பெருமைக்குரிய விருதாளர்கள்…!!! புதிய வரலாறு படைத்த புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் !

0

பெருமைக்குரிய விருதாளர்கள்…!!! புதிய வரலாறு படைத்துள்ளது புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம். ஆம். தமிழ்ச் சங்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறும் முன்னரே, ஒரு மாபெரும் “இலக்கிய விருதுகள் 2024” விழா நடத்தி முடித்துள்ளது புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம். தமிழ் எழுத்துலகில் ஆகச் சிறந்த படைப்பாளிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு, அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் 2024 வழங்கி சிறப்புச் செய்துள்ளது.
புதுக்கோட்டை, மகராஜ் மகாலில் பெருந்திரள் வாசகர்கள் மத்தியில் கடந்த 30.04.2024 செவ்வாய்க்கிழமை அன்று விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதற்கும் முன்னதாக அமரர் அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா குறித்து நாம் அவசியம் தெரிந்து கொள்வோம்.

அமரர் அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா
அமரர் அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா

https://businesstrichy.com/the-royal-mahal/

புதுக்கோட்டையின் இனிப்பான அடையாளங்களில் ஒன்று, பேக்கரி மகராஜ். அதன் நிறுவனர் தான் சீனு. சின்னப்பா. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பாமணி கிராமத்தில் 1௦.1௦.1953ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பினை நிறைவு செய்யாமல் தனது பதினாறு வயதில் பேக்கரி வேலைக்குச் சென்று, பேக்கரி தொழில் கற்றுக் கொண்டவர். கடும் உழைப்பினாலும், நேர்மை தவறாத உள்ளத்தினாலும் வாழ்க்கையில் படிப்படியாக உயர்கிறார்.

புதுக்கோட்டைத் தமிழ் சங்கத்தின் தலைவர் தங்கம். மூர்த்தி
புதுக்கோட்டைத் தமிழ் சங்கத்தின் தலைவர் தங்கம். மூர்த்தி

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அன்றைக்கு அவர் நிறுவிய “பேக்கரி மகராஜ்” நிறுவனம் தான், தவிர்க்கவே இயலாத புதுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்றாக ஆலமரம் போல தழைத்தோங்கி நிழல் தந்து வருகிறது. கடும் உழைப்பாளியான சீனு. சின்னப்பா, உழைப்பாளர்கள் தினம் ஆன மே 1, 2௦22 அன்று இயற்கை எய்தி விட்டார்கள். அவரது குடும்பத்தினர்கள் அன்னாரது நினைவினைப் போற்றும் வகையில், அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கிட அன்புடன் இயைந்து வந்தனர்.

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி

தமிழின் எழுத்துலகில் பத்து எழுத்தாளர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் விருதுடன் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் அளித்துப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைத் தமிழ் சங்கத்தின் தலைவர் தங்கம். மூர்த்தி, செயலாளர் மகா. சுந்தர், பொருளாளர் மு. கருப்பையா, தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து, அந்த விழாவினை மிகச் சிறப்பாக நடத்தி நிறைவு செய்துள்ளனர். விழாவின் பெருமைக்குரிய விருதாளர்கள் அனைவர்க்கும் விருதினையும் ரொக்கப் பரிசினையும் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், தனது அன்புக் கரங்களால் வழங்கி விழாவுக்குச் சிறப்பு சேர்த்துள்ளார்.

பெருமைக்குரிய விருதாளர்களை அணிவகுத்து அறிமுகம் செய்திடுவோம்.

வெற்றிச்செல்வன் இராசேந்திரன்.
வெற்றிச்செல்வன் இராசேந்திரன்.

நாவல் ஆசிரியர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன்.

“குளம்படி” நாவல் எழுதிய படைப்பாளி. இது அவரது முதல் நாவல் என்பது மிகுந்த வியப்புக்கும் பெருமைக்கும் உரியது. பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் திட்டப் பொறியாளராகப் பணியாற்றி வருகின்ற இவரது எழுத்தில், புழுதி படிந்த மேய்ச்சல் நிலங்களின் மண் வாசம் இப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது. அந்த மேய்ச்சல் நிலத்தில் ஊடாடும் இடையர்களும் ஆடுகளும் நம் வாசக மனத் திரைகளில் தங்கி விடுகின்றனர். “குளம்படி” நாவலும் நம் மனதில் இறுக்கமாகத் தங்கி விடுகிறது.

புதுகை வெற்றிவேலன்.
புதுகை வெற்றிவேலன்.

மரபுக் கவிதையாளர் புதுகை வெற்றிவேலன்.

