அக்கிரமம், அநியாயம், பொய், அடாவடித்தனம், மதவெறி வன்முறை ஆகியவற்றின் அடையாளமாக அயோத்தி ராமர் கோயில் எழுந்துள்ளது!

0

அக்கிரமம், அநியாயம், பொய், அடாவடித்தனம், மதவெறி வன்முறை ஆகியவற்றின் அடையாளமாக அயோத்தி ராமர் கோயில் எழுந்துள்ளது!

அயோத்தி
அயோத்தி

இராமர் கோயில் என்பது பாஜகவின் அரசியல் திட்டம். 1949 டிசம்பர் 23- அன்று நள்ளிரவில் இராமர், இலட்சுமணர், சீதை சிலைகளைத் திருட்டுத்தனமாகப் பாபர் மசூதிக்குள் வைத்ததன் மூலம் பிரச்சினை தொடங்கியது. புகைந்து கொண்டிருந்தது இராமர் கோயில் பிரச்சினை, 1989இல் ராம ராஜ்ஜியம் மற்றும் ராமருக்குக் கோயில் என்று அரசியல் திட்டமாக முன்வைக்கப்பட்டு, பிரச்சினை மேலும் சூடு பிடித்தது. இராமபக்தி பெரிய அளவுக்கு ஊட்டப்பட்டு, அது இஸ்லாமியருக்கு எதிரான வெறியாக மாற்றப்பட்டது. 1992 இல் பாபர் மசூதி உடைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நாடகங்கள் நடத்தப்பட்டு, இப்போது 2024 – இல் இராமர் கோயில் கட்டப்பட்டு விட்டது.

இராமருக்குக் கோயில் கூடாது என்றோ, அதுவும் ஒரு மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டக்கூடாது என்றோ சொல்லுவதற்கு எதிர்க்கட்சிகளுக்குத் த் திராணி இல்லை. இராமர் கோயில் குடமுழுக்கு அறிவிக்கப்பட்டபோது, “இராமர் கோயில் கட்டுமானம் முழுமையற்றதாக உள்ளது; ஆகவே இப்போது குடமுழுக்கு கூடாது” என்று தான் எதிர்க்கட்சிகள் கூறின. இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் ராமராஜ்ஜியம், ராமர் கோயில் என்பது உடன்பாடுதான்.
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு அத்தனையையும்விடப் பெரும்புளுகு இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்பது. அயோத்தியில் இராமர் பிறந்தார் என்றும், அவரே இந்தியாவின் அடையாளம் என்றும் இந்து தேசியவாதிகள் கதை பரப்பி நிலைநிறுத்த முயன்று வருகிறார்கள். இராமர் கதை என்பது நகைப்புக்குரியது என்பது ஓரளவு பகுத்தறிவுள்ள அல்லது அறிவியல் சிந்தனை உள்ள அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

- Advertisement -

அயோத்தி -8
அயோத்தி -8

ஏ.கே. மஜும்தார், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் இராமர் என்று ஒருவர் இருந்ததற்கே சான்று இல்லை என்று கூறுகிறார்கள். வால்மீகி ராமாயணம் மட்டுமே இராமன் பற்றி பேசியது; வேறு சான்றுகள் கிடையாது. இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. திரேதா யுகம் என்பது12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். அதன் பிறகு துவாபர யுகம்; அது 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். இப்போது நடப்பது கலியுகம்; இது 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும். இராமர் திரேதா யுகத்தில் அயோத்தியில் பிறந்தார் என்று இராமாயணம் கூறுகிறது. அவர் பிறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும், அது இடிக்கப்பட்ட இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் மதவெறி பரப்பி, 1992 டிசம்பர் 6 – அன்று பாபர் மசூதியைத் திட்டமிட்டபடியே இடித்து நொறுக்கினார்கள்.

