லைசன்ஸ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் ! தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் பேக்கிங் லைசன்ஸ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி (48) விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பூசாரெட்டிபட்டியை சேர்ந்த சங்கரநாராயணன் (50) பந்தல்குடியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 9.12.2025 அன்று அவரது கடையில் ஆய்வு நடத்திய தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி, பேக்கிங் செய்யப்பட்ட பருப்பு பாக்கெட்டுகளில் விலை மற்றும் தேதி குறிப்பு இல்லாததால் ரூ.5,000 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அந்த அபராதத் தொகையை சங்கரநாராயணன் செலுத்தியுள்ளார்.
பின்னர், “பேக்கிங் லைசன்ஸ் பெற்று தருகிறேன்” என கூறி அதற்காக ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என சாந்தி கேட்டதாக சங்கரநாராயணன் தெரிவித்தார். லஞ்சம் வழங்க மறுத்த அவர், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.15,000 நோட்டுகளை இன்று அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள அலுவலகத்தில் சாந்தியிடம் வழங்கிய போது, அங்கு மாறு வேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் மற்றும் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீசார், ரூ.15,000 லஞ்சம் வாங்கிய சாந்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
அவரிடமிருந்து லஞ்சத் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்கிய சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.