வெறும் ஆயிரம் இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற வேளாண் அதிகாரிகள்!
வெறும் ஆயிரம் இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற வேளாண் அதிகாரிகள்!
வணிக பயன்பாட்டிலிருந்த டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பயன்பாட்டிற்கானதாக மாற்றுவதற்கான சான்று வழங்குவதற்காக, வெறும் ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய வழக்கில், ஏறத்தாழ 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது வேளாண் அதிகாரிகள் இருவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் வட்டம் கொணலை கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்.
அவரது சித்தப்பா பெயரில் இயங்கி வந்த வணிக பயன்பாட்டிற்கான டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாயப்பயன்பாட்டிற்கானதாக மாற்றுவதற்கு வேளாண்மைத்துறை அதிகாரிகளின் சான்று தேவைப்பட்டிருக்கிறது.
இதற்காக, கடந்த 08.08.2007 அன்று மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்த அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணியிலிருந்த நாகராஜன் என்பவர் மேற்படி சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டிருக்கிறார்.
மறுநாளே, இதுகுறித்து இலஞ்ச ஒழிப்புத்துறையில் அசோக்குமார் புகாரளித்திருக்கிறார். அவரது புகாரை பெற்றுக்கொண்டு வழக்கை (13/2007) பதிவு செய்த திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், அதே அலுவலகத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய சின்னத்துரை என்பவர் மூலம் மேற்படி இலஞ்சப் பணத்தை வேளாண்மை அலுவலர் நாகராஜன் வாங்கியதை பொறி வைத்துப் பிடித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு சட்டம் வழங்கியிருந்த போதுமான அவகாசத்தை வழங்கிய நிலையில் நீதிமன்ற விசாரணை முடிவுற்று இன்று (29.11.2023) தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகராஜன், வேளாண்மை அலுவலர், மண்ணச்சநல்லுார் என்பவருக்கு லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/-அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் சின்னதுரை, உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன் என்பவருக்கு அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார், திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் .
– அங்குசம் செய்திப்பிரிவு.