அங்கே அகழ்வாய்வு நாடகம் நடத்தப்பட்டு, பாபர் மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழே தான் இராமர் பிறந்தார் என்று ஒரு உச்ச நீதி மன்றத் தீர்ப்பையும் வாங்கினார்கள். நீதிமன்றமோ மசூதியை இடித்தவர்களுக்கே அந்த இடத்தை உரிமையாக்கியது, இப்போது இராமருக்குக் கோயிலும் கட்டி 22.01.2024 அன்று குடமுழுக்கும் நடத்தப்பட்டு விட்டது. இதுவரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால்,பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் உண்மை. அந்த இடத்தில் அடுத்தடுத்து, இரண்டு பழைய மசூதிகள் கட்டப்பட்டு இருந்ததற்கான அடையாளங்களும், புத்தச் சமயம் முன்பு தழைத்திருந்த பகுதி என்பதால், சில புத்தச் சமயத் தடயங்களும் கிடைத்துள்ள நிலையில், இந்துக் கோயில் அங்கு இருந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

கோயில் அங்கு இருந்ததில்லை என்பது குறித்து ஏராளமான தொல்லியல்_வரலாற்று அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர். இக்கேள்விக்கு விடை காண ஏராளமான அறிக்கைகளையும் பல்வேறு வரலாற்றாளர்களின் கருத்துகளையும் ஊன்றிப் படிக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்குக் கோயில் இருந்தது என்று கூறுபவர்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை. கிடைத்த தடயங்களை ஒழுங்காகப் பதிவு செய்யாத தொல்லியல் துறையின் குறைபாடுள்ள அறிக்கையும், இராமர் பற்றிய நம்பிக்கையும் , உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகள் மிக்க தீர்ப்புமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய கோளாறான தீர்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், இந்துத்துவ ஆதரவுத் தொல்லியலாளர்களைக் களமிறக்கி, இடிக்கப்பட்ட மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று அறிக்கைக்கு மேல் அறிக்கை விடச் செய்தன இந்துத்துவ அமைப்புகள் . அப்படிப் பொய்யான செய்திகளைப் பரப்புவதில் தொல்லியலாளர்களைப் பயன்படுத்துகின்ற போக்கு அதிகரித்துள்ளது.

அயோத்தி
அயோத்தி

அயோத்தி எப்போது தோன்றியது? தொல்லியல் அறிக்கையின்படி கிமு 700 ல் தான் முதன்முதலாக அங்கே மக்கள் குடியிருப்புகளுக்கான அடையாளங்கள் தெரிகின்றன. சரயு ஆற்றில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் அயோத்தி இருந்ததாக இராமாயணம் கூறுகிறது. ஆனால் அயோத்தி சரயு ஆற்றங்கரையிலேயே இப்போது இருக்கிறது. இராமாயணம் கூறுகிறபடி, சரயு ஆறு கங்கையில் சென்று சேர வேண்டும். ஆனால் இங்கே வேறு ஆற்றில் சேருகிறது. ஆய்வு செய்தால் நேபாளத்தில் ஒரு அயோத்தி இருக்கிறது. அது ஒரு நதியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதுதான் இராமர் உண்மையில் பிறந்திருந்தால் அங்குத்தான் பிறந்திருக்க முடியும் என்று ஷேர் சிங் என்ற ஆய்வாளர் தம் கருத்தை முன் வைக்கிறார்.

பாபர் மசூதி இராமர் கோயிலை இடித்து விட்டுக் கட்டப்பட்டதா என்ற கேள்வி இருக்கிறது. பாபர் மசூதி பாபரின் தளபதியாகிய மீர்பாக்கி என்பவரால் கி.பி.1528 ல் கட்டப்பட்டது. பாபர் 1526-இல் இப்ராஹிம் லோடியை வென்று முகலாய ஆட்சியை உருவாக்கினார். 1530 – இல் இறந்து போனார். 1528 – இல் அவருடைய பெயரில் அவருடைய தளபதி மீர்பாக்கி ஒரு மசூதியைக் கட்டினார். கி.பி. 300 இல் இருந்து 1100 வரை அங்கு எந்த விதமான கட்டுமானங்களும் இருந்ததற்கு அடையாளம் இல்லை.

