பணியிடமாறுதல் உத்தரவை உதாசீனப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் !
பணியிடமாறுதல் உத்தரவை உதாசீனப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் !
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்துவரும் அலுவலர்கள் 19 பேரை இடமாற்றம் செய்து சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன். பணியிடமாற்றம் செய்யப்பட்ட 19 பேரில், திருச்சி மாநகராட்சியில் கோ – அபிசேகபுரம் மண்டலத்தின் உதவி ஆணையருமான ராஜேஷ்கண்ணா கோவை மாநகராட்சிக்கும், தலைமையக மெக்கானிக்கல் பிரிவு உதவி செயற்பொறியாளரான ரகுராமன் கடலூர் மாநகராட்சிக்கும் மற்றும் பொன்மலை கோட்டத்தை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம் மதுரை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இம்மூவருக்கு பதிலாக, வேலூர் மாநகராட்சியிலிருந்து சந்திரசேகர், சேலம் மாநகராட்சியிலிருந்து செந்தில்குமார், அருப்புக்கோட்டை நகராட்சியிலிருந்து ராமலிங்கம் ஆகியோர் திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்களாக பணியிட மாறுதல் பெற்று பதவியேற்கவிருக்கிறார்கள்.
பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இன்று வரையில் புதிய பணியிடத்திற்கு செல்லாமல் பழைய பதவியிலேயே தொடர்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
மிகமுக்கியமாக, பணியிட மாறுதல் பெற்ற இம்மூவரும் திருச்சியின் மூத்த அமைச்சரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவை நேரில் சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு இடமளிக்க வழிவகை செய்திருக்கிறது. பதவி உயர்வு பெற்று அல்லது தங்களது சிறந்த சேவைக்காக அரசின் விருதை பெற்று அதற்காக நன்றி பாராட்ட துறை சார்ந்த அமைச்சரை சந்திந்திருந்தால் நாம் ஏன் என்று கேள்வி கேட்கப் போவதில்லை. அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் என்பது இயல்பான ஒன்று. இம்மூவரும் இதே திருச்சி மாநகராட்சியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகமுக்கியமாக இடைப்பட்ட 15 வருடத்தில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளை பெற்றிருந்தாலும் ஆணி அடித்தாற்போல திருச்சி மாநகராட்சியை விட்டு நகர்வதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னரும் இதே பாணியில் பணியிட மாற்றத்தை ‘கடந்து’ வந்துள்ளனர். மேலும், திருச்சி மாநகராட்சிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட மற்ற மாவட்ட அதிகாரிகளும் அதிக வருடங்கள் ஓரே இடத்தில் பணியாற்றியவர்கள்தான் என்கிறார்கள். அவர்களும், இந்த பணியிட மாற்றத்தை விரும்பவில்லை என்கிறார்கள்.
யாரை, எப்போது, எங்கு பணியாற்ற பணித்தாலும் தட்டாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு ஊழியர்களுக்குரிய கடப்பாடுகளுள் ஒன்று. ஒருவேளை உயர் அதிகாரி தங்களை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்றால், அதனையும்கூட அவர்களுக்கென்று உள்ள சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து அவர்களின் வாயிலாக முறையீட்டை சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கோ அமைச்சருக்கோ தெரிவிக்கலாம்.
மாறாக, அரசியல்வாதியை போல பவ்யமாக அமைச்சரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக அமைந்திருக்கிறது.
– ஆதிரன்.