ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய விவகாரம் ! அதிமுக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு !
துறையூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் எட்டு மாத கர்ப்பிணி ஆம்புலன்ஸ் உதவியாளரை அதிமுகவினர் தாக்கி ஆம்புலன்ஸை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.
எடப்பாடி பரப்புரையை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்துமக்கள் வந்திருந்தனர். வேங்கடத்தனூரை சேர்ந்த, நீல கரையார் என்பவர் எம்.எஸ்.கே மஹால், அருகே மயங்கி விழுந்து விட்ட நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 108 –க்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து உடனே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில் மற்றும் உதவியாளர் எட்டு மாத கர்ப்பிணியான ஹேமலதா ஆகியோர் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து துறையூர் பேருந்து நிலையம் வழியாக மயங்கி விழுந்த நோயாளியை மீடபதற்காக 108 வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்பொழுது, அங்கே கும்பலாக நின்று கொண்டிருந்த அதிமுக தொண்டர்கள் 108 ஆம்புலன்சை வழி மறித்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். வாகனத்தில் , உட்பகுதியில் உள்ளே ஏறி ஸ்கிரீன் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில், ஆம்புலன்ஸ் உதவியாளர் ஹேமலதா (8மாத கர்ப்பிணி) ஆகிய இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை தாக்கிய விவகாரத்தில், ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிமுக நகர செயலர் மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் அமைதிபாலு, அதிமுக வடக்கு ஒன்றிய செயலர் பொன் காமராஜ், அதிமுக இளைஞர் அணு நகர செயலாளர் விக்கி எ விவேக், அதிமுக அம்மா பேரவை 21 வது வார்டு கவுன்சிலர் தீனதயாளன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பழனிச்சாமி முந்தைய கூட்டத்தில் பேசியிருந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து, தற்போது அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
— ஜோஷ்