அங்குசம் பார்வையில் ‘அலங்கு’ திரைப்படம்
தயாரிப்பு : டிஜி ஃபிலிம் கம்பெனி & மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சபரிஷ், சங்கமித்ரா செளம்யா அன்புமணி. டைரக்ஷன் : எஸ்.பி.சக்திவேல். நடிகர்—நடிகைகள் : குணாநிதி, காளிவெங்கட், செம்பன் வினோத், காளி [எ] காளியம்மா [நாய்] சரத் அப்பானி, ஸ்ரீரேகா, இதயகுமார், அஜய், கொற்றவை, அப்புனி சசி, ஆவுடை நாயகம், ஜோஃபி, ஒளிப்பதிவு : பாண்டிக்குமார், இசை : அஜீஷ், எடிட்டிங் : ஷான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர்; ஆனந்த், ஸ்டண்ட் : தினேஷ் காசி, நிர்வாகத் தயாரிப்பாளர் : ஷங்கர் பாலாஜி, தமிழ்நாடு ரிலீஸ் : சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், பி.ஆர்.ஓ.: இரா.குமரேசன்.
கோவை மாவட்டத்தின் ஆனைகட்டி மலைப்பகுதியில் தனது தாய், தங்கையுடன் வசிக்கிறார் தர்மன் [ குணாநிதி ] பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ஹாஸ்டல் சாப்பாட்டில் புழு கிடந்ததாக புகார் சொன்னதால் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தனது நண்பர்கள் கருப்பு [ இதயகுமார் ] சிலுவை[ அஜய்] ஆகியோருடன் சேர்ந்து உள்ளூரில் வட்டித் தொழில் செய்யும் பணக்காரனிடம் கூலி வேலை செய்கிறார் தர்மன்.
அலங்கு திரைப்படம்
ஒருநாள் அந்த பணக்காரன் ஒரு மூட்டையைக் காட்டி, அதைக் காட்டில் புதைத்துவிடுமாறு சொன்னதும், காட்டுப் பகுதிக்குள் போய் குழியை வெட்டிவிட்டு, அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதற்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது ஒரு நாய். இதைப் பார்த்து பதறி பரிதாபப்பட்டு, அதற்கு தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றி, வரும் வழியில் காட்டுப் பகுதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார் தர்மன்.
ஆனால் அந்த நன்றியுள்ள ஜீவனோ, தனது உயிரைக் காப்பாற்றியவனின் வீட்டிற்கே வந்து நிற்கிறது. அதற்கு தனது பாட்டியின் பெயரான காளியம்மா என வைத்து ”காளி” யிடம் அன்பு காட்டுகிறார். இந்த நிலையில் வட்டிக்காரனிடம் அடமானம் வைத்துள்ள தனது வீட்டை மீட்பதற்காக, தனது தாய்மாமன் காளிவெங்கட்டின் உதவியுடன் கேரளாவில் அகழி என்ற பகுதியில் இருக்கும் ரப்பர் தோட்ட கூலிவேலைக்குச் செல்கிறார்கள் தர்மனும் அவனது நண்பர்களும், கூடவே காளியும்.
அந்த ஊரின் நகராட்சித் தலைவராக இருக்கும் அகஸ்டினுக்கு [ செம்ன் வினோத்] கொற்றவையுடன் திருமணமாகி, நீண்ட வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை ஏஞ்சல் மீது அளவு கடந்த பாசம். தனது மகள் ஓவியம் வரைவதற்காக தனது வீட்டில் மட்டுமல்ல, வீட்டுக்கு வெளியே கேட்கும் சத்தங்களையெல்லாம் நிசப்தமாக்கும் அளவுக்குப் பாசம். இப்படிப்பட்ட அகஸ்டினின் செல்ல மகளின் பிறந்த நாளன்று, அவளை நாய் ஒன்று கடித்துவிடுகிறது.
