துரைவைகோ – திருமா – திமுக கூட்டணிக்குள் ஆடுபுலி ஆட்டம் !
துரைவைகோ – திருமா – திமுக கூட்டணிக்குள் ஆடுபுலி ஆட்டம் !
பாமகவை, திமுவுக்கு அழைக்கும் மதிமுக
கூட்டணியில் இருக்கும் விசிக என்ன செய்ய போகிறது
கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ,“மதிமுக திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கும். திமுக கூட்டணி இன்னும் பலம் பெறப் பாட்டாளி மக்கள் கட்சி இணையவேண்டும். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சித் தலைமை, தொண்டர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விரும்பினால் அவர்களின் கோரிக்கையை ஏற்றுப் போட்டியிடுவேன்” என்று கூறினார்.
கடந்த வாரத்தில் டிசம்பர் 4ஆம் நாள் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் இணைந்து சென்னையில் திருமண நிச்சயதார்த்த விழாவொன்றில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசைச் சந்தித்தனர்.
தொடர்ந்து, டிசம்பர் 5ம் நாள் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமா,“மதவாத பாஜக, சாதியவாதப் பாமக இல்லாத கூட்டணியில் விசிக, இடம்பெறும். இருக்கும் கூட்டணியிலிருந்தும் விசிக வெளியேறும்” என்று கூறியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொல்.திருமா தெரிவித்த இந்தக் கருத்துக்குத் திமுக தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாமல் இதுவரை அமைதி காத்து வருகின்றது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ டிசம்பர் 7ம் நாள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘திமுக கூட்டணி வலிமைபெறப் பாமக சேரவேண்டும்” என்று கூறியிருப்பது விசிக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய வாதக் கட்சி என்று விசிக விமர்சனம் செய்யும் பாமக திமுக கூட்டணியில் இணையவேண்டும் என்று துரை வைகோ தெரிவித்திருப்பது அவரின் தனிப்பட்ட கருத்தா? கட்சியின் கருத்தா என்பது தெரியவில்லை. இது குறித்து மதிமுக தலைமையும் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் உள்ளது. ஒருவேளை விசிகவை வெளியேற்றத் திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு மறைமுக மதிமுக ஆதரவு தெரிவிக்கின்றதோ என்ற ஐயம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக வெளியேறும் என்பதைத் தெரிந்தே எப்படித் துரை வைகோ கருத்து தெரிவித்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கடந்த டிசம்பர் 9ஆம் நாள் மதுரையில் பெருங்குடி விமானநிலையம் வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைத்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையைத் திமுக தலைவர் மற்றும் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில் ஸ்டாலின் திருமாவைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். பதிலுக்குத் திருமாவும் ஸ்டாலினைப் பாராட்டினார். இதைப் பார்க்கும்போது திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து இருக்கவே விரும்புகிறது என்பது தெளிவானது. என்றாலும் பாமகவை ஏன் திமுகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதும் புதிராகவே இருக்கின்றது.
துரை வைகோவின் பேச்சு குறித்து மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதப் பாஜக தோற்கடிக்கப்படத் திமுகக் கூட்டணி இன்னும் வலிமைபெற வேண்டும் என்ற வகையில் துரை வைகோ கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் சாதியவாத பாமக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தன் விருப்பத்தைத் துரை வைகோ தெரிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. இது துரை வைகோவின் தனிப்பட்ட கருத்தா? மதிமுகவின் கருத்தா? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்திய அளவில் மதவாதம் பேராபத்து என்றால் மாநில அளவில் சாதியவாதம் என்பது பேராபத்துதான் என்பதை ஏன் துரை வைகோ உணரவில்லை என்பது தெரியவில்லை. அவர் பெருமாள் மீது கொண்ட பக்தி மதவாதத்தை எதிர்க்கவைக்கிறது.
ஆனால் சாதியவாதத்தை ஆதரிக்க வைக்கிறது என்றால் துரை வைகோவுக்கு அரசியலில் இன்னும் தெளிவு ஏற்படாமல் இருக்கிறார் என்பதையே உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. துரை வைகோ நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது ஏறத்தாழ உறுதியான ஒன்று. இதை எதிர்க்க ஆள்இல்லாத நிலையில், கட்சியும் தொண்டர்களும் வற்புறுத்தவேண்டும் என்று ஏன் துரை வைகோ விரும்புகிறார்? என்பதில் பெரிய இரகசியம் ஒன்றுமில்லை என்பதே உண்மை. மதிமுக விசிக பிரச்சனையில் கவனமாகக் கருத்தைத் தெரிவிக்கவேண்டும்’ என்று கூறினார்.
திருச்சி மாவட்ட விசிக ஒன்றியச் செயலாளர் ஒருவர் துரை வைகோ கருத்து தொடர்பாக நம்மிடம் பேசினார். ‘விசிக புரட்சியாளர் அம்பேத்கர், பகுத்தறிவாளர் தந்தை பெரியார் இருவரின் தத்துவங்களைச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கான இயக்கம். மதிமுக எந்தத் தத்துவத்தில் இயங்குகிறது என்பது துரை வைகோவுக்குத் தெரியுமா? வைகோ என்னும் தனிநபரை நம்பியே மதிமுக இயங்கி வருகின்றது என்ற உண்மை எல்லாரும் அறிந்ததே. தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பில் உள்ள துரை வைகோ கூட்டணி குறித்துத் தெரிவிக்க அவருக்கு உரிமை இல்லை. குறிப்பாகச் சாதியவாதப் பாமக சேர்க்கப்பட வேண்டும் என்பதில் விசிக திமுக கூட்டணியில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகவே நாங்கள் கருதுகிறோம். மதிமுக தலைமை இது குறித்துத் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும்’ என்று கேட்டுக்கொள்கிறோம் என்று முடித்துக்கொண்டார்.
திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா? என்பதைத் தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு திமுகவிற்கு உள்ளது. கூட்டணியில் கட்சிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து எடுக்கப்படவேண்டிய முடிவு. அதில் துரை வைகோ கருத்து தெரிவிப்பது என்பது கட்டுச்சோற்றில் பெருச்சாளியை வைத்ததுபோல் உள்ளது. விசிக கூட்டணியிலிருந்து விலகுவது மதிமுகவுக்கு எப்படி வலிமை சேர்க்கும்? பாமக இல்லாமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகக் கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களில் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கும் நிலையில், 2024 தேர்தலில் திமுகக் கூட்டணியில் பாமக இடம்பெறுவதால் எப்படிக் கூட்டணி பலம் பெறும் என்பது தெரியவில்லை. துரை வைகோ ஆரம்பித்து வைத்துள்ள இந்தக் கருத்து எங்கே போய் முடியும்? என்பது விரைவில் தெளிவாகிவிடும்.
ஆதவன் –