அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?
அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.
திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலுக்கு துணை போனார்களா அதிகாரிகள் ? நடந்தது என்ன ?
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில், அமலாக்கத்துறை சீல் வைத்த மணல் குவாரியிலிருந்து 14 டாரஸ் 7 ஜேசிபி இயந்திரங்களில் ஒரு கும்பல் மணல் கடத்தியதாகவும்; உள்ளூர் மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இலால்குடி போலீஸ் டி.எஸ்.பி. ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும்; போலீசாரை கண்டதும் மணல் கடத்திய கும்பல் தப்பி ஓடிவிட்டதாகவும் இணையத்தில் செய்தி ஒன்று உலவி வருகிறது.
இதே செய்தியை, மற்றொரு தரப்பினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை கையும் களவுமாக போலீசிடம் பிடித்துக் கொடுத்தும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து லோக்கல் போலீசார் மேற்படி நபர்களை தப்பவிட்டு விட்டதாகவும் தகவல் பரப்பி வருகின்றனர்.
முதல் விசயம், இந்த விவகாரம் மார்ச் 30-ஆம் தேதியன்றே நடைபெற்ற ஒரு சம்பவம். மதியம் சுமார் 2 மணியளவில் டாரஸ் வண்டிகளுடன் ஆற்றுமணலை அள்ளுவதாக லோக்கல் போலீசாருக்கு தகவல் போயிருக்கிறது. இந்த விவகாரம் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாரின் கவனத்திற்கும் உடன் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அவரது உத்தரவின்பேரில், இலால்குடி டி.எஸ்.பி. ரகுராஜபதி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர், 4 எஸ்.ஐ. கொண்ட போலீசு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். டாரஸ் வண்டியில் வந்தவர்கள், பொதுப்பணித்துறையின் அனுமதி கடிதத்தை காட்டியிருக்கின்றனர். கோயம்புத்தூர் அருகே ஒரு அரசுப்பள்ளியின் கட்டுமானத் தேவைக்காக அந்த அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் அந்த அனுமதி கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், ஸ்ரீரங்கம் தாசில்தார், திருச்சி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆகியோரின் உறுதிபடுத்துதல் மற்றும் சரிபார்த்தலுக்குப் பிறகே, அதாவது மூன்று நாட்களுக்குப் பின்னரே மேற்படி வாகனங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
“மணலை திருடுபவர்கள் பகல் 2 மணிக்கு வருவார்களா? அவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருந்தார்கள். எஸ்.பி. சார் உள்ளிட்டு உயர்அதிகாரிகள் அதனை சரிபார்த்து உறுதிபடுத்தியதையடுத்து, டி.எஸ்.பி. சார் வாகனங்களை விடுவித்திருக்கிறார். இதில் தேவையில்லாமல் எனது பெயரையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்து, இந்த மணல் குவாரி சீல் வைக்கப்படுவதற்கு முன்பாகவே, குறிப்பிட்ட அளவு மணலை வெளியில் ஸ்டாக் வைத்திருந்தார்கள். அந்த வகையில் 34 யூனிட் மணல் இருப்பில் இருந்தது. அந்த மணலை எடுப்பதற்குத்தான் வந்திருந்தார்கள். அவர்கள் ஆற்றுக்குள் இறங்கி மணலை எடுத்திருந்தால் இந்நேரம் ரிமாண்ட் செய்திருப்போம்.” என்கிறார், கொள்ளிடம் எஸ்.ஐ. ரெஜி.
இதே தகவலை, ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமாரும் உறுதிபடுத்தியதோடு, கூடுதல் விவரங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கூறினார், அவர்.
நெருப்பில்லாமல் புகையுமா? என்ற சந்தேகம் நெருட விசாரணையில் இறங்கினோம். அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டு நடவடிக்கை மற்றும் சீல் வைக்கப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு மணல் அள்ளுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கே ஆயிரம் கட்டுப்பாடுகள் வந்துவிட்ட சூழலில், டாரஸ் வண்டிகளில் வந்து மணல் அள்ளுவது என்பதும் அதுவும் உள்ளூர் மக்களின் கண்களில் படாமல் மணல் கடத்தலில் ஈடுபடுவது என்பது பெரும் சவால் என்கிறார்கள்.
இருப்பினும், தாளக்குடி, உத்தமர்சீலி, கல்லணை சாலையில் அமைந்துள்ள கிளிக்கூடு போன்ற பகுதியில் சிலர் மாட்டு வண்டிகளில் திருட்டு மணல் அள்ளிவருவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
கொள்ளிடம் எஸ்.ஐ. ரெஜி அடிக்கடி தாளக்குடி, உத்தமர்சீலி பகுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள். சமீபத்தில்கூட, நள்ளிரவு 12 மணிக்கு உத்தமர்சீலியில் மணல் அள்ள முயற்சித்த வாகனத்தை சிறைபிடித்திருக்கிறார் எஸ்.ஐ. ரெஜி.
பந்தோபஸ்து ட்யூட்டியாக வெளியூர் செல்லும் நாட்களாக தீர்மானித்து, லோக்கல் ஸ்டேஷனில் உள்ள சில கருப்பாடுகளை கையில் போட்டுக்கொண்டு சிலர் மணல் அள்ளுவதை செய்வதாகவும் கூறுகிறார்கள்.
”இவர் இங்கு இருக்கும் வரையில் இதுவும் சம்பாதிக்காது; நம்மையும் சம்பாதிக்க விடாது”னு லோக்கல் போலீஸ் மத்தியிலேயே கடுப்பு இருப்பதாகவும் ஒரு தகவல். மேலும், கொள்ளிடம் எஸ்.ஐ. ரெஜியின் கெடுபிடியால் மாட்டுவண்டியில்கூட மணலை அள்ள முடியவில்லையே என்ற கடத்தல் பேர்வழிகளின் ஆதங்கமும்தான் பொய்த்தகவலாக உலவி வருவதாக சொல்கிறார்கள்.
அங்குசம் புலனாய்வுக் குழு.