ஆட்டம் காணும் எடப்பாடி…விழி பிதுங்கும் அண்ணாமலை | தேர்தல் களம் – 2026

எங்களை மீறி சீட்டு வாங்கிடுவியா? சிண்டிகேட் அமைத்த சீனியர்கள் !

சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியிருக்கிறது. ஏற்கெனவே, தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிலும் அவர் இடம்பெறவில்லை.

 

சமீபத்தில் மோடி வருகை தந்தபோது வரவேற்புக்குழுவிலும் அவருக்கு இடமில்லை. ”தமிழக பாஜக தலைமை பிடிக்கவில்லை. கூட்டணி பிடிக்கவில்லை” என தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வந்த நிலையில், விரக்தியில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ரசிகர் மன்றம் தொடங்கி, நிர்வாகிகளையெல்லாம் போட்டு தனி ஆவர்த்தனம் நடத்தி வந்த நிலையில் தனிக்கட்சி காணப்போகிறார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படி ஒரு முடிவு. காற்று விஜய் பக்கம் வீசவும் வாய்ப்பிருப்பதாக தகவல்.

இபிஎஸ்ஸை 'படிக்காதவர்' என்று அண்ணாமலை அழைத்தார், அதிமுக பதிலடி!இதுஒருபுறமிருக்க, ”அண்ணாமலை தலைவராக இருக்கும் வரையில், பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பில்லை” என்ற எடப்பாடியாரின் சபதம் நிறைவேறியிருப்பதாகவே கணிக்கிறார்கள்.

பாஜகவுடன் கூட்டணி உறுதியான நிலையில், ஒருவழியாக டி.டி.வி. தினகரனும் பாஜகவில் ஐக்கியமான நிலையில், ”முன்புபோலவே இப்போதும் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து கரங்களை கோர்த்து வையும்” என்று பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்து ஓ.பி.எஸ். காத்திருக்கும் நிலையில், தமிழகமெங்கும் சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார் எடப்பாடியார்.

உளுந்தூர்பேட்டை அதிமுக கிருஷ்ணன்
உளுந்தூர்பேட்டை அதிமுக கிருஷ்ணன்

இதற்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ரூ.1.60 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக, உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் போலீசில் கொடுத்த புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருக்கும் சம்பவம் எடப்பாடியாருக்கு தலைவலியை ஏற்படுத்தும் விவகாரமாக மாறியிருக்கிறது.

இதுபோன்ற, சர்ச்சைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகத்தான்  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு குழுவை அமைத்து, தொகுதி நிலவரம் போட்டியிட விருப்பம் தெரிவித்து பணம் கட்டியிருக்கும் வேட்பாளர்களின் பின்னணி குறித்த விவரங்களையெல்லாம் சேகரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். எடப்பாடியின் இந்த முடிவுக்கு, கட்சியில் பழம்தின்று கொட்டை போட்ட மூத்த நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்களாம்.

சி.வி.சண்முகம், குமரகுரு, வேலுமணி,
சி.வி.சண்முகம், குமரகுரு, வேலுமணி,

ஏற்கெனவே மந்திரியாக இருந்த 15-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு தங்களை மீறி தலைமை வேட்பாளரை அறிவித்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி வருகிறார்களாம். தங்கள் சொல்பேச்சு கேட்டு தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் நபர்களைத்தான் தலைமைக்கு பரிந்துரைக்கிறார்களாம்.

இந்த சிண்டிகேட்டில், சி.வி.சண்முகம், குமரகுரு, வேலுமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பக்காவாக காய் நகர்த்துகிறார்களாம். மா.செ.க்களாக வலம் வரும் இவர்களை மீறி தொண்டர்களை சந்திக்கவும் முடியவில்லையாம். எடப்பாடியாரை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வக்கோளாரில் பஸ் பிடித்து சேலம் சென்று சால்வை அணிவித்து வந்தாலும், அந்த படத்தை பேஸ்புக்கில் போட்டு பிரபலம் தேடிக்கொள்வதற்கு முன்பாகவே, சம்பந்தபட்ட மா.செ.க்களிடமிருந்து டோஸ் வந்து விழுகிறதாம். ”எங்களை மீறி சீட்டு வாங்கிடுவியா? சீட்டு வாங்கினாலும் எங்கடா நிப்ப?”னு எகிறியிருக்கிறாராம், மா.செ ஒருவர்.

விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன்
விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன்

இதுமட்டுமா, எடப்பாடிக்கே போனை போட்டு, “எங்களை மீறி ஏன் தொண்டர்களை சந்திக்கிறீர்கள்? அந்த தொண்டர்களை வைத்து கட்சியை நடத்திருவீங்களா?” என்று வாசல் தேடி வரும் தொண்டர்கள் சந்திப்புக்கும் செக் வைக்கிறார்களாம்.

தற்போது நீதிமன்றத்தில் வகையாய் சிக்கியிருக்கும் குமரகுருதான், ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த புதுச்சேரி ஓம்சக்தி சேகரின் தம்பி பழனிச்சாமி என்பவருக்கு திருக்கோவிலூர் தொகுதியை ஒதுக்க வேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்று வருகிறாராம். பொன்முடியும் ஓம்சக்தி சேகரும் சீட் கேட்கும் பழனிச்சாமியும் ஒன்னுக்குள் ஒன்றாக வலம் வரும் சங்கதிகளை சொல்லி, இப்படி இருந்தால் எப்படி ஜெயிக்கிறது என்று புலம்புகிறார்களாம்.

சீனியர்களை வைத்து சதுரங்க ஆட்டத்தை நடத்தி வருவதே அண்ணாமலைதான் என்கிறார்கள். ஆல்ரெடி ஆடிட்டர் ஒருவரின் பேச்சை கேட்டு, அரசியலில் தடுமாறி நிற்பவர்களை பார்த்த பிறகுமா? என்றே கேள்வி எழுப்புகிறார்கள், அடிமட்ட தொண்டர்கள்.

எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் கூட இல்லாத நிலையில்தான் எடப்பாடியார் சீனியர்கள் மத்தியில் சிக்கித்தவிக்கிறார் என்கிறார்கள். தன்னை சுற்றுப்போடும் சீனியர்களிடமிருந்து கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்றுவதே பெரும்பாடாக மாறியுள்ள நிலையில், எங்கே மீண்டும் ஆட்சியை பிடிப்பது? என்றே எதிர்கேள்வி கேட்கிறார்கள் இரத்தத்தின் இரத்தங்கள்.

–  அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

Comments are closed, but trackbacks and pingbacks are open.