பொம்பள கப்பு !
பொம்பள கப்பு
30 வருடங்களுக்குப் பின் கான்ஸ் திரைப்பட விழாவில் ஒரு இந்தியத் திரைப்படம் போட்டிப் பிரிவிற்கு சென்றிருக்கிறது. இதுவே பெரிய அங்கீகாரம். சென்ற வேகத்திலேயே கான்ஸின் இரண்டாவது பெரிய விருதான ‘க்ராண்ட் ப்ரிக்ஸ்’ விருதை வென்றிருக்கிறது இயக்குனர் பாயல் கபாடியா இயக்கிய ‘All We Imagine As Light’ திரைப்படம்.
பாயல் கபாடியா சில வருடங்களுக்கு முன் இதே கான்ஸ் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதையும் வென்றிருக்கிறார். All we imagine as light‘ திரைப்படம் க்ரான்ட் ப்ரிக்ஸ் விருதை வெல்லும் என பல திரை விமர்சகர்கள் முன்பே கணித்தது இன்று நிஜமாக்கியிருக்கிறது. சர்வதேச அரங்கில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மகத்தான கௌரவம் இது.
மேலும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதையும் விழாவில் வென்றிருக்கிறார். இவ்விருதை வெல்லும் முதல் இந்தியரும் இவரே.
நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஆர்.சி.பி யை கிண்டலடிக்கும் பொருட்டு ‘பொம்பள கப்’ என்று பதிவிட்டு சந்தோஷப்பட்டு வந்தது ஒரு கூட்டம். தற்போது இந்தியப் பெண்கள் இரண்டு பேர் இதுவரை இந்தியா வெல்லாத இரண்டு மிகப்பெரிய விருதுகளை தட்டித் தூக்கியுள்ளனர். ஆனால் இதை வைத்துக்கொண்டு நம்மை அந்த நாட்டு ரசிகர்கள் ‘பொம்பள விருது’ என்று கிண்டலடிக்க மாட்டார்கள். ஏன் என்று யோசித்தாலே புரியும் ஒரு சமூகமாக நாம் எவ்வளவு மாறவேண்டும் என்பது.
இவ்விரண்டு விருதுகள் போக, மைசூரை சேர்ந்த சித்தானந்தாவின் ‘Sunflowers Were the First Ones to Know’ சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் Pierre Angenieux ExcelLens in Cinematography விருதை வென்றிருக்கிறார்.
இந்திய சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய ஆண்டாக மாறியிருக்கிறது 2024. மாற்றியவர்களுக்கு நிறைய வாழ்த்துகள். நன்றியும் கூட. எந்த விருதும், எந்தக் கனவும் அசாத்தியமில்லை என்பதை மீண்டும் உணர்த்தி உத்வேகப்படுத்தியதற்கு !
–
Jeyachandra Hashmi – டிஜிட்டல் படைப்பாளி