துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் மாணவர்களுக்கான “அனுக்கிரஹா “ஆசீர்வாத நிகழ்ச்சி.
சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் அங்கமாக திகழும் , திருச்சி மாவட்டம், துறையூர் சௌடாம்பிகா இருபாலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவிருக்கும் மாணவ மாணவிகளை ஆசீர்வதிக்கும் விதமாக அனுக்கிரஹா எனும் தலைப்பிலான விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் செந்தூர் செல்வன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் ஞானசம்பந்தன் பங்கேற்றார். வரவேற்புரையை வழங்கிய சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் செயலாளரான செந்தூர் செல்வன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசியபோது, ” மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு இருந்து அவர்களை தலைசிறந்த மாணவர்களாக ஆக்குவது தான் எங்களின் குறிக்கோள் ” எனவும் , அதற்கான வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் சிறப்பாக எடுத்துரைத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கல்வி குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி பேசியபோது, ” நம்பிக்கையும் இலக்குகளையும் நல்ல நண்பர்களையும் சிறந்த முறையில் தேர்ந்தெடுத்து புதிய பயணத்தில் பயணம் செய்தால் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும் ” என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் கருத்துக்களை எடுத்துரைத்து, வெற்றிகரமாக பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்த்துரைகளையும் வழங்கினார்.
பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் ஞானசம்பந்தன், ” மாணவர்கள் தங்களது குறிக்கோள்களை ஒருநிலைப்படுத்தி அதில் வெற்றியடைய வேண்டும் எனவும் இன்றைய சூழல்களை எதிர்கொண்டு கல்வியினை முழுமையாக கற்றுக்கொண்டு வெற்றி அடைந்தால் உலகம் உங்களை மதிக்கும் “என பல்வேறு கருத்துகளையும் தேர்வில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளையும், பல்வேறு வெற்றியாளர்களின் சாதனைகளையும் மாணவர்களிடையே எடுத்துக் கூறி,மாணவர்கள் அனைவரும் சிறந்த வெற்றியாளர்களாக வர வேண்டும் என வாழ்த்தினார்.
தொடர்ந்து மாணவர்களை பெற்றோர்கள் ஆசிர்வதிக்கும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர். முடிவில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் முதல்வர் ரேணுகா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.