தயாரிப்பாளர்கள் சங்கம், தலையில்லாத முண்டம் ‘அக்யூஸ்ட்’ உதயா ஆவேசம்!
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன்ஸ், மை ஸ்டுடியோஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில், பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், உதயா ஹீரோவாக நடித்த ‘அக்யூஸ்ட்’ இந்த ஆகஸ்ட்.01-ஆம் தேதி ரிலீசானது. மூன்று வாரங்களைக் கடந்தும் தமிழ்நாட்டின் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியான உதயாவும் தயாரிப்பாளர்களும் மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்வை கடந்த 15-ஆம் தேதி சென்னை பரணி ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னீரும் டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸும் மீடியாக்களின் பேராதரவுடன் மக்களைச் சென்றடைந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன், இதே டீம் அடுத்த படத்திலும் இணையும் சேதி விரைவில் வெளியாகும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
படத்தில் நடித்த நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
கடைசியில் மைக் பிடித்த ஹீரோ உதயாவின் பேச்சில் ஆவேசமும் ஆதங்கமும் பொங்கியது.
“உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. இனிமேல் என்னால் இதுபோல் உழைக்க முடியுமா என நினைக்கும் அளவுக்கு சோர்வடைந்தேன். ஆனால் அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, இப்போது உங்கள் முன் நிற்கிறேன். எனது நண்பர்களின் உதவியுடன் இப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் நாங்கள் பட்டபாடு இருக்கே, அதை எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆகஸ்ட்.01-க்கு முன்பாக ஒரு தேதியை முடிவு செய்து தியேட்டர்களையும் புக் பண்ணிட்டோம். ஆனால் ஒரு கும்பல் நேரடியாக மிரட்டியது, ஒரு சிலர் கூட இருந்தே குழி பறித்தார்கள்.
அப்படிப்பட்ட கும்பலால் பல நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் எங்களுக்கே இந்த கதின்னா, புதுத் தயாரிப்பாளர்களின் கதியை நினைச்சுப்பாருங்க. என்னதான் எனக்கு தன்னம்பிக்கை இருந்தாலும் சில கடினமான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இப்போது தமிழ் சினிமா, ஒரு சிலரின் கைப்பிடிக்குள் போய்விட்டது. இதைத் தட்டிக்கேட்க வக்கில்லாமல் தத்தளிக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நான் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன்.
கேயார், இராம.நாராயணன், இப்ராஹிம் ராவுத்தர் போன்றவர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது வலுவாக இருந்தது. உறுப்பினர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது. ஆனால் இப்போதிருக்கும் சங்கமோ தலையில்லாத முண்டம் போல் இருக்கு. தண்டத்துக்கு செயல்படுது. அதனால் இனிமே எந்த சங்கத்திலும் எந்தப் பதவிக்கும் நான் போட்டியுடமாட்டேன். நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருக்கப் போறேன்.
இவ்வளவு வேதனைகள், சோதனைகளைக் கடந்து இந்த ‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற்றதற்கு காரணமே 25 ஆண்டுகளாக என்னை ஆதரிக்கும் மீடியாக்களும் மக்களும் தான். அதே போல் தியேட்டர் ஓனர்களும் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவளித்தனர். எனவே இப்படத்தின் வெற்றிக்கு இந்த மூவருமே காரணம்” என ரொம்பவே ஆவேசமாக பேசி ஆசுவாசமானார் ஜேசன் ஸ்டுடியோஸ் ஓனரும் ‘அக்யூஸ்ட்’ ஹீரோவுமான உதயா.
— மதுரை மாறன்