அயோத்தி -2
அயோத்தி -2

இந்து மதச்சார்புள்ள தொல்லியலாளர் பி.பி. லால் 1975 ஆம் ஆண்டின் அறிக்கை படி ( தி வீக், 25.2.1990 ) அங்கு நிலத்தடிக் கட்டுமானங்கள் இருந்ததற்குச் சான்று இல்லை. இராமர் 1100 வரை கடவுளாகவும் கருதப்படவில்லை. இராமர் கடவுளாகவே கருதப்படாத காலத்தில் அவருக்குக் கோவில் எங்கிருந்து வரும்? கிபி 6 – ஆம் நூற்றாண்டில் அமரகோஷ என்ற நூல் வட இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களின் பட்டியலில் அயோத்தியோ, அங்கு ஒரு கோயில் இருந்ததாகவோ குறிப்பிடவில்லை. லட்சுமிதர் என்பவர் 11 – ஆம் நூற்றாண்டில் புனித யாத்திரைக்கான பட்டியல் தருகிறார். அதிலும் இராமர் கோயில் இல்லை. ராமச்சந்திர கத்ரி ஐ.ஏ.எஸ் “ரேடியன்ஸ்” என்ற பத்திரிக்கையில் 12 நவம்பர் 1989 அன்று ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அதில் கிபி 1,100க்குப் பிறகுதான் இராமர் கடவுளாக மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கிறார்.

துளசிதாசரின் ( கி.பி.1532-1623) இராமாயணம் (இராமச்சந்திர மனஸ்) வருவதற்கு முன் இராமர் என்ற பாத்திரம் கடவுளாக மாற்றப்பட்டதில்லை. பாபர் இறந்து இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் துளசிதாசரே பிறக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் வரலாற்று அறிஞர் சர்வபள்ளி கோபால், கி.பி. 1750 க்கு முன்புவரை இந்தியாவில் இராமருக்கு எந்தக் கோயிலும் இருந்ததில்லை என்று குறிப்பிடுகிறார். இராமருக்குக் கோயில்கள் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உருவாகின. ஆகவே, இராமர் கோயிலை இடித்துவிட்டுப் பாபர்மசூதி கட்டப்பட்டதா என்ற கேள்விக்கு, தெளிவாக, தயங்காமல், உறுதியாகப் பதில் கூறலாம்: அப்படி ஒரு கோயிலை இடித்து விட்டுப் பாபர் மசூதி கட்டப்படவில்லை.

பாபர்
பாபர்

பாபர் தன்னுடைய சுயசரிதையான பாபர் நாமாவில் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இங்குள்ள “அந்தி ” என்னும் காற்றைப் பற்றி கூடப் பேசுகிறார். இங்கே இடுப்பிலேயே உழவர்கள் அணிந்து இருக்கக்கூடிய “லங்கூடா” (சிறிய துணி) பற்றிக் கூடப் பேசுகிறார். ஆனால் இராமர் கோயில் என்று ஒன்று இருந்ததைப் பற்றியோ, அதை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது பற்றியோ பேசவில்லை. மாறாக, பாபர் மதச்சகிப்பு தன்மை பற்றி பேசுகிறார். இந்தியாவில் இந்துக்களிடம் மிகுந்த மதச் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் மகன் ஹுமாயுனுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார் (அவர் உயில்). ஆங்கிலேயர்கள் காலத்திலும் கூட அங்கு அயோத்தியில் ஒரு கோயில் இருந்து அது இடிக்கப்பட்டதாக வழக்குகள் பதியப்படவில்லை. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாள் நள்ளிரவில் திடீரென்று ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை மசூதிக்கு உள்ளே வைத்துவிட்டு அடாவடியாக இராமர் அவதரித்து விட்டதாகக் கதை பரப்பினார்கள். இப்படித்தான் பிரச்சனைகள் தொடங்கின.

