இடிந்துவிழும் நிலையில் உள்ள விடுதியில் மாணவர்களை தங்க அனுமதிப்பதா?
பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள விடுதியில் மாணவர்களை தங்க அனுமதிப்பதா?
திருச்சி மாவட்டம், டி.வி.எஸ். டோல்கேட் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்திருக்கிறது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி. சுமார் 200 மாணவர்கள் வரையில் தங்கிப்பயிலும் இந்த விடுதி எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பழுதடைந்து கிடக்கிறது.
மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் இந்த விடுதியில் மாணவர்கள் தங்க அனுமதிக்கக்கூடாது என்றும் அதன் அருகிலேயே அமைந்திருக்கும் அண்ணா விளையாட்டரங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் கல்லூரி மாணவர்களுடன் கலெக்டர் ஆபிசில் குடியேற வேண்டியிருக்கும் என்பதாக கோரிக்கை மனு ஒன்றை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருக்கின்றனர் இந்திய மாணவர் சங்கத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) திருச்சி மாவட்ட செயலர் மோகனிடம் அங்குசம் சார்பில் பேசினோம். ”கிராமப்புற பின்னணியிலிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து உயர்கல்விக்காக, அதே பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
சுமார் 1500-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் கல்லூரி என்ற போதிலும், அதில் சரிபாதி மாணவர்கள் தினந்தோறும் தொலைதூரங்களிலிருந்து பயணித்து அன்றாடம் கல்லூரி வந்து செல்கின்றனர். அவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் வெறும் 100 முதல் 150-க்கும் குறைவான மாணவர்களுக்கே விடுதியில் தங்கிப் படிக்க இடம் கிடைக்கும்.
இது தவிர, திருச்சியில் 23 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ; 2 அரசு கல்லூரிகள்; 12 பொறியியல் கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரி ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் தொலைதூர கிராமப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் வகையில் போதுமான விடுதிகளே கிடையாது. பெயரளவிற்கு இயங்கும் விடுதிகளோ, இதுபோன்று பராமரிப்பின்றி மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற சூழலை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதன் அருகிலேயே, அண்ணா விளையாட்டரங்கத்திற்கு சொந்தமான விடுதி ஒன்று பயன்பாடற்று கிடக்கிறது. அந்த விடுதியில் தற்காலிகமாக மாணவர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை முன் வைத்திருக்கிறோம். தவறும் பட்சத்தில் மாணவர்களை அணிதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற வேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ” என்கிறார், அவர்.
குறிப்பாக, இந்த விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களுள் பெரும்பாலோனோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வீட்டுப் பிள்ளைகள்; குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள். இதன் காரணமாகவே, அரசும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டு அவற்றின் பராமரிப்பு விசயங்களிலும் பாரபட்சம் காட்டுகிறதோ என்ற ஐயத்தை எழுப்புவதாக அமைந்திருக்கிறது. தக்க அனுசரணையோடு மாவட்ட ஆட்சியர் அணுக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும்!
– ஆதிரன்.