அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், அதிகாரிகள் ஒழுங்காக பணி செய்யவில்லை என குற்றம்சாட்டிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், வருவாய் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரி அந்தப் பெண்மணியிடம் மனுவை கையில் கொடுத்து நீங்களே சம்பந்தப்பட்ட துறை இருக்கும் இடத்தை கை காமித்து அனுப்பி உள்ளார்.
இதனால் கடுப்படைந்த எம்எல்ஏ ரகுராமன், “அதிகாரிகள் சரிவர பணி செய்யாததால் தான் முதல்வர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்,” எனவும் அந்த அம்மாவுக்கு எழுத படிக்க தெரியுமா சம்பந்தப்பட்ட துறையும் தெரியுமா ஏன் இப்படி செய்கிறீர்கள் என கடுமையாக பேசி உள்ளார்.
எம்எல்ஏ இவ்வாறு கூறியதால், முகாமில் பணியில் இருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அனைவரும் பணி புறக்கணித்து, “எம்எல்ஏ வெளியேறிய பிறகே பணி தொடரும்” என தெரிவித்தனர். இதனால் சுமார் மூன்று மணி நேரம் பொதுமக்கள் மனு அளிக்க முடியாமல் காத்திருந்தனர்.
பின்னர், எம்எல்ஏ வெளியேறியதும், வழக்கம்போல் மனுக்கள் பெறும் பணி மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “எம்எல்ஏ எங்களை இழிவாக பேசியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமால் ஏற்கனவே வேலைப்பளு அதிகமாக உள்ளது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக துறைக்கு அழைத்துச் செல்ல முடியாது. மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதே எங்களது நடைமுறை. ஆனால், எம்எல்ஏ இதை புரிந்துகொள்ளாமல் கடுமையாக விமர்சித்துள்ளார்,” என கூறினர்.
அதே நேரத்தில், “இந்த சம்பவத்தை கண்டித்து விரைவில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்தனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.