அயோத்தியிலும் கூட இராமர் பிறந்த இடமாக 30 இடங்களை மகத்துகள் காட்டுகிறார்கள். ஆனால் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று வம்பு வளர்ப்பதில் குறியாக இருந்த விசுவ இந்து பரிசப் போன்ற அமைப்புகள் இராமர் பிறந்த இடங்களாகப் பல இடங்களைக் காட்டிய மகந்துகளையெல்லாம் அடித்து உதைத்தார்கள். அவர்களுக்கு நோக்கம் வம்பு இழுப்பதும், இஸ்லாமியர்களை எதிரிகளாகக் காட்டுவதும், மசூதியை இடிப்பதும்தான்.

பாபர் - மசூதி
பாபர் – மசூதி

1992 டிசம்பர் 6 அன்று மசூதி உடைக்கப்பட்டது; தரைமட்டமாக்கப்பட்டது. 500 ஆண்டுகளாக இருந்த வரலாற்று சின்னம் அடித்து நொறுக்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் அப்போது காங்கிரஸ் அரசுகளே இருந்தன. மத்திய, மாநிலப் பாதுகாப்பு படைகளும் மசூதி இருந்த இடத்தில் பாதுகாப்புக்கு நின்றன. 1992 டிசம்பர் 7 மற்றும் டிசம்பர் 27 ஆகிய காலகட்டத்தில் இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்) “பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டி தருவோம்” என்றார். பா.ஜ.க ஆனாலும் காங்கிரஸ் ஆனாலும் அவர்களுடைய நோக்கம் ஒன்றுதான்.

மசூதி
மசூதி

பாபர் மசூதி இடிப்பில் உள்ள சதிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட லிபரான் குழு 2009 -இல் அறிக்கை அளித்தது .அந்த அறிக்கையில் மசூதி இடிப்பு திடீரென்று நடந்துவிடவில்லை; அது திட்டமிடப்படாதது அல்ல என்று கூறியது. 2010 – இல் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் பாபர் மசூதியின் மையக் குவிமாடத்திற்குக் கீழ்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துக்களில் நம்பிக்கை என்று கூறியதுடன், அதை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிப்பதாகக் கூறியது. அந்த இடத்தில் ஒரு பகுதி முஸ்லிம்களுக்கு என்றும், அந்த இடம் இராமர் கோயில் கட்ட விரும்பிய அமைப்புகளுக்கும் என அறிவித்தது.

2019 .உச்சநீதிமன்றத் தீர்ப்பு ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அளித்தது. மூன்று மாதத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டது. 2020-இல் லக்னோ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் விடுவித்தது. ஏராளமான சான்றுகள், புகைப்படங்கள் இருந்தாலும், சிபிஐ 600 பக்க அறிக்கை அளித்து இருந்தாலும், 27 ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தாலும், 49 தனித் தனி வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டாலும், 351 சாட்சியங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், சான்றுகள் போதவில்லை என்ற ஒற்றைச் சொல்லோடு லக்னோ சிறப்பு நீதிமன்றம் முடித்துக் கொண்டு, குற்றவாளிகளையெல்லாம் விடுவித்தது.

கே.கே. முகம்மது
கே.கே. முகம்மது

பாபர் மசூதி இடிப்பு அப்பட்டமான அயோக்கியத்தனம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற நிலையில், மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது; அதனால் மசூதியை இடித்தது நியாயம் சார்ந்தது என்று காட்டுகிற வகையில், பொய்களுக்கு மேல் பொய்களை மசூதி இடிப்பாளர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நபர்தான் கே.கே. முகமது என்ற தொல்லியல் துறையை . சேர்ந்தவர். பாபர் மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்று சான்றளிக்க அவர் முற்பட்ட நிலையில், கே. கே. முகமதுவின் ஆசிரியர்கள் கூட அவருடைய கூற்றுக்கு வியப்பு தெரிவித்திருந்தார்கள். கே.கே. முகம்மது கூறியது முழுப் பொய். அவரை முன்வைத்து, “ஒரு தொல்லியலாளர்; அவரே கூறிவிட்டார்” என்று மசூதி இடிப்பாளர்கள் பிரச்சாரம் செய்வது அப்பட்டமான ஏமாற்றுத்தனம்.

