ரூ.83 கோடிக்கு ஏலம் போன நடிகையின் ஹேண்ட் பேக்!
ஒரு பிரபல பிரெஞ்சு – பிரிட்டிஷ் நடிகை ஜேன் பிர்கினுக்காக 1984 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் பை, பாரிஸில் நடந்த சோத்பீஸ் ஏலத்தில் ₹83 கோடிக்கு (சுமார் $10 மில்லியன்) விற்கப்பட்டுள்ளது. தற்போது இது உலகின் மிக விலையுயர்ந்த கைப்பையாக சாதனை படைத்திருக்கிறது.

ஜேன் பிர்கின் என்பவர் ஒரு பிரபல பிரெஞ்சு – பிரிட்டிஷ் நடிகை, பாடகி மற்றும் ஃபேஷன் ஐகான் ஆவார். பிரான்ஸ் திரையுலகில் தனது தனித்துவமான பாணி மற்றும் எளிமையான அழகுக்காக அறியப்பட்டவர். 2023-ல் காலமான ஜேன், “லா பிசின்” படத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவரது ஸ்டைலான தோற்றம் பிரெஞ்சு பாணியின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஒன்பது அரிய பொருள்கள் சேகரிப்பாளர்களிடையே நடந்த போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு தனியார் சேகரிப்பாளர் இந்த பையை €8.6 மில்லியன் ( இந்திய மதிப்பில் சுமார் ₹83 கோடிக்கு) வாங்கியிருக்கிறார். ஆரம்ப விலையாக ஏலம் 1 மில்லியன் யூரோவில் தொடங்கிய நிலையில் கமிஷன் மற்றும் கட்டணங்களுடன் சேர்த்து 8.6 மில்லியனுக்கு இந்த பை இறுதியாக விற்பனையாகியுள்ளது.

இந்த விற்பனை குறித்து சோத்பீஸின் கைப்பைகள் மற்றும் ஃபேஷன் பிரிவு தலைவர் மோர்கன் ஹலிமி கூறுகையில், “இது ஃபேஷன் வரலாற்றில் மைல்கல், ஜேனின் தனிப்பட்ட பயன்பாடு, பையின் வரலாறு, மற்றும் அதன் தனித்தன்மை தான் இதன் மதிப்பை உயர்த்தியுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த 2021-ல் ஒரு வெள்ளை முதலை தோல் பிர்கின் பை ₹4.2 கோடிக்கு விற்கப்பட்டது. தற்போது ஜேனின் இந்த முதல் பிர்கின் பை அந்த சாதனயை முறியடித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.