இதனால் ஆத்திரமாகும் அகஸ்டின், தனது அடியாளான பிலிப் [ சரத் அப்பானி ]பைக் கூப்பிட்டு, ஊரிலிருக்கும் நாய்களையெல்லாம் கொல்லச் சொல்கிறார். ஒரு நாயின் தலைக்கு 2,000 விலை வைக்கிறார். இதனால் வெறிகொண்டு நாய்களைக் கொல்கிறது பிலிப் கோஷ்டி. ஊரிலிருக்கும் நாய்களையெல்லாம் வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும் போது, தனது காளியும் அதில் இருப்பதைப் பார்த்து பதைபதைக்கிறார் தர்மன். காளியை தர்மன் காப்பாற்றினாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘அலங்கு’.
ரப்பர் தோட்ட வேலைக்குக் கூலி கம்மியாக கொடுக்கும் போது வரும் கோபம், காளியின் தலையை பிலிப் வெட்டப் போகும் போது ஆக்ரோஷம், ஆவேசம், காளியின் மீது பரிவுகாட்டும் பாசம், தாய்மாமன் காளிவெங்கட்டின் மீது காட்டும் மரியாதை என நிறைவான நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார் குணாநிதி. படத்தின் இடைவேளைக்குப் பிறகு குணாநிதி உட்பட அனைவருக்குமே ஒரே காஸ்ட்யூம் தான்.
தாய்மாமன் காளிவெங்கட்டின் கதாபாத்திரம் கம்பீரமாக தெரிகிறது. அதே போல் குணாநிதியின் தாயாக நடித்துள்ள ஸ்ரீரேகாவும் அசர வைக்கிறார். அதிலும் க்ளைமாக்சில் சரத் அப்பானி கும்பலை வெட்டி வீசும் காட்சியிலும் நாட்டு வெடிகுண்டை ஆவேசமாக வீசி ஆக்ரோஷம் காட்டிவிட்டார். அதே போல் குணாநிதியின் நண்பர்களாக வரும் இதயகுமாருக்கும் அஜய்க்கும் நல்ல வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல். அதிலும் குணாநிதிக்கு ஈக்குவலாக ஸ்டண்ட் சீன்கள் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
சப்-இன்ஸ்பெக்டராக வருபவர், வனத்துறை காவலராக வருபவர், குணாநிதி குழுவினருக்கு அடைக்கலம் தரும் தோழர் பாலனாக வருபவர் என எல்லா கேரக்டர்களுமே கவனம் பெறுகின்றன.
இந்த கேரக்டர்களுக்கெல்லாம் மேலாக தெரிபவர் செம்பன் வினோத் தான். கொடூர வில்லனும் இல்லை, வில்லத்தனங்களும் இல்லை. ஆனால் படம் முழுக்க பயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதான் டைரக்டரின் சாமர்த்தியம். அதே போல் காளி என்ற அந்த நாய் காப்பாற்றப்பட வேண்டும் என பார்வையாளனை படபடப்புக்குள்ளாக்கியதிலும் ஜெயித்துவிட்டார் டைரக்டர்.
படத்தின் ஆகப்பெரிய பலங்களில் முதன்மை பலம் என்றால் அது கேமராமேன் பாண்டிக்குமார். நாமெல்லாம் பல லட்சங்கள் செலவழித்தாலும் பார்க்க முடியாத ஆனைகட்டி மலைப்பகுதியையும் கேரள வனப்பகுதியையும் படம் பிடித்து சிலிர்க்க வைத்துவிட்டார் பாண்டிக்குமார். இயக்குனரும் நடிகர்களும் இந்தப் பகுதிகளில் பயணித்து படம் எடுக்க பட்ட சிரமங்கள் எவ்வளவு இருக்கும்? இதற்காகவே இயக்குனர் சக்திவேலை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம். படத்தின் இரண்டாவது பலம் மியூசிக் டைரக்டர் அஜீஷ் தான்.
அதே போல் நாய் காளிக்கும் நாம் கை கொடுக்கலாம்… ஸாரி கால் குலுக்கலாம்..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கொஞ்சம் பிசகியிருந்தாலும் நேஷனல் ஜியாக்கிரஃபியோ, டிஸ்கரி சேனலோ பார்ப்பது மாதிரி ஆகியிருக்கும், ஆனால் டைரக்டர் சக்திவேலின் புத்திசாலித்தனம் பக்கா கமர்ஷியல் சினிமாவாக்கியுள்ளது.
‘அலங்கு’ அழகு…
— மதுரை மாறன்.