1976 -77 இல் அகழ்வாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட அலங்காரத்தூண் பௌத்த மடத்திற்கு உரியது. தங்களுடைய சமய அடையாளங்கள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் பௌத்தர்கள் அது குறித்துக் கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டுகோள் வைத்தபோது அதை ஏற்க மறுத்து விட்டார்கள்.

4 bismi svs

2003 -இல் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் பாபர் மசூதி பகுதிக்குக் கீழே ஆட்டு இறைச்சியும் பிற விலங்கு இறைச்சிகளும் நீண்ட காலமாக அங்கிருந்தோர் உண்டதற்கு அடையாளமாக வெட்டப்பட்ட சிறு சிறு எலும்புத் துண்டுகள் கிடைத்ததற்கும், மூன்று மனித எலும்புக்கூடுகள் கிடைத்ததற்கும் கடைசி வரை தொல்லியல் துறையினர் விளக்கம் கூறாமல் குழிகளை இழுத்து மூடினார்கள்.
அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அடாவடியாகத் தொல்லியல் துறைக்கு இந்துத்துவவாதிகளைத் தலைவராக நியமித்து மிகப்பெரிய வரலாற்று ஏமாற்று வேலையைச் செய்து முடித்தார்கள்.

பாபர் மசூதி இருந்த வளாகத்தில் அகழ்வாய்வு நடத்தப்பட்டபோது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நேரில் பார்வையாளர்களாக இருந்த தொல்லியலாளர்கள் சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகியோர் The Wire இதழுக்கு அளித்த நேர்காணலில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கு எந்தச் சான்றுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

K K Muhammed with B B Lal.
K K Muhammed with B B Lal.

2003 அகழ்வாய்வின்போது ஆட்டுக்கால் சூப் எலும்புகள் கிடைத்தன. அங்கே யார் வாழ்ந்தது? யார் சாப்பிட்டது? இந்தியத் தொல்லியல் துறை வாயை மூடிக் கொண்டது. அகழ்வாய்வில் விலங்குகளின் எலும்புகளும் மனித எலும்புகளும் கிடைத்த போது, வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப் இப்பகுதியில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் இருந்தன என்று கூறினார். இப்பகுதியில் கோயில் இருந்திருக்குமானால் மனித எலும்புக்கூடுகளும், இறைச்சிக்காக உண்ணப்பட்ட விலங்குகளின் எலும்புகளும் அங்கே கிடைத்திருக்காது என்று கூறினார்.

விலங்குகளின் இறைச்சி உண்ணப்பட்ட அடையாளங்கள் இருப்பதால் அது ஒரு மக்கள் வாழ்ந்த இடமாக, அதிலும் இறைச்சி உணவு உண்பவர்கள் வாழ்ந்த இடமாக மட்டுமே இருக்க முடியும் என்பதையும் கூறினார். அது ஒரு இஸ்லாமியர்கள் வாழ்விடமாக இருந்ததனால், அங்கே 1528 இல் ஒரு மசூதி கட்டி வைக்கப்பட்டது. ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியத்ா என்னும் இந்திய தொல்லியல் துறை எலும்புகள் கிடைத்ததைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் அந்த எலும்புகள் ஏன் அங்கே கிடைத்தன? எப்படி அங்கே வந்தது? என்பதை விளக்கவில்லை( Layers of Truth, The Week, 7.9.2003).

1975 -76 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் பி.பி. லால் அயோத்தியில் விரிவான தொல்லியல் ஆய்வை மேற்கொண்டார். பி.பி. லால் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஆவார். 1968, 1972, 1975 -76 ஆகிய ஆண்டுகளில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் குறித்த தொல்லியல் ஆய்வை அவர் மேற்கொண்டார். அயோத்தியா உள்ளிட்ட இராமாயணத்துடன் தொடர்புடைய ஐந்து இடங்களில் அகழ்வாய்வைச் செய்தார். இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. 1975 மற்றும் 1985 க்கு இடையில்ஒரு ஆய்வுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அயோத்தியில் இராமாயணத்தில் வரக்கூடிய இடங்கள் குறித்த ஆய்வுத்திட்டம் அது.

