கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டில் ஆட்சியை பிடித்த அதிமுக!
காலப் பெட்டகம் பாகம் 05
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 1977 தனிக்கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டில் ஆட்சியை பிடித்த அதிமுக !
இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நெருக்கடிகால நிலை திரும்பப் பெறப்பட்டு 1977 மார்ச் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக + இந்திரா காங்கிரஸ் கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுத் தோல்வி அடைந்தது.
தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம்.ஜி.இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) முதல் முறையாகத் தமிழகத்தின் முதல்வரானார். கலைஞர் மு.கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார். காங்கிரஸ், ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டன.
1971 தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்றுக் கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வரானார். 1972 இல் திமுக பிளவு ஏற்பட்டது. திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார்.
1976 இல் காமராஜர் மறைவிற்குப் பின் அவரது பழைய காங்கிரசு நிலை குலைந்தது. ஜி.கே.மூப்பனார் தலைமையில், ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் இணைந்தனர். மற்றொரு பிரிவினர் ஜனதா கட்சியில் இணைந்தனர். காமராஜர் உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் காலூன்ற முடியாத இந்திரா காங்கிரசு அவரது மறைவுக்குப் பின்னர் வலுவடைந்தது. 1972 இல் ராஜகோபாலாச்சாரி இறந்த பிறகு அவரது சுதந்திராக் கட்சியும் செயல்படுவது நின்று போனது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.
திமுகவிலிருந்து நாவலர் நெடுஞ்செழியன், சத்தியவாணிமுத்து, எஸ்.மாதவன், கே.ஏ.மதியழகன் போன்ற முன்னணித் தலைவர்கள் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவில் இணைந்தனர். இந்திராகாந்தி கருணாநிதி மீது சர்காரியா கமிஷன் அமைத்து ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன. 1977 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக + இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும் தேசிய அளவில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது. ஜனதா கட்சி ஆட்சியில் கருணாநிதி மீதான சர்காரியா கமிஷன் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, ஜனதா தனித்தே போட்டியிட்டன. மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக தேர்தல் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து இந்திரா காங்கிரஸ் வெளியேறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர். முதலாவது முறை தமிழகத்தின் முதல்வரான நிலையில், எதிர்க்கட்சியான திமுக தலைவர் கருணாநிதி எம்.ஜி.ஆர் அன்னிய நாடான இலங்கையில் பிறந்தவர் என்பதால் முதலமைச்சர் பதவியில் நீடிக்கமுடியாது என்று வழக்கு தொடுத்தார். நீதிமன்றத் தீர்ப்பில் இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு இலங்கை தனிநாடாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் அன்னியப் பிறப்பில்லை என்று கூறி முதல்வர் பதவியில் நீடிக்கமுடியும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், நாஞ்சில் மனோகரன், ஆர்.எம்.வீரப்பன், சி.பொன்னையன், பி.டி.சரஸ்வதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சரவையில் ஒரு பெண் மட்டுமே இருந்த நிலையில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2 பெண் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பது சிறப்பான செய்தியாகும்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 5 ஆண்டுகளில் அதிமுக என்னும் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தது தமிழ்நாட்டு வரலாற்றில் ஆச்சரியமாகப் பேசப்பட்டது. அதிமுக தொடங்கிய 5 ஆவது மாதத்தில் 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மாயத்தேவர் “இரட்டை இலை” சின்னத்தில் முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. பழைய காங்கிரஸ் 2 ஆவது இடத்திலும், இந்திரா காங்கிரஸ் 4 ஆவது இடத்தைப் பெற்றன. இந்தச் செய்திகள் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கான அச்சாரமாக அமைந்திருந்தது என்பது மிகையில்லா உண்மையாகும்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.