுமைடா சாமீ…
‘அக்யூஸ்ட்’ ஆபரேஷன் ஃபெயிலியர், பேஷண்டும் டெட்.
— மதுரை மாறன்