நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிகள் ஆகி விட்டோம்…???
மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள்…
பள்ளித் தலைமையாசிரியர் அவர்களுக்கு…
கீழ்க்கண்ட சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடியும் நாளன்று, மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிவிக்கிறது அந்தச் சுற்றறிக்கை.
அதுவொரு காலம்…
கோடை விடுமுறைக்கு முன்னரான பள்ளி இறுதி நாளில் மாணவ மாணவிகள் ஒருவர் மீது மற்றொருவராக ஆடைகளில் நீல வண்ண மைத் துளிகளைப் பேனாக்களின் நிப்புகள் வழியாகக் கொட்டிச் சிதறிக் கொண்டாடிய நாட்கள் அவைகள்..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அன்றைக்கு மட்டுமாகக் கொஞ்சம் அழுக்கானச் சட்டை அணிந்து பள்ளிக்கு வந்து போனதும் உண்டு.
பள்ளி இறுதி நாளில் உடுப்புத் துணிகளில்
இங்க் பேனாவின் மைத்துளிகளைச்
சிதற விட்டு விளையாடுவதில்
பிள்ளைகளுக்கு அத்தனை ஆனந்தம்.
அத்தனைக் கொண்டாட்டம்.
அந்தக் கொண்டாட்டங்கள்
திசை மாறி வகை மாறி வடிவம் மாறி
உள்ளூர் காவல் நிலையக் காவலர்களின் மேற்பார்வைக் கட்டுப்பாட்டின் கீழாக பள்ளி வளாகம் விட்டு பிள்ளைகள் அமைதியாக வெளியே செல்ல பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவலமானச் சூழலில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம் என்றாகிப் போனது. இந்தச் சமூகத்தில் நம் ஒவ்வொருவர்க்கும் உரித்தானப் பெருத்த அவமானம் அது.
பள்ளிப் பிள்ளைகளின் இந்த மன நலச் சீர்கேடு எந்தப் புள்ளியில் இருந்து தொடங்கியுள்ளது என்பதாக,
ஒவ்வொரு வீட்டிலிருந்தும்
ஒவ்வொரு பள்ளியிலிருந்தும்
அனைத்துப் பிள்ளைகளின் ஒழுக்க நெறி மற்றும் அவர்களின் மன நலச்சீர்கேடுகளில் இருந்தும் அலசி ஆராய்ந்து அவர்களைத் தற்காத்து தகை சான்ற சமூகமாக மாற்ற முனைவது நம் அனைவரது கடமையாகும்.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.