அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழா ! இரா.ஜெயலெட்சுமி – யாவரும் கேளீர்- தொடா் 27
அங்குசம் அறக்கட்டளை தொடர்ந்து நடத்திவரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 27 ஆம் நிகழ்வு 09.08.2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழா – உரையரங்கம் நடைபெற்றது. இந்த உரையரங்கில், அண்மையில் பணி நிறைவு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் இரா.ஜெயலெட்சுமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மருத்துவர் இலட்சுமி நந்தக்குமார் அன்னை வீரம்மாள் அவர்களோடு ஏற்பட்ட நேரடி தொடர்பின் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்வின் புரவலர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து சிறப்புரையாளருக்குப் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளர் திருச்சி அன்பழகன் சிறப்புரையாளருக்கு நூல்களைப் பரிசாக வழங்கினார்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் சிறப்புரையாளரை அறிமுகம் செய்யும்போது, “திருச்சியின் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்று திகழ்ந்து கொண்டிருப்பவர் அன்னை வீரம்மாள். அவர் பட்டியலினப் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஓர் அமைப்பைத் தொடங்கி நடத்தி, பின்னர் எல்லா சமூகங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஓர் அமைப்பை விரிவுபடுத்தினார். அங்கே கைவிடப்பட்ட முதியோர், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் திருச்சி விமானநிலையம் அருகில் அன்னை ஆசிரமம் என்ற ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அங்கே தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பெண்களுக்கான கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.

திருச்சி வானொலி நிலையப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், தன் தோழியர்களுடன் அன்னை ஆசிரமத்தை ஓர் ஆலமரமாக வளர்த்தெடுத்தார். இன்றும் அன்னை வீரம்மாளின் புகழை அந்த ஆசிரமம் பாடிக்கொண்டே இருக்கின்றது.” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய கல்வியாளர் இரா.ஜெயலெட்சுமி, “அங்குசம் அறக்கட்டளை நடந்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை நிகழ்வில் அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழாவில் உரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைத் தொடர்ந்து அன்னை வீரம்மாள் குறித்து பல்வேறு தகவல்களைப் படித்தேன். ஒவ்வொன்றும் என்னை பிரமிக்கச் செய்தது. இவ்வளவு பெரிய மகத்தான மனிதரைப் பற்றி நாம் இவ்வளவு காலம் அறியாமல் இருந்துவிட்டாமே என்று வெக்கப்பட்டேன். நல்வாய்ப்பாக இந்த விழா தொடர்பாக அம்மாவைப் பற்றி நிறைய படித்தேன். தன் வாழ்வை ஒரு புரட்சிகரமான வாழ்வை இந்திய விடுதலை காலத்தில் அமைத்து கொண்டது வியப்பான செய்தியாக இருந்தது. அம்மா அவர்கள் தந்தை பெரியார் அவர்களோடும் இணைந்து பணியாற்றியுள்ளது அவரது சமூக அக்கறையைப் புலப்படுத்தியது. அன்னை வீரம்மாள் தமிழகத்தின் சாவித்திரிபாய் பூலே போன்று வாழ்ந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளார். அவரைப் பற்றி நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்தாமல் அம்மா அவர்களின் வாழ்வின் சிறப்புகளை 100 செய்திகளாக உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அன்னையின் இந்த 100 தகவல்களைப் பரிமாறும் இந்த வேளையில் அன்னையைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால “Outstanding Women Social Worker” என்று ஆங்கிலத்தில்தான் சொல்லமுடிகின்றது” என்று உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வின் சிறப்புரையாளர் கல்வியாளர் இரா.ஜெயலெட்சுமி அவர்களுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் இதழ்களைப் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் நன்றியுரையாற்றினார்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் – திருப்பராய்த்துறையில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் 7ஆவது குழந்தையாக பிறந்துள்ளார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வீராயி என்பதாகும்.
- தந்தை திரு.வேம்டபு மேஸ்திரி – தாயார் திருமதி பெரியக்காள்.
- அம்மாவின் தந்தையார் இரயில்வே இருப்புபாதைகளைக் கண்காணிக்கும் காங்கிமேன் பணியில் இருந்துள்ளார்.
