அழுத காட்சி குறித்த வைரல் பதிவு : அன்பில் மகேஷ் சொன்ன நச் !
மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் “தமிழ்முழக்கம்” மேடைப்பேச்சு ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது. அக்-22 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா, சட்டமன்ற உறுப்பினர் தளபதி மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
விழாவிற்கு பின்னர் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அளித்த பேட்டியில் “பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
இதனை தொடர்ந்து கரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுத வீடியோ காட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து பேசுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில் “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இதுபேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம், உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது, அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக மறந்துவிட்டான்” என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.