திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழாவில் வயதைத் தாண்டிய வெற்றியை உங்கள் வாசலுக்கு அழைத்து வாருங்கள் நடிகர் ஜோ.மல்லூரி பேச்சு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2024 நுண்கலை விழா நடைபெற்று வருகிறது. கல்லூரி துணை முதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் வரவேற்புரையாற்றினார். கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்து சிறப்பு செய்தனர். ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், அலுவலகர்கள்Actor Joe Malluri சங்கத் தலைவர் இளங்கோ சேவியர் ஜோதி மாணவர் பேரவை உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் ஆசியுரை வழங்கி விழாவினைத் தொடங்கி வைத்தார். அவா் தம் உரையில், நமது கல்லூரியின் நோக்கம் உங்களுடைய பல்வேறு விதமான திறமைகளை உங்களுக்குள் கண்டறிந்து அவற்றை வெளிப்படுப்படுத்த வாய்ப்பு அளிப்பதே ஆகும். எனவே , திறமைகளைப் புதைத்து வைக்காதீர்கள். பயன்படுத்துங்கள். இந்த நாட்களை நல்ல முறையிலே பயன்படுத்துங்கள். தொடர்ந்து வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுங்கள் என வாழ்த்தி, தம் உரையை நிறைவு செய்தார்.
கல்லூரியின் முன்னாள் மாணவரும், தொலைக்காட்சிப்புகழ் திருச்சி சரவணக்குமார் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, தம் திறமைகளை அடையாளப்படுத்தி மாணவர்களிடையே உரையாற்றினார். என்னை உலகுக்கு அடையாளப்படுத்தியது இந்தக்கல்லூரி. அந்தக் கல்லூரியில் மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல மன நிறைவையும் தருகிறது. எல்லோராலும் வெற்றி பெற முடியும். ஆனால் நிறைய போராட வேண்டும். அப்படி வெற்றி பெறுவதும், அந்த வெற்றிக்குப் பிறகு நம் கல்லூரியே நம்மை அழைத்து கௌரவிப்பதும் மன நிறைவைத் தரும் என எடுத்துக் கூறினார்.
கும்கி திரைப்படப் புகழ் திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ.மல்லூரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்புரையாற்றினார். அறம் காக்கும் கல்லூரியில் ஒரு அற்புத விழா நடைபெறுகிறது. இந்தச் சமூகத்திற்கு எண்ணற்ற வேர்களையும், விழுதுகளையும் சமைத்துத் தந்த கல்லூரியில் மாணவர்களின் முழுத் திறமைகளை வெளிப்படுத்தும் விழாவில் பங்கெடுப்பது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பண்பட இந்த வளாகத்தைப் பயன்படுத்துங்கள். ஆணும் பெண்ணுமாகத் தோழமைகள் இணைந்து ஆரோக்கியமான உறவில் சமூகத்திற்குப் பலன் தரும் ஆளுமைகளாக உருவாகுங்கள். திறமையான உழைப்பால் முன்னேறுங்கள். இந்த வயதின் பலவீனங்களை வென்று, வயதைத் தாண்டிய வெற்றியை உங்கள் வாசலுக்கு அழைத்து வாருங்கள் எனக் கவிதை நடையில் உரையாற்றினார்.
நிறைவில் மாணவர் பேரவைத் தலைவா் விமல் நன்றியுரையாற்றினார். தொடக்க விழா நிகழ்ச்சிகளை மாணவர் பேரவை உறுப்பினர்கள் பிரசாந்த் மற்றும் போஸ்கோ தொகுத்து வழங்கினர்.
பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள், விளம்பர உருவாக்கம் உள்ளிட்ட பல போட்டிகள் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகின்றன.
இரண்டு நாள்களாக நடைபெறும் இவ்விழாவின் நிறைவு விழாவில் தொலைக்காட்சிப்புகழ் பாடகர் இர்வின் விக்டோரியாவின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. திரைப்பட பின்னணிப் பாடகர் போபால் ராவ் கௌரவ விருந்தினராகவும், திரைப்பட நடிகர் அட்டகத்தி தினேஷ் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்டெப் 2024 நிகழ்வைக் கல்லூரி நுண்கலைக்குழு ஆலோசகர் அருள்முனைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி, மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவா் வெர்ஜின் பிரேகா, முனைவர் அருள் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றனர்.
– ஆதன் & விமல்