அத்தனை உளவியலும் நாடகத்தோடு நளினப்பட்டு கிடந்தது …
கல்லூரி கலைத் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் முன்னெடுக்கப்பட்ட கலைத்திருவிழா தற்பொழுது கல்லூரிகளை சூழ்ந்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு, கலைத் திருவிழா நிகழ்வுகளை கல்லூரிகளில் கட்டமைத்து மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்து வருகிறது.
பள்ளிகளைப் போல் இல்லாமல் கல்லூரிகளில் நடத்தப்படும் கலைத் திருவிழாக்களில் மாணவர்களின் கலைத்திறன்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவை கல்லூரிக்கு வெளியில் இருந்து வரவழைத்து நடத்துவது சிறப்பு. நம்பகத்தன்மையை கூட்டும்.
இன்று புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் நடுவராகப் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
ஐடியா மணி – இப்படி ஒரு போட்டி. தமிழ்நாடு அரசின் “ஸ்டார்ட் அப்” திட்டத்தை மனதில் கொண்டு புதிய புதிய யுக்திகளை வழங்கும் மாணவர்களை அடையாளம் காண்பதற்கும், புதிய ஸ்டார்ட் அப் சிந்தனைகளை மாணவர்களிடம் கிளறுவதற்குமான சிறப்பான போட்டி.
நிறைய மாணவிகள் தங்களின் வணிக உத்திகளை விளக்கிய விதம் அருமை. ஸ்டார்ட் அப் என்றாலே என்ன என்பது அறியாத உலகத்திற்குள் வணிக உத்திகளை வகுத்து வழங்கிட கல்லூரி மாணவிகளை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது. கல்லூரி கல்விக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான முன்னோட்டமாக பலருக்கும் இந்த போட்டிகள் அமைந்தன. பங்கேற்பவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சிந்தனை வளத்தை இந்த போட்டி வழங்கியது.
வணிகவியல் பாடம் பயின்ற எனக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிக்குச் சென்று வணிகம் பயின்று வந்த மனநிலையை உருவாக்கியது.
“பாலினச் சமத்துவம்” இந்தத் தலைப்பில் நாடகங்கள் அரங்கேறின. கல்லூரி மாணவிகளின் துடிப்பான நடிப்பில் பாலின சமத்துவம் பேசியது சிறப்பு. தந்தைகளின் பாராமுகமும், தாயாரின் அரவணைப்பும், தம்பிகளின் கரிசனமும், ஆணாதிக்கம் பேசும் அண்ணன்களும், பாட்டி தாத்தாக்களின் மனநிலையும் நாடகங்களோடு பிணைந்து நம்மோடு பயணப்படும் மனிதர்களின் சொல்லாடல்களை வசனமாக்கித் தந்தது.
ஆண் பெண் சமத்துவம் மட்டுமே பாலின சமத்துவம் அல்ல மூன்றாம் பாலினத்தவரின் உரிமை குரலும் நிகழ்வில் உரத்து முழங்கியது.
கல்லூரி மாணவிகள் சமூகத்தோடு பேச நினைக்கும் பல்வேறு செய்திகளை நாடகமாக்கி நடித்துக் காட்டினர்.
கிராமத்து வாசனை, தந்தைக்கும் மகளுக்குமான பேரன்பு, புறக்கணிக்கப்படும் பெண் பிள்ளைகளின் குமுறல்கள், திருநங்கைகளின் வாழ்வியல் என அத்தனை உளவியலும் நாடகத்தோடு நளினப்பட்டு கிடந்தது.
நிகழ்வில் உடன் நடுவர்களாக பங்கேற்ற மரியாதைக்குரிய தோழர்கள் கஸ்தூரிரங்கன், மைதிலி கஸ்தூரிரங்கன் இருவரின் தெரிவும் என் தெரிவும் ஒன்றாக இருந்தது. சமூக முற்போக்கு தளத்தில் பயணிக்கும் அன்புத் தோழர்களோடு இணைந்து கொண்டதில் பெரும் மகிழ்வு.
வாய்ப்பினை உருவாக்கித் தந்த அன்பு தங்கை முனைவர் சண்முகப்பிரியாவுக்கு ( Shanmuga Priya) பேரன்பும் நன்றியும்.
நாங்கள் நடுவராக பங்கேற்ற இந்த இரு நிகழ்வுகளையும் தாண்டி சிலம்பம், ஆடை அலங்காரம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இது போன்ற போட்டிகள் சமூகத்தையும் சேர்த்துக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை கல்லூரி மாணவர்களுக்கு வழங்குகிறது.
உயிரோட்டமாக நிகழ்வுகளை நடத்திய கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.
வாழ்த்துகளுடன்…
— மெய்ச்சுடர், ஆசிரியர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.