“வேலு நாச்சியார் காவியம்” படைத்தவர். புதுக்கோட்டை வன்னியன் விடுதியில் 1946-இல் பிறந்தவர். கற்பனை மற்றும் சொற்புனை வளத்துடன் மரபுக் கவிதைகளை மாண்புறவே யாத்தளித்து உள்ளவர். எதுகையும் மோனையும் துள்ளிக் குதிக்கின்றன. பொற்குடத்துக்குப் பொட்டு வைத்துப் பேரழகு சேர்க்கின்றன அவரது மரபுக் கவிதைகள்.

எழுத்தாளர் சாரோன்.
எழுத்தாளர் சாரோன்.

சிறுகதைத் தொகுப்பு. எழுத்தாளர் சாரோன்.

அவர் எழுதியுள்ள பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு தான் “காரியோடன்”. பேராசிரியர் சாரோன் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குண்டலப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர். பேராசிரியர், முனைவர், ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர் என்று பன்முக ஆற்றல் கொண்டவர். எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் கதைகளில் “கரிசல் மண்ணும் மக்களும்” என்கிற பொருளில் ஆய்வுகள் மேற்கொண்டு நிறைவாக முனைவர் பட்டம் பெற்றவர்.

கவிஞர் கண்மணி ராசா
கவிஞர் கண்மணி ராசா

((@)) கவிதை நூல். கவிஞர் கண்மணி ராசா.

கவிதைகளை விதைகளாக மட்டுமல்லாது கூர் ஆயுதங்களாகவும் ஏந்திட இயலுமா? முடியும் என்கிறார் தனது “என் பெயரெழுதிய அரிசி” எனும் புதுக்கவிதை நூலின் கவிதைகள் மூலமாக. இராஜபாளையத்தின் நூற்பாலைத் தொழிலாளி என்பது, இவரது பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று. தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவர் கவிஞர் கண்மணி ராசா.

நயினார்
நயினார்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஹைக்கூ நூல். கவிதையாளர் நயினார்.

“பொட்டலம்” ஹைக்கூ கவிதை நூல். கவிதையுலகில் சிற்றுளிகளின் கூர்மை கொண்டு தீட்டப்படுபவைகள் தான் ஹைக்கூ கவிதைகள். திருக்குறளுக்கு ஏழு சீர்கள். ஒண்ணேமுக்கால் அடி. ஹைக்கூவுக்கு மூன்று அடிகள். பொட்டில் அறைந்தாற் போல, மனதில் தைத்தல் போல இருக்கையிட்டு அமர்ந்து கொள்பவைகள் தான் இந்த ஹைக்கூ கவிதைகள். கவிஞர் நயினார் பூர்விகம் இராமநாதபுரம். வசிப்பது சென்னை வேளச்சேரி. பகலில் காரோட்டி. இரவுகளில் கற்பனையோட்டி. போகிற போக்கில் அவரது கவிதைகளை “பொட்டலம்” ஆகக் கட்டி நம் மனங்களில் தூக்கிப் போட்டு விரைந்து செல்கிறார் கவிஞர் நயினார்.

 

சுகிதா சாரங்கராஜ்.
சுகிதா சாரங்கராஜ்.

 கட்டுரைத் தொகுப்பு நூல். கட்டுரைகளின் கள ஆய்வு நோக்கில் இயங்கி வரும் எழுத்தாளர்,                    ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ்.

“தண்டனைக் களமாகும் பெண்ணுடல்” அவரது கட்டுரைத் தொகுப்பு நூல். நேரடியாகச் சென்று வந்த ஐம்பது களச் சான்றுகளுடன் கூடிய முப்பத்தியொரு கட்டுரைகள் கொண்ட நூல். “இந்தியாவின் மகள்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்பது மிக மிக முக்கியமானதும், நம் அனைவரது கவன ஈர்ப்புக்கும் உரிய கட்டுரை ஆகும். பட்டுக்கோட்டை அருகே கள்ளம்பள்ளி கிராமத்தில் பிறந்தவர். இதழியலாளர் மற்றும் ஊடகவியலாளர். நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு பொறுப்பாசிரியர்களில் ஒருவர்.

கவிஞர் சாந்தி சந்திரசேகர்
கவிஞர் சாந்தி சந்திரசேகர்

 சிறார் பாடல்கள். கவிஞர் சாந்தி சந்திரசேகர்.

