தைரியமாக சாகலாம் ! அன்பின் முதல்வர் அவர்களுக்கு, வணக்கம் சத்தமே இல்லாமல்…….
தைரியமாக சாகலாம்
****************************
அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்
சத்தமே இல்லாமல்,
எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் நீங்கள் செய்திருக்கும் ஒரு விஷயம் குறித்து நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
சென்னை சைதை பகுதியில் உள்ள 150 பெண்களுக்கு நீங்கள் ஆட்டோ வழங்க இருக்கிறீர்கள்
தீவுத் திடலில் நிகழ்ச்சி
ஆட்டோவிற்காக ஒரு லட்சம் ரூபாய் மான்யம்
மீதித் தொகை வங்கிக் கடன்
அதிலும் இரண்டு தவனைகளை பஜாஜிடமே வாங்கி அந்தத் தொகையை நாளை பயனாளிகளிடம் வழங்குகிறீர்கள்
இவை எல்லாம்கூட சாதாரணம் தான்
பயானாளிகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் மா.சு அவர்கள் ஏற்பாடு செய்கிறார்.
பயிற்சி கொடுத்து லைசென்ஸ் பெற்று பேச் வாங்குவதற்கான தொகையையும் அமைச்சர் ஏற்பாடு செய்கிறார்.
பயனாளிகள் சிலர் பயிற்சி பெறுவதை நான் பார்க்க வாய்த்தது
பயிற்சி கொடுப்பவர்களுள் ஒருவரான புஷ்பராஜ் என் தோழர்
அவரது இணையர் அஞ்சலியும் ஒருவர்
நேற்று சென்னை வந்திருந்த என்னை அழைத்துக் கொண்டு போகும் போது தான் பயனாளிகளுக்கான பேச் வாங்கினார்.
இதிலும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்ல இயலாது
தானே பயன்படுத்தாமல் வாடகைக்கு விடக்கூடும்
கணவன்மார்கள் ஓட்டக்கூடும்
ஆனாலும் இவற்றைக்கூட தவறென்று சொல்ல முடியாது
150 பெண்களுக்கு ஆனைச் சார்ந்திருக்காமல் சுயமாக நகர ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள்
புஷ்பராஜ் சொன்னார்,
”இனி அஞ்சலி என்னை எதிர்பார்த்து இருக்கத் தேவையில்லை தோழர்
நான் இல்லாவிட்டாலும் சமாளிச்சிடுவாங்க
தைரியமாக சாகலாம்”
இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நம்பிக்கையை எந்த டிக்ஷனரியிலும் தேட இயலாது
நமக்குப் பின்னால் குடும்பம் என்ன ஆகுமோ என்ற பயம் இருக்கிறது பாருங்கள்
அது மிக மிகக் கொடுமையானது.
அந்தக் கொடுமையான பயத்தைப் போக்கி ஒரு 150 குடும்பங்களில் நாளை நிம்மதியை விதைக்கிறீர்கள்
நெகிழ்ந்து உங்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்.
மகிழ்ந்திருங்க சார் !
மிக்க நன்றி
அன்புடன் இரா. எட்வின் 04.10.2023