ஆய்வுக்கிடையில் அயோத்தியில் கிடைத்ததிலேயே பழமையான பொம்மை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக அகழ்வாய்வு செய்யப்பட்ட 14 இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். பி.பி. லால் அகழ்வாய்வு செய்து கண்டெடுத்த அந்த உருவம் ஒரு சமணத் துறவியுடையது என்று அறிவிக்கப்பட்டது. 1977-இல் தம்முடைய ஆய்வில் முக்கியமாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பி.பி. லால் கூறிவிட்டார்.

1990-இல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இராமர் கோயில் பிரச்சனையை முண்டியடித்துக் கொண்டு எழுப்பும்வரை முறையான ஆய்வாளராக இருந்த பி.பி. லால் அதன் பிறகு ஆர் எஸ் எஸ் இதழ்களில் எழுத ஆரம்பித்தார். 2003 – இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பி.பி.லால் இந்தியத் தொல்லியல் துறைக்கு 1989இல் ஒரு ஏழு பக்க அறிக்கை அளித்ததாகக் குறிப்பிட்டார் அதில் பாபர் மசூதி கட்டிடத்திற்கு அருகில் ஒரு தூண் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார் இதன் பிறகு 12 ஆண்டு காலத்திற்கு எவ்வித ஆய்வு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இராமர் கோவில்
இராமர் கோவில்

அவருடைய இறுதி அறிக்கை என்பது கடைசி வரை சமர்ப்பிக்கப்படவே இல்லை. 7 -பக்க அறிக்கையும் கூட 1989 இல் தான் வெளியிடப்பட்டது. 2008 -இல் “ராமன்: வரலாற்று தன்மையும், கோயிலும்,சேதுவும், என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில், பாபர் மசூதி அருகே இருக்கும் இறந்தவர்களைப் புதைக்கும் இடத்தில்உள்ள கல்லில் இந்து தேவதைகள் உருவம் உள்ளதாகவும் தெரிவித்தார். அது முதலில் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. ஆனால் இந்து தேசியவாதிகள் மசூதியின் கீழே கோயில் இருந்தது என்பதை வலுப்படுத்த, தங்கள் பிரச்சாரத்திற்கு இதைப் பயன்படுத்திக் கொண்டனர். அக்கல்லில் அரபி மொழியில் புனித வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. அது வசதியாக மறைக்கப்பட்டது.

ராமஜென்ம பூமி – பாபர் மசூதி என்ற இடத்தை இந்தியத் தொல்லியல் துறை லக்னோ அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2003இல் ஆய்வு செய்தது. . 2003 ஜூன் 11 அன்று ஒரு இடைக்கால அறிக்கையைத் தொல்லியல் துறை அளித்தது, அதில் உடைந்த கருப்புக்கல் தூண் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் உச்சியில் நான்கு புறமும் அலங்காரப் பொம்மைகளுடன் உள்ளதாகவும், புனித வாசகத்துடன் பொறிப்பு ஒன்று அரபி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. தொல்லியல் துறையின் அறிக்கையில் இதற்கு முந்தைய சகாப்தங்களில் உள்ள கட்டிடங்களின் அடையாளங்களும் கிடைத்துள்ளன என்றும், அவை சமணக் கோயில்களாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.

2003 ஆம் ஆண்டு ஆய்வின்போது இஸ்லாமியர்களின் இடுகாடு கண்டுபிடிக்க. இந்தியத் தொல்லியல் துறை இதைப் படமாகவும், வீடியோவாகவும் எடுத்தது..ஆனால் அதைப்பற்றி விரிவாக ஆய்வு செய்யவில்லை. அங்கே கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கார்பன் காலக் கணக்கு கண்டுபிடிக்க அனுப்பி வைக்கப்படவில்லை.

