ஆதிபராசக்தியின் மறு அவதாரம் (!) அன்னபூரணிக்கு அடுத்த கல்யாணம் !
நவம்பர் 28, 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம். அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூறுகளால், என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும் என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெறுப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் , நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன்” என்பதாக அறிவித்திருக்கிறார், ஹைடெக் சாமியாரிணி அன்னபூரணி.
மேலும், “அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும். என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை. என்றும் மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன்.
இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்,’’ என்பதாகவும் தனது முகநூல் பக்கத்தில் அருள் வாக்கு பாலித்திருக்கிறார், அன்னபூரணி.
அன்னபூரணிக்கு இந்த திருமணம் 3- வது திருமணம். இதற்கு முன்பு 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் திருமணம் சங்கருடன். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு கணவர் “சங்கர் ” மற்றும் குழந்தையை விட்டு பிரிந்தார். பிறகு 2-வதாக வேறோரு பெண்ணின் கணவரான “அரசு ” என்பவரை திருமணம் செய்து ஈரோட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அரசு மர்மமான முறையில் இறந்துவிட, செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலையில் அன்னபூரணி அரசு அம்மன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது “ரோஹித்” என்பவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
யார் இந்த ரோஹித் ?
வேறு யாருமில்லை, அன்னபூரணிக்கு எடுபிடியாக இருந்து அவரையும், அவரது ஆலயத்தையும் நிர்வகித்து வந்தவர். அன்னபூரணி சிக்கல்களில் சிக்கும்போதெல்லாம், ஊடகங்களில் அதிகம் அடிபட்ட பெயர் தான் ரோஹித். அவரை மணந்து, எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அன்னபூரணி.
இந்த விவகாரம் குறித்து, திருவண்ணாமலையை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகி பழக்கடை நடேசனிடம் பேசினோம், “ஈரோட்டில் வசித்து வந்தபோது அன்னபூரணியின் கணவர் அரசு எப்படி இறந்தார் என்பது இப்போது வரையில் மர்மமாகவே உள்ளது. கொங்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கொடுத்த ஐடியாவில்தான் தற்போது ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார்.
எந்த உழைப்புமின்றி வசதி, மரியாதை, சுகபோகங்களை அடைய தங்களது மோசமான பிண்ணனி கொண்ட பழைய வாழ்க்கையை மறைத்து , ஜோதிடர், அருள்வாக்கு, தாயத்து, தகடு, மந்திரம், ஏவல், பில்லி சூனியம், தனவசியம், ஆவியுலகத் தொடர்பு என இந்த பகல் வேஷ பாவிகளை , விழுந்து விழுந்து வணங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் போலிச் சாமியார் எனும் திரைப்படம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். அப்போதே மக்களில் அடித்தள மற்றும் நடுத்தர வர்க்கம் இந்த போலியான சாமியார்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் தான் இருந்து வருகிறது. ஆனால், எந்தப் போலி சாமியார் புதிதாக உருவானாலும் அதை முதலில் உயர் வகுப்பு மக்கள் தான் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை உள்ளது.
இவர்களை இந்து அமைப்புகளோ ஆன்மிக வாதிகளோ பிராமினர்களோ , ஆளும் பாஜகவோ ஆர்.எஸ்.எஸ்.களோ கண்டுக் கொள்வதில்லை. ஏனெனில், மக்களிடம் மூடநம்பிக்கை பரப்பி கொண்டே இருக்க வேண்டும். கடவுள் இல்லை என்பது இவர்களுக்கு தெரியும். அதனால்தான் கடவுள் பெயரை சொல்லி அசிங்கமாக நடந்துகொண்டாலும் , கடவுள் பெயரில் மூட நம்பிக்கைகளை விதைப்பதாலே இவர்களை கண்டுக் கொள்வதில்லை.
அதனால் தான் வட மாநிலங்களில் போலியான சாமியார்கள் அதிகம். குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா, ஓம் பாபா, சச்சிதானந்த கிரி, நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், ராம்பால் உள்பட 14 பேர் போலி சாமியர்கள் என பெயர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். மேலும், அந்த நிலை தற்போது தமிழகத்திலும் வந்துள்ளது” என்கிறார்.
– மணிகண்டன்.