மரபுக் கவிதையாளர். “பாப்பாவுக்கு பறவைப் பாட்டு” என்பது இவரது குழந்தைப் பாடல் நூல். மதுரை வளையங்குளம் கிராமத்தில் வசித்து வருகின்ற இல்லத்தரசி. ஐம்பது பறவைகள் குறித்து ஐம்பது பாடல்களில் குழந்தைகளுக்கும் மிக எளிதில் புரியும்படியாக, குழந்தைப் பாடல்கள் புனைந்துள்ளவர். குழந்தைகள் உலகின் அற்புதக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பின்வரும் தொடர்ச்சியாக, கவிஞர் சாந்தி சந்திரசேகர் குழந்தைப் பாடல் உலகில் இயங்கி வருகிறார் என்றால் அது மிகையல்ல.

ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன்

 தமிழின் இலக்கிய விமர்சகப் பரப்பு. சம காலத்தில் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க விமர்சக எழுத்தாளர்களில் ஒருவர் தான், ந. முருகேசபாண்டியன்.

“மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்” எனும் நூலாசிரியர். முன்னோடிகளில் இலக்கிய விமர்சகர் க.நா.சு. போல, இசை விமர்சகர் சுப்புடு போல நம் காலத்தின் ந. முருகேசபாண்டியன் விமர்சகப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருகிறார். தமிழ் நாவல் வாசிப்பில் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றிடும் ஆவலினை ஒரு கிளர்ச்சியாகவே குறிப்பிட்ட “மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்” நூலில் தூண்டி விடுகிறார் மதுரை சமயநல்லூரில் பிறந்த ந. முருகேசபாண்டியன்.

ஜி.வி. ரமேஷ் குமார்
ஜி.வி. ரமேஷ் குமார்

நேர்காணல் தொகுப்பு நூல். அதன் ஆசிரியர் ஜி.வி. ரமேஷ் குமார்.

நூலின் தலைப்பு “ஆட்சித் தலைவிகள்”. அவர்கள் மன்னர் ஆட்சித் தலைவிகளா? மக்கள் ஆட்சித் தலைவிகளா? அல்ல. அல்ல. ஒரு ஜனநாயக நாட்டின் இந்திய அரசுப் பணியின் ஐஏஎஸ் பொறுப்பில் இயங்குகின்ற “மாவட்ட ஆட்சித் தலைவிகள்” அவர்கள். ஆம். மாவட்ட ஆட்சித் தலைவிகள் பதினைந்து மங்கையரை நேரடியாக நேர்காணல் செய்து, அவர்களின் சாதனைகளை அதற்கானப் போராட்டங்களை “பாடங்களாக”ப் பதிவு செய்து சுவைபட எழுதி வழங்கியுள்ளார் நூலாசிரியர். மதுரை தினமலர் நாளிதழ் பதிப்பின் செய்தி ஆசிரியர் ஜி.வி. ரமேஷ் குமார்.

க. அம்சப்ரியா, செ. ரமேஸ்குமார்
க. அம்சப்ரியா, செ. ரமேஸ்குமார்

 சிறு பொறிகளெனத் தெறிக்கின்ற சிற்றிதழ்கள்.

இந்த வரிசையில் விருது பெறத் தேர்வானது “புன்னகை” சிற்றிதழ். பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து வீசுகிறது “புன்னகை” சிற்றிதழ். 1999 டிசம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து வெளி வருகிறது. சிற்றிதழ் நடத்துவதிலும் அதனை வெளியுலகுக்கு கொண்டு செல்வதிலும் பெரும் போராட்டமே நிகழ்ந்திடும். அதனையெல்லாம் கடந்து தான், தீவிர வைராக்கியத்துடன் இலக்கியச் சிற்றிதழினை வெளிக் கொண்டு வர வேண்டும். அந்த வகையில் புன்னகை சிற்றிதழ் ஆசிரியர்கள் ஆன க. அம்சப்ரியா, செ. ரமேஸ்குமார் இருவரும் பாராட்டுக்கு உரியவர்கள்ஆகிறார்கள். இனி வரும் காலங்களில் எல்லாம் இலக்கியச் சிற்றிதழ்களுக்கான முன்னோடியாக “புன்னகை” தமிழ் வாசக நெஞ்சங்களில் படர்ந்து கொண்டிருக்கும்.

“புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதற்குள்ளாகவே, இத்தனைச் சீரும் சிறப்புமாக இலக்கிய விருதுகள் வழங்கும் விழா ஒன்று நடைபெறுவது மனதுக்கு மிகவும் மகிழ்வானதாகும். படைப்பாளிகளுக்கு இதுபோன்ற விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் பாராட்டுகளும் அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும். அவர்களை உற்சாகப்படுத்தும்.

இதன் மூலமாக அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் குடும்பம் மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்.” எனக் குறிப்பிட்டார் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்.

கட்டுரை – ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.