அங்குசம் செய்தி எதிரொலி: கைமாறியது செங்கோல் பக்தி பரவசத்தில் இமக!
கடந்த மே 1 அங்குசம் இதழில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டுப் புடவை, வேட்டி மற்றும் துண்டு ஏலம் மூலம் ஐந்தரை கோடி வருமானம் வந்தது. இதில் யாருக்கு செங்கோல்? இந்து மக்கள் கட்சி ரெக்கமெண்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மதுரையில் கோலாகலமாக கொண் டாடப்பட்டு வருகிறது. அதில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெறும் நாளன்று செங்கோல் வழங்கப்படும். அந்த செங்கோலை கடந்த 15 ஆண்டுகளாக கோயில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் என்பவர்தான் எப்போதும் பெற்றுக் கொள்வார். எந்த ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தாலும் இவர் தான் தக்காராக இருந்து வருகிறார்.
அதிகார பலத்தை வைத்து போலிச் சான்றிதழ் மூலம் கோயிலில் ஊழியர்களை வேலை க்கு அமர்த்தியுள்ளார். இவருக்கு பதிலாக நல்ல மனிதரை அரசு பரிந்துரை செய்து நியமிக்க வேண்டும் எனவும், செங்கோல் இவரிடம் வழங்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் இந்த வருடம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

சித்திரை திருவிழாவின் செங்கோல் வழங்கும் விழாவில் கருமுத்து கண்ணன், சில அரசியல் பிரச்னை, உடல் நிலை சரி இல்லை என காரணங்களை கூறி கலந்துகொள்ளவில்லை என்று கோயில் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அவருக்கு பதிலாக கோயிலின் துணை ஆணையர் அருணாச்சலத்திடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது. எங்களது கோரிக்கை கோயில் நிர்வாகத்திற்கு கேட்டதோ இல்லையோ அன்னை மீனாட்சிக்கு கேட்டுவிட்டது என பக்தி பரவசத்துடன் கூறி வருகிறார்கள் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட கட்சியினர்.
-ஷாகுல், படங்கள் – ஆனந்த்
ஏலம் மூலம் வருமானம் 5 1/2 கோடி யாருக்கு செங்கோல் இந்து மக்கள் கட்சி ரெக்கமண்ட்?