- பள்ளியில் மாணவர்கள் வீரம்மாளிடம் பழகும்போது தெரியாமல் தொட்டுவிட்டால்கூட தீட்டு என்று சொல்லி குளித்துவிடுவார்களாம். இப்படியாகத்தான் வீரம்மாளின் கல்வியைப் போராடித்தான் பெற வேண்டி இருந்தது.
- தொடர்ந்து வீரம்மாள் திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் கல்வி பயின்றார். 11ஆம் வகுப்பில் வேதியியல் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனையும் படைத்துள்ளார்.
- திருமணம் நடைபெற்ற பின்னர் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார்.
- 1945-சூன் மாதம் அகில இந்திய வானொலியில் பணியில் இணைந்தார்.
- ஆப்பக்கார அங்காயி என்னும் நிகழ்ச்சியின் வழியாக அன்னை வீரம்மாள் நாட்டு நடப்பு, பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தார் என்பது வானொலி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
- 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையிலிருந்து திருச்சி வழியாக இரயில் சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்துள்ளார்.
- கணவர் தனக்குத் துரோகம் இழைத்து இன்னொரு பெண்ணோடு வாழ்வது கண்டு உளச்சீற்றம் கொண்டு துரோகத்திற்கு முடிவு கட்ட கடுமையாகப் போராடினார்.
- இல்லறத் துறவியாக அன்னை 3 ஆண்டுகள் வாழ்ந்து, 1951-இல் திருமண முறிவு பெற்றார்.
- பீமநகர் பகுதியில் பெண்கள் நலச் சங்கத்தின் சார்பில் வீட்டின் திண்ணையில் பாலர் பள்ளி ஒன்றினை அன்னை தொடங்கினார்.
- அன்னை ஆசிரம குழந்தைகள் இல்லம் – பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டது. (1954-89)
- இராஜீவ்காந்தி தேசிய குழந்தைகள் காப்பகம் 150 பேருடன் தொடங்கப்பட்டது.
- டாக்டர் கமலம்மா பாலகிருஷ்ணன் முதியோர் இல்லம் 30 பேருடன் தொடங்கப்பட்டது.
- அன்னை மேல்நிலைப் பள்ளி 250 மாணவியருடன் தொடங்கப்பட்டது.
- எம்.எம். தொடக்கப்பள்ளி 200 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது.
- ஓய்வூதியம் பெற்று தனித்து வாழும் பெண்களுக்காக ஓய்வூதியர் இல்லம் 20 பேருடன் தொடங்கப்பட்டது.
- வெளி மாவட்டங்களிலிருந்து திருச்சியில் பணிபுரிந்து வரும் பெண்களுக்காக, பணிபுரியும் மகளிர் விடுதி 23 பேருடன் தொடங்கப்பட்டது.
- பெண்களுக்குத் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
- அகவை முதிர்ந்தவர்களுகாக அந்திம பராமரிப்பகம் 5 பேருடன் தொடங்கப்பட்டது.
- அன்னை ஆசிரமம் தொடங்கப்பட்டது.
- 1984ஆம் ஆண்டு 60 வயது நிறைவடைந்த அன்னை திருச்சி வானொலி நிலைய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
- நற்பணி நாயகி என்ற பட்டம் வழங்கப்பட்டது
- சமூக சேவை சுடர் விருது
- பிறர் நலப் பெருந்தகை விருது
- ராணிலேடி மெய்யம்மை ஆச்சி விருது
- தொண்டு மா மணி
- அன்னை தெரசா விருது
- அன்னை சாரதாதேவி மகிளா சேவா விருது
- தென்னாட்டு தெரசா விருது
- 1997ஆம் ஆண்டு 50ஆவது சுதந்திர தின பொன்விழாவில் சிறந்த சமூக சேவை ஸ்தாபன விருது அன்னைக்குத் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது.
- அன்னை தன் 82ஆம் வயதில் 2006ஆம ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார்.
- கண்கள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
- உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கத் தானமாக வழங்கப்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டவுடன் அன்னையின் உடல் தற்போது திருச்சி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.