அனிருத்தா ஸ்ரீவாஸ்தவா என்ற முன்னாள் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வாளர் சில குழிகளில் களிமண், சுண்ணாம்பு கலவை, சுர்க்கி என்று சொல்லப்படும் சுண்ணாம்பும் மணலும் கலந்த கட்டுமானக் கலவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன; இவையும் கூட இஸ்லாமியர்கள் குடியிருந்த பகுதி என்பதற்கான அடையாளங்கள்தாம் என்று குறிப்பிடுகிறார். அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கு முன்பே சில மசூதிகள் இருந்திருக்கின்றன; என்றும், பாபர்மசூதி முன்பு மசூதி இருந்த இடத்திலேயே கட்டப்பட்டது என்பது புலனாவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..

பல தொல்லியலாளர்கள் இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினர். சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தொல்லியல் அகழ்வாய்வு நடக்கும்போது பார்வையாளராகப் பங்கேற்றனர், அவர்கள், பாபர் மசூதி இருந்த இடத்திற்குக் கீழே எப்படியாவது ஒரு கோயிலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியத் தொல்லியல் துறை செயல்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர், தங்களுடைய கருதுகோளுக்கு ஏற்பச் சான்றுகளைத் தங்கள் விருப்பம் போல மாற்றி அமைத்துக் கொள்ளவும் செய்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் வெளியான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை என்பது நம்பகத் தன்மை அற்றதாக அனைத்துத் தரப்பாலும் கருதப்பட்டது. ஏனென்றால் அரசியல் தலையிடு அதில் இருந்தது. தொல்லியல் துறை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி மனோகர் ஜோஷி. அவரே பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றவர் தான். அதுமட்டுமின்றி, இறுதி அறிக்கை அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

முரளி மனோகர் ஜோஷி
முரளி மனோகர் ஜோஷி

அயோத்தியில மசூதி இருந்த இடத்திற்குப் புத்த மதத்தவர்களும் உரிமை கோரினார்கள். புத்தா கல்வி அறக்கட்டளை சேர்ந்த உதய்ராஜ் அகழ்வையில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்தூண் புத்த ஸ்தம்பம் ஆகும் என்றும், அது இஸ்லாமியப் படை எடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது என்றும் கூறினார். அது மட்டுமின்றி, 1870 இல் பிரிட்டிஷ் தொல்லியலாளர் பேட்ரிக் கார்னிகி அளித்த ஓர் அறிக்கையையும் பெளத்தர்கள் சான்று காட்டினார்கள். கார்னிகி அயோத்தியில் கண்டெடுக்கப்பட்ட தூண்கள் சாரநாத் மற்றும் வாரணாசியில் உள்ள புத்த மத விகாரங்களில் உள்ளவற்றை ஒத்திருக்கின்றன என்று கூறியிருந்தார்.
வரலாற்றறிஞர் பேராசிரியர் சுராஜ் பான் தொல்லியல் ஆய்வு நடந்த இடத்திற்கு வருகை தந்தார்.

தோண்டி எடுக்கப்பட்ட குழிகளைப் பார்வையிட்ட பிறகு, அங்கே பாபர் மசூதிக்கு முன்பே ஒரு மசூதி இருந்திருப்பதற்கான அடையாளங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். 2010 அக்டோபர் மாதம், உச்ச நீதிமன்றம் 8000 பக்கங்கள் உள்ள அறிக்கைகளைப் படித்து விட்டு இறுதியாகப் பாபர் மசூதியின் மையக் குவி மாடத்துக்குக் கீழேதான் இராமர் பிறந்தார் என்று அறிவித்தது.

2019 நவம்பர் 9ஆம் நாள் உச்சநீதிமன்றம் அயோத்தியா வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் 2.77 ஏக்கர் நிலம் இந்திய அரசால் உருவாக்கப்பட வேண்டிய இராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் அளிக்கப்பட வேண்டும் என்றது. மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை உத்திரபிரதேசச் சன்னி மைய வக்பு போர்டுக்கு வழங்கி விட வேண்டும் என்றது. அப்படிக் கூறிவிட்டதாலேயே உச்ச நீதிமன்றம் மிகவும் நேர்மையாகத் தீர்ப்பை வழங்கி விட்டதாக அனைவரும் நம்பி விடுவார்கள் என்று நினைத்தது போலும்.

