அங்குசம் சேனலில் இணைய

தலையெழுத்தைக் களையெடுத்த இளம் பகவத் ஐ.ஏ.எஸ் ( 15 )

முனைவர் ஜா.சலேத் - கண்ணெதிரே போதிமரங்கள்! ( அறியவேண்டிய ஆளுமைகள் )

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அப்பா இறந்துட்டார். அம்மாவிற்கும், சகோதரிகளுக்கும் தாம் மட்டுமே துணை. கருணை அடிப்படையில் எப்படியாவது அப்பாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்தால் போதும் நாங்கள் பிழைத்துக் கொள்வோம் என்பது மட்டுமே அந்த இளைஞரின் உள்ளக்கிடக்கை. அந்த நம்பிக்கையை அதிகாரிகள் பொய்யாக்கியதால் நான் ஏன் மக்களுக்கான அதிகாரியாக மாறக் கூடாது என்று போராடி வென்ற இளைஞரே இளம் பகவத் ஐ.ஏ.எஸ்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமத்துப்பிள்ளை இளம்பகவத். ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இளம்பகவத் ஐ.ஏ.எஸ்
இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

பள்ளி இறுதி வகுப்பு மாணவரான இளம்பகவத்தின் வாழ்வில் இருள் சூழத் தொடங்கியது. ஆம். அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. அத்துடன் தன் படிப்புக்கு முழுக்குப் போட வேண்டிய நிர்பந்தம் அவரை அழுத்தியது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். 1998 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.

தினந்தோறும் அரசு அலுவலகங்களின் முன்னால் மணிக்கணக்கில் காத்திருந்தார். வரிசை முடிந்து உள்ளே நுழையும் வாய்ப்பு வரும்போது அதிகாரி அவசரமாக வெளியேறி விடுவார். அதிகாரிகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோதும் நம்பிக்கையான பதிலே கிடைத்தது. அலைக்கழிப்பில் அவர் மனம் பெரிய சோர்வுக்குள்ளானது. வினாக்கள் எழத் தொடங்கின. நமக்கு வேலை கொடுப்பதில் யாருக்கு என்ன சிக்கல். நம் நிலையை இவர்களிடம் சொல்லிச் சொல்லி மனம் நொந்துவிட்டதே என நொடிந்துபோகும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

இனி அரசுப்பணி வாய்ப்பு நமக்கு இல்லை என்பது மட்டும் அவருக்கு உறுதியாகத் தெரிந்த்து. அவ்வளவுதான் உன் தலையெழுத்து என்கிற முடிவுக்கு வந்துவிட்டது அவரது குடும்பம். சகோதரிகளின் திருமணம் மலைபோல் முன்னால் நின்றது. அம்மாவுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டார்.

bhagavath ias - ஐ.ஏ.எஸ் இளம்பகவத்
bhagavath ias – ஐ.ஏ.எஸ் இளம்பகவத்

அரசுப்பணிக்கனவு அவரைவிட்டுப் போகவில்லை. அரசுப்பணி பெறவேண்டும். அது கருணை அடிப்படையில் அல்ல. தம் சுய முயற்சியால். விடாமுயற்சியால் என்கிற முடிவுக்கு வந்தார். கல்லூரிப்பக்கம் செல்வதற்கான துளியும் வாய்ப்பின்றி குடும்பத்தின் சுஐமயைத் தலையில் ஏற்றிக்கொண்ட அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வியில் வரலாறு பட்டப்படிப்பில் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்துகிற தேர்வுக்குத் தம்மைத் தயார்படுத்தத் தொடங்கினார். அதில் முதல் வெற்றி கண்டார்.

2007 ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதற்கிடையில் 2010 ஆம் ஆண்டில் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011 ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார்.

ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி அரசுப் பணிகள் தேடிவந்தன. எனினும் அவர்  சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்றார். இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

bhagavath ias - ஐ.ஏ.எஸ் இளம்பகவத்
bhagavath ias – ஐ.ஏ.எஸ் இளம்பகவத்

‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத்.

தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். “அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்” என்கிறார் இளம்பகவத். இன்று 33 இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.

‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்’’ எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்!

கட்டுரையாளர்

முனைவர் ஜா.சலேத்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித்  தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்

கண்ணெதிரே போதிமரங்கள் –முந்தைய தொடர்கள் படிக்க 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.