பசுமைப்பூங்காவை அழித்து மார்க்கெட்டா ? பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் தனியார் பள்ளிகள் !
அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு ! சுங்கச்சாவடி அடாவடி !
இலாப நோக்கமற்று இயங்கும் அரசு பேருந்துகளுக்கு அவ்வளவு கணக்காக சுங்கக்கட்டணம் வசூலித்தே ஆக வேண்டுமா? வாங்கும் கட்டணங்களுக்கு முறையாக கணக்கு காட்டுகிறார்களா? சாலையை தரமாக பராமரிக்கிறார்களா? அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொண்டு, சுங்கக்கட்டண கொள்ளையில் ஈடுபடுவதோடு அரசின் கழுத்துக்கே கத்தியை நீட்டும் கதையாக நீள்கிறது சுங்கச்சாவடி அடாவடி கொள்ளை விவகாரம்.
கரூர் வாலிபருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்த காதலி !
ஆசையாய் காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட பிறகு, காதல் மனைவியை வரதட்சணை கொடுமை செய்தும், இரண்டாம் திருமணம் செய்து கொண்டு காதல் மனைவி மற்றும் குழந்தைகளை அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண்ணை கைவிட்ட இளைஞருக்கு நீதிமன்றத்தை நாடி பெற்றுத் தந்த தண்டனை குறித்து பேசுகிறது.
பசுமைப் பூங்காவை அழித்து காய்-கனி மார்க்கெட்டா ? நீதிமன்றம் வைத்த குட்டு !
22.5 ஏக்கர் பரப்பில் கடந்த 2003 ஆண்டு உருவாக்கப்பட்டது பசுமைப்பூங்கா. திருச்சி மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட பூங்காவை, உரிய பராமரிப்பின்றி அலட்சியம் செய்ததன் விளைவாக புதர் மண்டிய காடாகிப்போனது. பின்னர், அதனையே காரணமாக காட்டி, தற்போது பஞ்சப்பூர் பேருந்து முனைய விரிவாக்கத்துக்காக, காய்-கனி மார்கெட்டுக்காக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பசுமை பூங்கா மீட்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசுகிறது.
கௌரவ விரிவுரையாளர் பணி நியமன வசூல் சர்ச்சை – சிக்கலில் அதிமுக !
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொல்லி, கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் வி.கே.அருணகிரி மற்றும் துணைத்தலைவர் வசந்த்குமார் ஆகியோர் 43,50,000 வசூல் செய்ததாகவும்; அதில் 20 இலட்சம் மட்டுமே திருப்பித்தரப்பட்டதாகவும் மீதம் பட்டை நாமம் போடப்பட்டதாகவும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருக்கிறார் சிவகங்கையை சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் ரமேஷ் ராமச்சந்திரன்.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கெத்து காட்டி கேசு வாங்கிய எடப்பாடி ரத்தத்தின் ரத்தம் !
முறைகேடான முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள் என்பதாக, தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் அலப்பறையில் ஈடுபட்ட, எடப்பாடி தாலுகா, வெள்ளரி வெள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணாங்காடு அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. இவர் எடப்பாடியுடன் நெருக்கம் காட்டிய லோக்கல் ரத்தத்தின் ரத்தம் என்கிறார்கள்.
வாட்சப் குரூப் ஆரம்பித்து அதிலயும் ராக்கிங்கா? யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கை !
அனைத்து கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைகழக மானியக்குழு – யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது வாட்சப்பில் குரூப் ஆரம்பித்து அதிலேயும் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வதாகவும் அது தொடர்பாக விழிப்புணர்வோடு இருந்து தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறது.
திருமலா பால் 40 கோடி மோசடி புகார் ! மேலாளர் தற்கொலை ! எஃப்.ஐ.ஆர். போடாமலே விசாரித்ததா போலீஸ் !
திருமலா பால் நிறுவனத்தில், அதன் கரூவூல அதிகாரியாக பணியாற்றிய ஆந்திராவை சேர்ந்த நவீன் பொலினேனி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவரும் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில், போலீசில் புகார் அளித்தநிலையில் போலீசார் எஃப்.ஐ.ஆர். போடாமலேயே அவரை விசாரித்து வந்ததாகவும்; குறிப்பாக, அவரது குடும்பத்தையும் வழக்கில் சேர்த்துவிடுவோம் என்பதாக போலீசார் மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை மாநகர போலீசார் இதனை மறுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், இன்னும் போலீசின் விசாரணையே தொடங்கவில்லை என்கிறார்கள். என்னதான் நடந்தது?
பள்ளி மாணவர் மரணத்தில் மர்மம் ? சந்தேகம் கிளப்பும் டாக்டர் கிருஷ்ணசாமி !
திருநெல்வேலி ஆலங்குளம் மாரந்தையை சேர்ந்த 12 வயதான சேர்மன்துரை, 7-ஆம் வகுப்பு மாணவன். வடக்கன்குளம் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி பயின்று வந்த நிலையில், விடுதி அருகே கிணற்றில் தவறிவிழுந்து இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது.
“பெற்றோர் வரும் முன்னரே பிரதே பரிசோதனை ஏன் நடத்தப்பட்டது? வீடியோ எடுக்கப்பட்டதா? ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா? பாதிக்கப்பட்டவர் தரப்பு பிரதிநிதி ஒருவர் இல்லாமலேயே, ஏன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது?” என்பது உள்ளிட்ட கேள்விகளை சந்தேகமாக எழுப்புகிறார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் தனியார் பள்ளிகள் !
கடலூரில் நிகழ்ந்த ரயில்வே கேட் விபத்தை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களின் வாகனம் விசயத்தில் அலட்சியம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். குறிப்பாக, பள்ளி வாகனங்களுக்கு விபத்து காப்பீடு பெறப்படுவதில்லை. இதன்காரணமாக, விபத்தில் சிக்கி உயிரிழக்கும் குழந்தைகள் இழப்பீட்டை பெற முடியாத சிக்கலை எதிர்கொள்கிறார்கள். வருடந்தோறும் பள்ளி திறக்கும் நேரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வது போல அதிகாரிகள் படம் காட்டுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது, இந்த விவகாரம்.
இன்னும் பல்வேறு விவகாரங்களை அலசுகிறது, இன்றைய அங்குசம் ஆடுகளம். அங்குசம் ஆடுகள் ஜூலை 11
விரிவான வீடியோவை காண :