ஆட்டோகிராஃபில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோக்கள்! – ரீ யூனியன் & ரீ ரிலீஸ் நியூஸ்!
21 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004 பிப்ரவரியில் ரிலீசாகி சூப்பர்டூப்பர் ஹிட்டானது சேரனின் ‘ஆட்டோகிராஃப்’. இளைஞர்களின் மனதில் மட்டுமல்ல, அனைவரின் மனங்களிலும் பழைய நினைவுகளைக் கிளறி இன்புறச் செய்த அப்போதைய ஆட்டோகிராஃபை இப்போதைய டிஜிட்டல் டெக்னாலஜியின் உதவியுடன் 50 லட்சம் செலவழித்து வரும் 14-ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் பண்ணுகிறார் கதையின் நாயகனும் இயக்குனருமான சேரன்.
இதனை மீடியாக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ‘ஆட்டோகிராஃப் ரீ யூனியன்’ என்ற பெயரில் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நவம்பர்.06—ஆம் தேதி நடத்தினார் சேரன். இந்த அமர்க்களமான விழாவின் சிறப்பு விருந்தினராக டைரக்டரும் போராளியுமான அமீர், சேரனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து இப்போது புகழ்மிகு டைரக்டர்களாகிவிட்ட பாண்டிராஜ், கே.பி.ஜெகன், ராமகிருஷ்ணன், உமாபாதி, நடிகர் ஆரி, த.வா.க.ஜெகதீசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் படத்தின் நம்பிக்கை நாயகியான சினேகா, கேமராமேன் விஜய்மில்டன், மியூசிக் டைரக்டர் பரத்வாஜ், ஆர்ட் டைரக்டர்கள் வைரபாலன், ஜே.கே.ஆகியோரும் ஆஜராகி, சேரனை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
படத்தில் நடித்த இளவரசு பிளாக் பாண்டி, பெஞ்சமின் ஆகிய மூவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி, அவர்களின் பழைய ஞாபகங்களை பேசச் சொன்னார் டைரக்டர் சேரன்.
சேரனின் அசிஸ்ண்டெண்டாக இருந்த உமாபதி பேச்சு தான் ஒட்டு மொத்த அரங்கையும் கலகலப்பாக்கியது. அவரின் சுதந்திரமான பேச்சைக் கேட்டு கைதட்டி ரசித்தார் சேரன்.
அதன் பின் பரத்வாஜ், பின்னணி இசையமைத்தவர்களில் ஒருவரான முரளி, ஆர்ட் டைரக்டர்கள் என பேசிய அனைவருமே அப்போது இந்தப் படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதை ரிலீஸ் பண்ண சேரன் பட்ட கஷ்டங்களையும் வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
“அப்போதிருந்து இப்போது வரை எனக்கு உண்மையான நண்பனாக சேரன் இருக்கிறார் “ என உருக்கமுடன் பேசினார் நாயகி சினேகா.
டைரக்டர் பாண்டிராஜ் பேசும் போது,
“மொதல்ல இந்தக் கதை விஜய்யிடம் போய், அதுக்குப் பிறகு பிரபுதேவா, ஸ்ரீகாந்த் என போய் கடைசியில் வேறு வழியில்லாமல் தான் சேரன் நடித்தார். எனக்கும் ராமகிருஷ்ணனுக்கும் இதில் உடன்பாடில்லை. ஆனால் படம் செம ஹிட்டனாதும் சந்தோஷப்பட்ட முதல் இரண்டு நபர்கள் நாங்க தான்” என்றார்.
“சேரன் இந்த மண்ணின் கலைஞன், மகத்தான கலைஞன்” என்றார் டைரக்டர் அமீர்.
சீனியர் டைரக்டர் பாலுமகேந்திராவுக்கு மட்டும் இதே பிரசாத் தியேட்டரில் படத்தைப் போட்டுக் காட்டிய பிறகு நடந்த சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லி கண்கலங்கினார் சேரன். “இன்றைய இளைஞர்களுக்காகவே கலர் கரெக்ஷன், சவுண்ட் கரெக்ஷன் பண்ணி ரிலீஸ் பண்ணுகிறேன். மீண்டும் இந்த ‘ஆட்டோகிராஃப்’ ஜெயிக்கும், சினிமாவில் எனது புதிய அத்தியாமும் துவங்கும்” என நம்பிக்கையுடன் பேசினார் சேரன்.
— ஜெ.டி.ஆர்












Comments are closed, but trackbacks and pingbacks are open.