அங்குசம் பார்வையில் ‘அயலான்’ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘அயலான்’.
தயாரிப்பு: ‘ கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கே.ஜே.ராஜேஷ் & Phantom FX. டைரக்டர்: ரவிக்குமார். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, பாலசரவணன், யோகி பாபு, கருணாகரன், முல்லை ஞானம். ஒளிப்பதிவு: நீரவ் ஷா, இசை: ஏ.ஆர்.ரகுமான், எடிட்டிங்: ரூபன், பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.
ரஷ்யாவின் சைபீரியாவில் கிடைக்கும் விண்கல் ஒன்று வெளிப்படுத்தும் கதிர் வீச்சைப் பயன்படுத்தி பூமிக்கடியில் ஆழ்துளை போட்டு கிடைக்கும் நோவா எரிவாயு மூலம் அழிவு சக்தி ஆயுதங்கள் தயாரித்து விற்க முயற்சிக்கிறான் வில்லன் ஆர்யன்(ஷரத் கேல்கர்). இதை வைத்து கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் ஆய்வகத்தில் சோதனை நடத்தும் போது பெரும் விபத்துக்குள்ளாகி பல ஆயிரம் மக்கள் செத்து மடிகிறார்கள். அதே திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த, கார்ப்பரேட் கயவர்களுடன் கைகோர்க்கிறார் ஷரத்.
இவரின் ஆபத்தான லாப வெறியை முறியடித்து பூமியில் மனித இனத்தைக் காப்பாற்ற வேற்று கிரக வாசிகளின் Rep பாக பூமிக்கு வருகிறார் அயலான். கொடைக்கானல் பூம்பாறையில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதால் பிழைப்பு தேடி சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். இயற்கை விவசாயம், வன உயிரினங்கள் மீது அளப்பரிய பிரியம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயனைச் சந்திக்கிறார் அயலான். இருவரும் சேர்ந்து வில்லனை வீழ்த்த களம் இறங்குகிறார்கள்.
இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்வது தான் இந்த ‘அயலான்’. இதை வெறும் ஃபேண்டஸி படமாக, செப்படி வித்தை காட்டும் சித்திரப் படமாக காட்டாமல், கர்ம சிரத்தையுடன் கதைக் கருவை உருவாக்கி மானுடத்தின் மீது மாறாத பற்று கொண்டு திரைக்கதையை வடிவமைத்து, கதாபாத்திரங்களை வலுவாக கட்டமைத்து சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் சினிமாவைப் படைத்த இயக்குனர் ரவிக்குமாரை ஆரத்தழுவி, உச்சிமுகர்ந்து பாராட்டலாம்.
தமிழன் என்ற வகையில் நாம் பெருமிதம் பொங்க , மனம் நிறைய வாழ்த்தலாம். படத்தைப் பார்த்து, அனுபவித்த உண்மையான ரசிகர்கள் அனைவருக்கும் இந்த சிந்தனை தான் தோன்றும். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்திருந்தாலும் அதற்கு உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, நம் உள்ளத்திற்குள் அயலானை உலவவிட்டிருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு சீனில் இயற்கையின் மீதான அன்பையும் மனித இனத்தின் மீதான பாசம், கோபம் ஆகியவற்றையும் சரிசமமாக திரைமொழியில் பேசியிருக்கிறார் ரவிக்குமார். இவரின் இந்த திரை மொழிக்கு தனது நடிப்பு மூலம் உயிர்ப்பு அளித்து நம் மனம் முழுவதும் ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறார் கதாநாயகன் தமிழ் (சிவகார்த்திகேயன்).
அறிவியல் கண்காட்சியில் ஒரு அரசுப் பள்ளி மாணவன்( நல்லா கவனிங்க அரசுப் பள்ளி மாணவன்) ” என் பேரு ஏலியன். வேற்று கிரகத்தில் இருந்து 20 லட்சம் கிலோமீட்டர் டிராவல் பண்ணி வர்றேன்” என எஸ்.கே.விடம் சொல்லும் போது, “இருபது லட்சம் கிலோமீட்டர்ல இருந்தாடா வர்ற. பயபுள்ள எத்தனை டோல்கேட்ல , எம்புட்டு பணத்தை கட்னானோ” என சிவகார்த்திகேயன் பேசுவது வசனம் அல்ல, டிஜிட்டல் இந்தியாவின் கோரமுகம், பணவெறி அரசாங்கத்தின் சுரண்டல் முகம். இப்படி ஏராளமான சீன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
கலகலப்புக்கு யோகி பாபு, கருணாகரன் டீம், கொஞ்சம் ரொமான்ஸுக்கு ரகுல் ப்ரீத்சிங், அம்மா சென்டிமெண்டுக்கு பானுப்ரியா என சரிவிகிதத்தில் திரைக்கதையில் மிக்ஸ் பண்ணியிருக்கார் இயக்குனர் ரவிக்குமார். ரவிக்குமாரின் அசாத்திய உழைப்புக்கு சற்றும் குறைவில்லாத உழைப்பைக் கொட்டியிருக்கிறார் கேமரா மேன் நீரவ் ஷா. பாடல்கள் ஹிட் அடிக்காவிட்டாலும், இந்த உயரிய தொழில்நுட்ப சினிமாவுக்கு தனது பின்னணி இசையால் பெரிதும் துணை நிற்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
ஆர்யனை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்த தமிழனைப் படைத்த இயக்குனர் ரவிக்குமார் நமது பாசத்திற்குரியவர், நம்பிக்கைக்குரியவர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டியவன் இந்த அயலான். இவன் நம்மவன்.
– மதுரை மாறன்