நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் நகர்வு – நோட்டிஸ் அடித்து ஒரு விரல் புரட்சி!
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் முகாம்கள் நடைபெறும் சமயங்களில் தங்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் களைக் கொண்டும், கட்சியின் முக்கிய ஊழியர்களை கொண்டும் வாக்காளர்களுக்கு உதவி செய்வார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பூத் வாரியாக ஆட்களை நியமித்து ஆட்கள் சேர்ப்பு மற்றும் திருத்தல் பணிகளில் ஈடுபடும் மக்களுக்கு உதவி செய்வர்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் (நவம்பர் 13) இன்றும், (நவம்பர் 14) நாளையும் மற்றும் நவம்பர் 27,28 ஆகிய இரு தேதிகளிலும் சிறப்பு முகாமை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இன்று முதல் நாள் சிறப்பு முகாமும் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்ற சில பகுதிகளில் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் விஜய் ரசிகர்கள் பலரை வாக்காளர்களாக இணைக்க ஆர்வம் காட்டினர்.
மேலும் ஒருவிரல் புரட்சி என்று நோட்டீஸ்கள் அடித்து விநியோகம் செய்து வருகின்றனர். அதில் 18 வயது ஆகிவிட்டதா நீங்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி வாக்காளர்களாக விண்ணப்பம் செய்யுங்கள் என்றும், அதற்குத் தேவையான ஆவணங்களை குறிப்பிட்டும் நோட்டீஸ்களை அடித்து விநியோகம் செய்து வருகின்றனர்.
இன்று வரை விஜய் தேர்தல் அரசியலை பற்றி நேரடியாக எந்தவித கருத்துக்களையும் கூறாத நிலையில் தற்போதே விஜய் ரசிகர்கள் தேர்தலுக்கான தயாரிப்பு பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை நடிகர் விஜய் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தான் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு முகாம்களிலும் பங்கேற்று வருகின்றனர். இது நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் அரசியலுக்கான முதல் நகர்வு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.