எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )
கண்ணெதிரே போதிமரங்கள்! ( அறியவேண்டிய ஆளுமைகள் )
“நீர் ஆயுதம் இல்லாமல் போராடுகிறது; ஆனால் அது எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது” என்று வாசித்த நினைவுண்டு. எதுவானாலும் அதை எதிர்த்துத் தன் இலக்கிற்காகப் பயணிக்கும் திராணியும், தினாவெட்டும் கொண்ட நீர்ப் பெருக்கிற்கு நடுவே ஒரு அணைகட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல!
அப்படி எழுப்பப்படும் திறன்மிக்க ஒரு அணைக்கே தடுப்பு ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒரு பெண் இருக்கிறார்… தொடர்ந்து இயங்குகிறார். பெண் இப்படித்தான் வாழவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளையும், வழக்கமான வரையறையையும் நொறுக்கிக் களம் காணும் பெண் அவர்.

- இவ்வளவுதான்” என்று சொல்லிவிட இயலாத அளவுக்கு எளிய மக்கள் மீது கொண்ட அக்கறை.
- உதிரத்தோடு கலந்து போன மன உறுதி.
- போராட்டத்திற்கான துடிப்பு.
- எளிமை வேகம் போராட்டக் குணம் – தைரியம்…
இப்படி எண்ணற்ற ஆளுமையும், மன உணர்வும் பிணைந்துபோன புரட்சிப் பறவை அவர். எந்த அரசும் மக்கள் விரோதப் போக்கைக் கையில் எடுக்கும்போது அரசை மிரள வைக்கிற கனல் அவர். “நர்மதா பச்சாவோ அந்தோலன்” என்ற அமைப்பை மக்களோடு நின்று வழிநடத்திச் செயல்படுத்திக் கொண்டுள்ள 55 வயது சமூக, அரசியல் போராளிதான் அவர். அந்த நெருப்புத் துண்டின் பெயர் மேதா பட்கர்.

இவர் சமூகப் போராளி என்பது சரி. அரசியல் போராளி என்பதும் சரியா என்ற கேள்வி வரலாம்.
“மாற்றத்திற்கான குரல் கொடுப்பதும், அதற்காக
வாழ்வதும் தான் உண்மையான அரசியல்” என்று அவரே விடை தருகிறார்.
நர்மதா நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதால் ஏறக்குறைய 246 கிராமங்களில் உள்ள 27,500 குடும்பங்கள் வெளியேற்றப்படும் அபாயம் உருவாகும். வெளியேற்றப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் வாழ்வும், அதற்கான உரிமையும் என்னவாகும்? கேள்விகளோடு தொடங்கியது மேதா பட்கரின் மக்களுக்கான இதயத்துடிப்பு.
- போராட்டம்
- உண்ணாவிரதம்
- பட்டினி
- சிறையடைப்பு என்பதாகவே சுழன்று சுழன்று இயங்குகின்றன மேதா பட்கரின் நாட்கள்.
‘நர்மதா நதியின் கரையோரங்களில் என் மக்கள் என்றென்றும் நிரந்தரமாகக் குடியிருப்பார்கள். அந்த ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்” என்ற மேதா பட்கரின் சவால் மாநில, மைய அரசுகளின் மக்கள் விரோத முடிவுகளின் மீது மோதி அவற்றைப் பொடியாக்குகிறது.

எம் மக்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களை, கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்கத்தை அழித்து, அவர்களை ஒன்றுமில்லாதவர்களாக்கி, அவர்களின் வெப்ப வேதனைகளில் கிடைக்கும் மின்சாரம் பயனற்றது என்பதை உலகுக்கு அறிவிக்க 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மேதா பட்கர்.
இருபது நாள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்றம் மூலம் விடிவு ஏற்பட ஆரம்பித்தது. நிரந்தரமான விடிவை நோக்கி மக்களோடு தொடர்ந்து களத்தில் போராடுகிறார் மேதா பட்கர். இவ்வளவு எதிர்ப்பும், போராட்டமும், உறுதியும் கொண்டுள்ள மேதா பட்கரின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதற்கு அவர் இப்படி விளக்கம் கொடுக்கிறார்.
அங்கு மட்டுமல்ல கூடங்குளம், மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் போராட்டங்களிலும் துணிந்து முன்நிற்பவர் மேதாபட்கர். அவர் ஒரு கனல். அவர் ஒரு ஆயுதம். இந்தச் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் புண்களைக் கீறிக் குணப்படுத்தும் கத்தி.

போதிமரமாய் கண்முன்னே நிற்கும் மேதாபட்கர், தம் ஆளுமை பொதிந்த குரலில் இப்படிச் சொல்கிறார். “மரணம் எனக்கு வெகு அருகில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டுதான் பலகாலக் கட்டங்களில் இயங்கி வருகிறேன். அது பழக்கப்பட்டுப் போய்விட்டது. இனி சாவு வந்தாலும் பரவாயில்லை – அதை ஏற்க இப்போதே நான் தயார்!”
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்