உடல் ஈர்ப்பல்ல காதல், மனம் விடுதலை அடைவதின் வெளிப்பாடே காதல் என்பதை உணர்த்தும் “பராரி”!
திரு.எழில் பெரியவேடி அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும், திரு. அரிசங்கர் தயாரித்து, திரு. ராஜூ முருகன் வழங்கியுள்ள “பராரி” திரைப்படம் இந்திய சமூகத்தின் எதார்த்த சூழலைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை. கடவுளை நம்பும் மக்கள், சாதி கடவுளுக்கே எதிரானது என்பதை உணர வேண்டும். சாதி என்ற கருத்தியல் அறிவியலுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் ஏற்புடையதல்ல.
சமூகத்தின் விழுமியம் என்று நம்பப்படும் “சாதி”, இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களுக்கு எதிரானது.
இந்த முரண்பாட்டை மக்கள் உணரச் செய்து, சாதி பேதமற்ற ஒரு சமூகத்தை கட்டமைக்க திரைப்படம் என்ற ஊடகத்தை பயன்படுத்த முற்பட்டிருக்கிறார் இயக்குநர் திரு. எழில் பெரியவேடி.
உள்ளூரில் சாதியாக பிரிந்திருக்கும் மனிதர்கள், மொழி தெரியாத, புதிய ஊரில், வேறு வகையான தாக்குதலுக்கு உள்ளாகும் போது, சாதிய ஆதிக்க உணர்வில் இருந்து விடுபட்டு, தொழிலாளர் வர்க்கமாக உணர்ந்திடும் சூழல் அமைகிறது.
தொழிலாளர் வர்க்கமாக தங்களை உணரத் தொடங்கிய உடன் ஏற்படும் மனமாற்றம் மிக அழகாக படத்தின் இறுதி பகுதியில் வெளிப்படுகிறது.
எதிரி வர்க்கத்திடம் சிக்கித் தவிக்கும் நபர் மீதும் இரக்கம் காட்டி, தனக்கு தீங்கு இழைத்திருந்தாலும் எதிரி வர்க்கத்தின் ஏவலுக்கு அடிபணிந்து நடக்கும் நபரையும் காப்பாற்றி, அவரையும் தொழிலாளர் வர்க்கமாக உணரச் செய்திடுவதே தொழிலாளர் வர்க்க உணர்வு என்பதை படத்தில் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் திரு. எழில் பெரியவேடி
அண்ணன் – தங்கை பாசம் மிகவும் இயல்பாக படத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் உணர்வுகளுக்கு சமூகம் மதிப்பளிக்கத் தவறும் போது, பொறுப்புள்ள ஆண், தனது தர்க்க ரீதியான தலையீட்டின் மூலம் பெண்ணின் கண்ணியத்தை காத்திடும் காட்சி மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
அண்ணன் – தங்கை பாசம் என்பது வெறும் உணர்வு சம்மந்தப்பட்டதல்ல. பாசத்திற்குரியவர் உரிமை மறுக்கப்படும் போது அறிவுபூர்வமாக செயலாற்றி, உறுதியுடன் நின்று, பாசத்திற்குரியவர் எந்த சூழலிலும் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதை அனுமதிக்காமல், அவருக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தருவது அன்பின் வெளிப்பாடாகும்.
பூப்பெய்திய செய்தி கேட்டவுடன், வெறும் அண்ணன் – தங்கை பாசமாக அமையாமல், ஒரு அண்ணன் தனது தங்கைக்கு உரிய உரிமையைப் பெற்றுத்தரும் தருணம், “கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடி போக” என்ற அருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகளார் கூற்றைப் பிரதிபலிக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாடகக் காதல், லவ் ஜிஹாத், ஜீன்ஸ் பேண்ட் – கூலிங் கிளாஸ் கவர்ச்சி என்றெல்லாம் பிதற்றும் மனநோயாளிகள் தெளிவுப் பெற; காதல் எவ்வாறு இயல்பாக மலர்கிறது என்பதை படம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்துள்ளது.
காதல், உடல் சார்ந்ததும் அல்ல, தோற்றத்தின் ஈர்ப்பு சார்ந்ததும் அல்ல. அன்பு சார்ந்தது, நம்பிக்கைச் சார்ந்தது, மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்படுவதே காதல் என்பதை மிகவும் அழகாக படம் புரியவைக்கிறது.
படத்தின் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ள அனைவரும் மிகவும் சமூகப் பொறுப்புடன் தங்களின் கடமையைச் செய்துள்ளது படம் முழுக்க நன்கு வெளிப்படுகிறது.
உணர்ச்சி மேலோங்கும் போது அறிவு பயன்பட மறுக்கிறது. நிதானமாக யோசித்தால் சமூகச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பதை “பராரி” உணர்த்துகிறது.
மொழிப் பிரச்சினையை சுயநலத்திற்காக சிலர் பயன்படுத்துவது, தாக்குதல் மிகவும் கொடூரமாக நிகழ்வது ஆகியவை சமூகத்தில் நடக்கிறது என்றாலும், திரைப்படத்தில் அதே அளவில் காட்சிப்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. படத்தில் சில வசனங்களும், சில காட்சிகளும் தேவையற்றது என்றே தோன்றுகிறது. சிற்சில குறைபாடுகள் இருந்த போதிலும், “பராரி” தொழிலாளர் வர்க்க அரசியலை வெளிப்படையாக பேசுகிறது.
“பராரி” திரைப்படம் மூலம் புதிதாக அறிமுகமாகியுள்ள கலைஞர்கள் அனைவரும் திரை நட்சத்திரங்களாக பிரகாசிப்பார்கள்.
“பராரி” திரைப்படத்தில் நடித்த மற்றும் படம் உருவாக பல்வேறு வகையில் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
படம் அனைத்து வகையிலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
தோழமை அன்புடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை