சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, அடுத்த மாதம் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். தற்போது இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்களை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்ஷித் ராணா உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்.
இந்த அணியை பொறுத்தவரையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப் ஆர்டரில் எதிரணியை சிதறடிக்க சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆட்டத்தை நிதானமாக கொண்டு செல்ல சுப்மன் கில் அனுபவம் பெரிய உதவியாக இருக்கும். அதே போல் மிடில் ஆர்டரில் சிக்ஸர்களை பறக்க விட ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல் ஆகிய அதிரடி ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.
எதிரணி விக்கெட்களை வீழ்த்த சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நெருக்கடி தரலாம். ஸ்டம்புகளை பறக்க விட வேகப்பந்து வீச்சில் ஜஸ்பீரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த தொடருக்கு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை அணியில் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்