வெள்ளை கோட்டிற்கு பின்னால் !
பன்னிரண்டு மணி நேரம் நீண்ட முடிவில்லா முயற்சிக்குப் பிறகு, ஆபரேஷன் தியேட்டர் அமைதியானது. இயந்திரங்களின் பீப் நின்றது. வெளிச்சம் கடுமையானது. வேகமாக ஓடிய நேரம் ஒரே நொடியிலே நின்றுபோனது. 19 வயதான ஒரு இளைஞன், அசையாமல் கிடந்தான். டாக்டர் கையுறைகளை கழற்றினார். சோர்வால் அல்ல. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
பன்னிரண்டு மணி நேரம் அந்த கைகள் மரணத்தோடு போராடின. ஒவ்வொரு தையலும் — நம்பிக்கை. ஒவ்வொரு முடிவும் — அழுத்தம். ஒவ்வொரு நொடியும் — தீர்மானமானது. ஆனால், சில நேரங்களில் மருத்துவ அறிவுக்கும் எல்லைகள் உண்டு.
காட் இஸ் கிரேட். அற்புதமான கடவுளின் கிருபையால் உங்கள் மகன் / மகள் / உறவினர் பிழைத்து விட்டார் என்று உரியவர்களிடம் சொல்லுவதற்கு கடவுள் நம்பிக்கையில்லா டாக்டர்கள் கூட விரும்புகின்றனர் . ஆனால், அதை எல்லாம் மீறி, நோயாளியை காப்பாற்ற முடியாத போது?
டாக்டர் அப்ரேஷன் தியேட்டரிலிருந்தோ, ஐசியுவிலிருந்தோ வெளியே வந்தார். வெற்றியை அறிவிக்க அல்ல. நன்றி பெற அல்ல. எப்படி அறிவிப்பது என்று கலங்கின கனத்த இதயத்தோடு.
மற்றவர்களின் மரணத்தை தடுக்க தன் உயிரினை கொடுத்து அதிகபட்சம் போரடிய பின், மருத்துவ உலகின் நிதர்சனத்தை எத்தனை முறை சந்தித்து இருந்தாலும்; ஒவ்வொரு முறையும் தன் முயற்சிகள் தோல்வி அடையும் போது; ஆண்டவனே நீ எங்கே இருக்கிறாய் ? என்ற கேள்வியுடன்.
மருத்துவமனையின் பின்புறம் நடந்தார். குளிர்ந்த படிகளில் அமர்ந்தார். அமைதியாக அழுதார். டாக்டர்களை வலுவாக நிற்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். “நாங்கள் எங்களால் முடிந்த சிறந்ததை செய்தோம்”என்று சொல்லக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
ஆனால், காப்பாற்ற முடியாமல் போன ஒரு உயிரின் பாரத்தை எப்படித் தாங்குவது? என்று எந்தப் புத்தகமும் கற்றுக்கொடுப்பதில்லை. எந்த பேராசிரியரும் சொல்லித் தருவதில்லை.
மருத்துவருக்கு தெரியாத இறந்த அந்த நோயாளி, யாரோ ஒருவரின் முழு உலகம். யாரோ ஒருவரின் மகன். யாரோ ஒருவரின் கனவு. எத்தனை பிள்ளைகள் என்று கூட சரிவர தெரியாது . இன்னும் சில நிமிடங்களில், அவன் எதிர்கொள்ள வேண்டிய குடும்பம். அவர்களின் கண்களில் நம்பிக்கை.
ஆனால், மருத்துவரால் கொடுக்க ஒன்றுமில்லை. பலருக்கு தோன்றும் டாக்டர்களுக்கு உணர்வுகள் இல்லை என்று. மரணம் “வேலையின் ஒரு பகுதி” மட்டுமே என்று. உண்மை இதுதான்.
டாக்டர்கள் ஒவ்வொரு இழப்பையும் மனதில் வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். அமைதியில். நித்திரையில்லா இரவுகளில். தனியாக அமர்ந்து தம்மையே கேள்வி கேட்கும் நிமிடங்களில். அவர்களின் கடவுள் நம்பிக்கை கூட அசைக்கப்படும் வேளையில்.
நான் ஏதாவது கவனிக்காமல் விட்டேனா? மேலும், செய்ய எதுவும் முடியவில்லையா? ஒரு நிமிடம் கூடுதலாக இருந்திருந்தால்? டாக்டர்கள் நோயாளிகளின் முன்னால் அழுவதில்லை. ஏன், தன் சொந்த குடும்பத்தினரிடம் கூட அழுவதில்லை.
மென்மையான மனதுள்ள அவர்கள் அழுவார்கள். அமைதியாக. அவர்களின் கடவுளின் முன்னே . மருத்துவமனையின் பின்புறம். படிகளில். வெறிச்சோடிய வழித்தடங்களில். வீட்டுக்குச் செல்லும் முன் காரின் உள்ளே. கழிவறையில் கூட.
உயிரைக் காப்பாற்றுவதே அவர்களின் தொழில். காப்பாற்ற முடியாமல் போனவர்களுக்காக அமைதியாக துயரப்படும் கண்ணீர் விடும் அசாதரண மனிதர்கள் அவர்கள்.
செல்போன் மணி அடித்தது. மறுமுனையில் செவிலியர் சார் இன்னொரு அக்ஸிடென் கேஸ் வந்திருக்கு. முந்தைய இழப்பிற்கு அழக்கூட நேரமில்லை. கால் வந்தவுடன் அந்த இரவு டாக்டர் கண்ணீரைத் துடைத்தார். எழுந்து நின்றார். மீண்டும் உள்ளே நடந்தார். ஏனெனில், மற்றொரு நோயாளர் உயிருக்கு ஆபத்துடன் காத்திருக்கிறார். மற்றொரு உயிர்க்காக அவர் வலுவாக இருக்க வேண்டும். இதுதான் ஒரு டாக்டரின் வாழ்க்கை.
வெள்ளை கோட் வெறும் தியாகத்தின் அடையாளம் மட்டும் அல்ல — பல குருதி வலியும் காயங்ககளின் நடுவிலும் எதையாகிலும் செய்து அடுத்த உயிரை காப்பாற்ற துடிக்கும் ஒரு அசாதாரண வலியை தாங்கியே பழகி போன வெள்ளை ரோஜா பூ. இதயத்தினை மூடி மறைத்துள்ள இதய கவசம். அதன் பின்னால் தான் அநேகரின் சுவாசம் இதய துடிப்பில் உறைந்திருக்கும், வலி !
— மருத்துவர் ஜான் விஸ்வநாத்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.