அங்குசம் பார்வையில் ‘அம்..ஆ..” [ Am… aa.]
தயாரிப்பு : ‘காபி புரொடக்ஷன்ஸ்’. டைரக்ஷன் : தாமஸ் செபஸ்டியான். கதை-திரைக்கதை : கவிபிரசாத் கோபிநாத். தமிழ் வசனம் : எஸ்.ஆர்.வாசன். நடிகர்-நடிகைகள் : திலீஷ் போத்தன், தேவதர்ஷினி, பேபி நிஹரா, ஜாஃபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், மாலா பார்வதி, அலென்ஸியர்,கோழிக்கோடு முத்துமணி, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், அஜிஷா பிரபாகரன். ஒளிப்பதிவு : அனிஷ்லால், இசை : கோபி சுந்தர், எடிட்டிங் : பிஜித் பாலா, ஆர்ட் டைரக்டர் : பிரசாந்த் மாதவ், மேக்கப் : ரஞ்சித் அம்பாடி, காஸ்ட்யூம் : குமார் எடப்பல், பி.ஆர்.ஓ : எம்.பி.ஆனந்த் & மணி மதன்.
குறிப்பிட்ட தூரம் வரை சாலை வசதிகளே இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றும் சில வீடுகள் இருக்கும் கேரள மலைப்பகுதி தான் கதைக்களம். அதுதான் இப்படத்தின் உயிர்க்களம் என்றே சொல்லலாம். ஏனெனில் தாய்மையின் உயிர்ப்பான உறவைச் சொல்லத் தான் இந்தக் களத்தை டைரக்டர் தாமஸ் செபஸ்டியான் செலக்ட் பண்ணியிருக்கிறார் என்பது படம் பார்த்து முடித்து நீண்ட நேரம் நம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
வாடகைத் தாய் என்பது பொதுவான வார்த்தை. ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே ‘Sorrow Gate Mother’ என்ற வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அதாவது ”துன்பம் தரும்” என்ற பொருள் தரக்கூடியது. அது தான் இந்த ‘அம்..ஆ.’வின் அடிநாதம். இதைத் தான் நம்ம ஊரு தேவதர்ஷினி என்ற நடிப்பரசி மூலம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர் தாமஸ் செபஸ்டியான்.
படத்தின் முதல் காட்சியே மீரா வாசுதேவின் குழந்தை ஏக்கத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. பெண் டாக்டரிடம் அவர் பேசும் ஐந்து நிமிட காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸன்களை வெளிப்படுத்தி அசத்திவிட்டார். அந்த சீன் முடிந்ததும் பெண் பாடகியின் “ கண்ணத்தா மலை மேலே” என்ற வசீகரக்குரலுடன் அழகிய மலை மேலே ஊர்ந்து செல்லும் பஸ்ஸுடன் டைட்டில் போடுகிறார்கள். க்ளைமாக்ஸில் கரெக்டாக கனெக்ட் ஆகிறார்கள் மீராவாசுதேவும் திலீஷ் போத்தனும்.
டைட்டில் முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்குகிறார் ரோடு காண்ட்ராக்டர் ஸ்டீபன் [திலீஷ் போத்தன்]. குடிசை டீக்கடைக்கு வருகிறார் அந்த ஊர் அரசியல் மெம்பர் ஜாஃபர் இடுக்கி. அங்கிருந்து இன்னும் கொஞ்சம் தூரம் மலையேறி திலீஷுக்கு ஒரு பழைய வீட்டைக் காண்பித்து அதில் தங்கிக் கொள்ளச் சொல்கிறார் ஜாஃபர். ரோடு காண்ட்ராக்டராக வந்த ஸ்டீபன், அம்மணி அம்மா என்ற முதிய பெண்ணையும் அவருடன் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தையையும் பற்றி விசாரிக்கிறார். அப்போது அதே டீக்கடைக்கு ரெகுலராக வந்து போகும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெருசு ஒருவர், திடீரென ஸ்டீபனைத் தாக்குகிறார்.
