ஆராய்ச்சி படிப்பையே அழித்து ஒழிக்க நினைக்கிறதா, அண்ணா பல்கலை ?
ஆராய்ச்சி படிப்பை அழித்து ஒழிக்க அண்ணா பல்கலைக்கழகத்தினர் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம், மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று ஒரு புறம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய சில பல்கலைக்கழகங்கள் மாநில அரசை அவமதித்து, மாநில அரசின் கொள்கை முடிவுகளை நிராகரித்து தேசிய கல்விக் கொள்கை 2020யை மறைமுகமாக திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அவ்வப்போது கல்லூரி வளாகத்திற்குள் தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமான கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இப்படியாக அண்ணா பல்கலைக்கழகமும் தொடர்ச்சியாக தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான போக்குகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு விதமான நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி சிதைந்தும் வருகிறது. குறிப்பாக போலி பேராசிரியர்கள் நியமனம் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான அவப்பெயரை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்த நிலையில் தான் ஆராய்ச்சி படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லும் விதமாக விதிகளில் சில திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய கன்ஃபர்மேஷன் டிசி மீட்டிங் வைக்கும் பொழுது ஒரு எக்ஸ்டர்னல் தேர்வாளர்கள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. அதுவும் ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆட்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டு இருக்கின்றனர். இப்படி மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்வாளர்கள் வரவேண்டும் என்றால் அவர்களுக்கான செலவுகளை யார் செய்வது என்ற கேள்வியும் சேர்ந்து எழுகிறது. இது மாணவர்களிடம் பொருளாதார சுரண்டலை நடத்தும் செயலாகும். மேலும் இதுவரை நடைமுறையில் இருந்த கன்ஃபர்மேஷன் டிசி மீட்டிங்-யில் எந்தவித குறையை அண்ணா பல்கலைக்கழகம் கண்டது, ஒன்றிய அரசு நிறுவனங்களில் இருந்து கண்டிப்பாக ஒருவரை சேர்க்க வேண்டும் என்பது நெறியாளரின் உடைய சுதந்திரத்தில் தலையிடுவது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு பேராசிரியர்களின் தரத்தை மறைமுகமாக குறைத்து மதிப்பிடுவதாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இது போன்ற தொடர் செயல்பாடுகள் மாணவர் நலனுக்கு எதிரானதாகவும், தான் இதுவரை பின்பற்றி வந்த கல்வி நடைமுறைகளை சிதைக்கும் போக்காகவும் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக ரீதியாக சீரமைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டு என்பதற்கு மாறாக, தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஒரு கல்வி நிறுவனமாக மாறிவிடும் என்பதை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறது.” என்பதாக கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.