2026 ல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் ! – சர்தார் ஜீவன் சிங்
கடந்த ஒரு வருடமாக தென் தமிழகத்தில் சாதி ரீதியான வன்முறைகள் அடக்குமுறைகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
2026ல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் – சொல்கிறார் பகுஜன் திராவிட கட்சியின் நிறுவனர் சர்தார் ஜீவன் சிங் பேட்டி…
பகுஜன் திராவிட கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சர்தார் ஜீவன் சிங் தலைமையில் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டக்குளத்தில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து சர்தார் ஜீவன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்
இந்தியா முழுவதும் சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலைக்காக முன்னெடுக்கக்கூடிய அரசியலை பகுஜன் திராவிடக் கட்சி செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சமூக நீதி என்ற பெயரில் மனுவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது. சனாதான தர்மத்தை நிலை நாட்டக்கூடிய அரசாக தமிழக அரசு இருந்து கொண்டிருக்கிறது
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்த நாத்திற்கும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை எங்களால் பார்க்க முடியவில்லை.
உத்திரபிரதேசத்தில் சனாதானத்தை வெளிப்படையாக நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தீண்டாமை மற்றும் அடக்குமுறை வடிவம் விஞ்ஞான பூர்வமாக உள்ளது. மனுவாத போலி திராவிட கட்சியின் ஆட்சியானது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்திருக்கிறது.
தமிழகத்தில் சனாதனவாதிகள் மிக வெளிப்படையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். போலி பெரியார்வாதிகள் விஞ்ஞான ரீதியாக தீண்டாமை கொடுமை மற்றும் அடக்கு முறையை காவல்துறை மற்றும் உயர் சாதியினர் மூலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. பல்வேறு மாநிலங்கள் சேர்ந்தவர்கள் தங்களது கட்சி மூலமாக பெரியார் பற்றி தெரிந்து கொள்ள பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வேங்கை வயல் விவகாரம், சிவகங்கையில் புல்லட் ஓட்டியதால் கை வெட்டப்பட்ட விவகாரம், கோவில்பட்டியில் கல்லூரி மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த ஒரு வருடமாக தென் தமிழகத்தில் சாதி ரீதியான வன்முறைகள் அடக்குமுறைகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
பெரியார் ஆட்சி நடப்பதாக சொல்லிக் கொள்பவர்களின் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனை மக்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வட இந்தியாவில் உள்ளவர்கள் பெரியார் மண்ணில் இது போன்று நடக்கிறதா என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த சூழ்நிலை தொடருமானால் 2026ல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் ஆட்சி மாற்றம் நடக்கும் என பகுஜன் திராவிட கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சர்தார் ஜீவன் சிங் தெரிவித்துள்ளார்.
— மணிபாரதி.