அம்மணியம்மா யார்? அந்த குழந்தை யாருடையது? ஸ்டீபன் யார்? என்பதற்கான விடை தான் இந்த அருமையான.. அற்புதமான ‘அம்..ஆ.’
இந்த திலீஷ் போத்தனை இதற்கு முன்பு வேறெந்த மலையாள சினிமாவிலும் நாம் பார்த்ததாக நினைவில்லை. அடிக்கடி மலையாள சினிமா பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காவிட்டாலும் இவரைப் பற்றி நம்ம ஊரு மீடியாக்கள் மூலம் கூட பார்த்ததில்லை. ஆனால் மனுஷன் பார்வையாலும் உடல் மொழியாலும் நமது மனசுக்குள் ரொம்பவே பதிந்துவிட்டார். ஒரு தாயையும் குழந்தையையும் தேடி வந்த இன்ஸ்பெக்டராக அவர் வெளிப்படும் சீன் கனகச்சிதம்.
படத்தின் மணிமகுடம் என்றால் அது தேவதர்ஷினி தான். பிஞ்சுக்குழந்தையாக இருக்கும் போது, அதைக் கொல்லத் துடிக்கும் கயவர்களிடமிருந்து காப்பாற்றி தோளில் சுமந்தபடி மலைமீதேறி அங்கே தனிமையில் குழந்தையைக் காத்து வளர்த்து… என மலையாள மண்வாசனையுடன் நடித்திருந்தாலும் தாய்ப்பாசத்திற்கு ஏது மொழி பேதம்? என பிரமிக்க வைத்துவிட்டார், க்ளைமாக்ஸில் உலுக்கியெடுத்துவிட்டார் தேவதர்ஷினி. அவரிடம் இருக்கும் அந்த குழந்தை நிஹரா கூட அவருக்குச் சமமாக நடித்துள்ளது என்றே சொல்லலாம்.
படம் பார்ப்பவர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் மலைப்பகுதியின் அழகையும் கரடுமுரடான சாலைகளையும் தனது கேமரா கண்களுக்குள் கொண்டு வந்ததில் ரொம்ப ரொம்ப… கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அனிஷ்லால். அதிலும் திலீஷ் போத்தனும் ஜாஃபர் இடுக்கியும் ஆபத்தான வளைவுகளில் ஜீப்பில் பயணம் செய்து, மலையின் சமதளப்பகுதிக்குச் செல்லும் சீன்களில் நம் உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அடங்கப்பா…அனிஷ்லால்.. உன் கண்ணைக் காட்டுப்பா, தொட்டுக்கும்பிடணும்.
இவருக்கு அடுத்து மியூசிக் டைரக்டர் கோபி சுந்தர், ஆர்ட் டைரக்டர் பிரசாந்த் மாதவ் கூட்டணியின் கடின உழைப்பும் அசாத்தியமானது. சாலையோர டீக்கடை, மலை மீது தனித்திருக்கும் வீடு இதெல்லாம் செட் எனச் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு பிரசாந்த் மாதவனின் திறமை தெரிகிறது. இந்த மூவர் கூட்டணிக்கு அடுத்து படத்துடன் நம்மை ஒன்ற வைப்பது தமிழில் வசனம் எழுதிய எஸ்.ஆர்.வாசன் தான். மலையாள வாசனையே இல்லாமல், அவர்களின் லிப் சிங்க்கிற்கு மேட்ச் பண்ணி பெருமிதம் கொள்ள வைத்துவிட்டார் வாசன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சமீபகாலமாக கமர்ஷியல் & மசாலா ஃபார்முலா சினிமாக்கள் மலையாளாத்தில் வந்து தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, மலையாள சினிமாவுக்கே நல்ல படம் கொடுத்து பாடம் நடத்தியிருக்கும் இயக்குனர் தாமஸ் செபஸ்டியானுக்கு தாராளமாக சபாஷ் போடலாம்.
உங்கள் பகுதி தியேட்டர்களில் இந்த ‘அம்…ஆ’ ஓடினால் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவசியம் பாருங்கள், சிறந்த சினிமா பார்த்த உணர்வைப் பெறுவீர்கள், நிச்சயம் பாராட்டுவீர்கள்.
— மதுரை மாறன் .