ஹோட்டலில் அரசு சத்துணவு முட்டை ! இழுத்து மூடி சீல் வைத்த ஆட்சியர் ! அங்குசம் செய்தி எதிரொலி
ஹோட்டலில் சத்துணவு முட்டை ! ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்து அதிரடி காட்டிய ஆட்சியர் ! ”துறையூர் உணவகங்களில் அரசு சத்துணவு முட்டைகள் அமோக விற்பனை” என்ற தலைப்பில் வீடியோ ஆதாரத்துடன் அங்குசம் இணையத்தில் நேற்றிரவு (18.09.2024) பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தோம். ஹோட்டலில் அட்டை அட்டையாக சத்துணவு முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இம்முறைகேட்டை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டு மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம்.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பிறப்பித்த நிலையில், களம் இறங்கிய அதிகாரிகள் குற்றச்சாட்டில் சிக்கிய ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்திருக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி, துறையூர் வட்டாட்சியர் மோகன், துறையூர் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வடிவேல், உள்ளிட்ட அதிகாரிகள் சர்ச்சைக்குள்ளான உணவகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
”ஆய்வின்போது, சத்துணவு முட்டைகள் எதுவும் சிக்கவில்லை. அதேசமயம், உணவகத்தை சுகாதாரமற்ற முறையில் இயங்கியதை கண்டறிந்தோம். அதனடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கடைக்கு சீல் வைத்திருக்கிறோம்.” என்கிறார், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ரமேஷ்.
”துறையூர் வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. உணவகத்தின் உரிமையாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம்.” என்கிறார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி.
யாரிடமிருந்து முட்டையை வாங்கினார் என்பது குறித்து உணவகத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதற்கட்டமாக பெண் சத்துணவு அமைப்பாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணையின் முடிவில் இருவரும் கைதாகும் வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
வீடியோ லிங்
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்போது சத்துணவு முட்டையும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வரும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை போலவே, சத்துணவு முட்டை விவகாரத்திலும் மாவட்ட ஆட்சியரே நேரடியாக தலையிட்டு அதிரடி காட்டியிருப்பது இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.