1528 – இல் மீர் பாக்கி கட்டிய மசூதி முன்னமே இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதியில் கட்டப்பட்டது. அந்த மசூதிக்கு அடித்தளம் இட்டவர் பாபரால் முதல் பானிபட் போரில் (1526) தோற்கடிக்கப்பட்ட இப்ராஹிம் லோடி. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே இரண்டு மசூதிகள் இருந்து, அவை அழிந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் வெகு காலத்திற்கு முன்பு சமணக் கோயில் அல்லது புத்த மடாலயம் இருந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.

பி.பி. லால்
பி.பி. லால்

தொடக்கத்தில் அகழ்வாய்வு செய்த ஆங்கிலேயர் தொல்லியலாளர்கள் நேர்மையாகவே இருந்திருக்கின்றனர். அதன்பிறகு ஆய்வு நடத்திய பி.பி.லால் தொடக்கக் காலத்தில் நேர்மையாக இருந்திருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகு இந்துத்துவவாதிகளுக்கு இணக்கமாக அறிக்கைகள் தர ஆரம்பித்தார். இஸ்லாமியத் தொல்லியலாளர் கே.கே. முகமது என்பவர் 1976 -77 இல் அவர் ஓராண்டு தொல்லியல் டிப்ளோமா படிக்கும் மாணவராக இருந்தபோது பி.பி. லால் அகழ்வாய்வு நடத்திய போது அயோத்திக்குச் சென்றிருக்கிறார். அவர் ஆய்வு நடத்திய அகழ்வாய்வு குழுவில் இல்லை. அதன் பிறகு அடுத்தடுத்த அகழ்வாய்வு நடந்த போதும் அந்தக் குழுவிலும் இல்லை. அயோத்தியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வு தொடர்பற்ற, எந்த அகழ்வாய்வு குழுவிலும் (Panel ) பங்கு பெறாத நபர் இந்தக் கே.கே. முகம்மது.

ஆனால் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன என்று அறிக்கையை வெளியிட்டு இந்துத்துவவாதிகளின் பேராதரவைப் பெற்றார். அது மட்டும் இன்றி, மசூதி இருந்த அந்த இடத்தை முஸ்லிம்களே இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் பேசினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் தரப்பட வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த இடத்தையும் இராமர் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் வழங்கிவிட வேண்டும் என்றார். அயோத்தியில் தொல்லியல் அகழ்வு செய்த எந்தக் குழுவிலும் இல்லாத இந்த நபர், ஒரு டிப்ளோமா மாணவராக மட்டுமே அயோத்திக்குச் சென்று வந்த இந்த நபர், இந்துத்துவவாதிகளுக்கு இணக்கமாகச் செயல்பட்டு, தொல்லியல் துறையில் மிக மேம்பட்ட பதவி உயர்வையும் பெற்றுக் கொண்டார்.

பாபர் மசூதியை இடித்தது என்பதுதான் அக்கிரமம் என்பது இல்லை; அதை நியாயப்படுத்தும் வகையில் தொல்லியல் துறை அளித்த அறிக்கையும் அக்கிரமமானதுதான். அது முழுவதும் பொய்யானது. பாபர் மசூதி இடிப்பு – இராமர் கோயில் கட்டுதல் என்ற விஷயத்தில் இந்தியத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் அமைச்சகம், தொல்லியல் அறிஞர்கள், இந்திய நீதித்துறை என அனைத்துத் தரப்பும் பங்கேற்றன.

இப்போது பாபர் மசூதி இல்லை. அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அக்கிரமங்களின் அடையாளமாக, அநீதியின் அடையாளமாக, இந்தியாவில் நிலவும் இந்து மத வெறியின் அடையாளமாக, நீதிப்பிறழ்வின் அடையாளமாக, இராமர் கோயில் எழுந்துள்ளது என்பதைத்தான் வரலாறு பதிவு செய்கிறது.

— பேராசிரியர் த.செயராமன், வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு) 24.01.2024

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.