அன்வர் ராஜா எந்தப்பக்கம் செல்லப் போகிறார் -அதிமுகவா ? திமுகவா ?
திமுகவின் சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக இருந்தவர் அன்வர் ராஜா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே பழனிச்சாமியை ஒருமையில் பேசியதாகவும் கடந்த மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதலே அன்வர்ராஜா யாருடனும் பேசாமல் தனது வீட்டில் தனிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மகனிடம் செல்போனை கொடுத்து விட்டு அனைத்து அழைப்புகளையும் புறக்கணித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க அதிமுகவை நிறுவிய எம்ஜிஆரிடம் நீதி கேட்பது போல போஸ்டர் அடித்து ஒட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அன்வர் ராஜா.
அந்த போஸ்டரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தன்னால் ஜீரணிக்கமுடியவில்லை என்று அதிமுக தலைமைக்கு அன்வர் ராஜா தெரியப்படுத்தி இருக்கிறார். அதோடு அந்த போஸ்டரில் ஜெயலலிதா உள்ளிட்ட யாருடைய படமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் அன்வர் ராஜாவை திமுக பக்கம் கொண்டு வருவதற்காக திமுகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருபுறம், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றொரு புறமும் என்று இருவரும் தனித்தனியே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
திமுகவினர் தன்னை திமுக பக்கம் அழைத்து செல்வதற்காக தூது விட்டு இருக்கின்றனர் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார் அன்வர் ராஜா. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அன்வர் ராஜா-வை பொறுமை காக்க கூறியுள்ளாராம்.