காலேஜுக்கு முன்னாடியே தான் கக்கூசு கட்ட வேணுமா? வேற இடமே இல்லீங்களா ஆபிசர்ஸ்?
காலேஜுக்கு முன்னாடியேதான் கக்கூசு கட்ட வேணுமா? வேற இடமே இல்லீங்களா ஆபிசர்ஸ்? திருச்சி ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரிக்கு எதிரில் கக்கூசு அமைக்கும் மாநகராட்சி ! தமிழகத்தின் பாரம்பரியமான அரசு கல்லூரிகளுள் ஒன்று திருச்சியில் அமைந்துள்ள ஈ.வெ.ரா அரசு கலைக்கல்லூரி. தந்தை பெரியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் இடத்தை அரசுக்கு தானமாக வழங்கியதன் காரணமாக உருவான கல்லூரி.
திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கான ஆதாரம். சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் அன்றாடம் பயணித்து கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களை கொண்ட கல்லூரி. வெறும் 1500 இடங்களுக்கு 25,000-க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்தக் கல்லூரியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்கள், மாணவர் அமைப்புகளின் அழுத்தமான கோரிக்கைகள் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாகத்தான் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் சிலவற்றை மேம்படுத்தியிருக்கிறார்கள். மிக முக்கியமாக, தொலைதூர கிராமங்களிலிருந்து தினம் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் விடுதி வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், போதுமான எண்ணிக்கையில் கல்லூரி நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததன் காரணமாக, பெரும்பாலான மாணவர்கள் டி.வி.எஸ். டோல்கேட் மற்றும் மன்னார்புரம் பேருந்து நிறுத்தங்களிலிருந்து குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் தூரம் பொடி நடையாக நடந்துதான் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வளவு சிரமங்களையும் சந்தித்துவரும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்களுக்கு மேலும் மனச்சோர்வை உண்டாக்கும் வகையில், கல்லூரி நுழைவாயிலுக்கு நேர் எதிரிலேயே கழிப்பறையைக் கட்டவிருக்கிறது, திருச்சி மாநகராட்சி.
பொதுவில் கழிவறைகளை கட்டி முடிப்பதோடு கடமை முடிந்துவிட்டதென மாநகராட்சி ஒதுங்கிவிடும். போதிய பராமரிப்பின்றி நாற்றம் பிடித்த கழிவறை வளாகமாக மாறிவிடும் அவலத்தை சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எஃப்.ஐ).
உடனடியாக, வேறு இடத்தில் கழிவறைகளை அமைக்க வேண்டும் என்பதாக கோரிக்கை விடுத்திருக்கும் எஸ்.எஃப்.ஐ., அதன் மாவட்ட செயலர் மோகன் மற்றும் தலைவர் சூரியா ஆகியோர் கூட்டாக விடுத்திருக்கும் அறிக்கையில், “ திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகளில் வண்ண விளக்குகளுடன் பூங்கா அமைத்து வருகிறது.
இதை தொடர்ந்து திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் நடைபாதையில் பூங்கா அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொது கழிப்பிடம் கட்டும் பணிகளையும் திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கழிப்பிடம் அமைப்பதற்கு சுற்றிலும் பல்வேறு இடங்கள் இருக்கும் பட்சத்தில் கழிவறை கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு எதிரே இடத்தை தேர்வு செய்தவன் காரணம் என்ன தமிழக முழுவதும் பல்வேறு மாநகராட்சி கழிவறைகள் சுத்தம் செய்யாமல் அசுத்தமான முறையில் இருப்பதை பார்த்திருக்கிறோம்
கல்லூரிக்கு எதிரில் இதுபோல கழிவறைகளை அமைப்பது கல்லூரியின் இயல்பு நிலையை பாதிக்கும் கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நோய் பரவக்கூடிய நிலை ஏற்படும் எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகாமையில் அமைக்க உள்ள கழிவறையை மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தும்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா”ங்கிறதைப் போல, காலேஜுக்கு முன்னாடியேதான் கக்கூசு கட்ட வேணுமா? வேற இடமே இல்லீங்களா ஆபிசர்ஸ்?
– கலைமதி.