அங்குசம் பார்வையில் ‘பயாஸ்கோப்’ திரைப்படம்
தயாரிப்பு : சந்திர சூரியன், பிரபு, பெரியசாமி. டைரக்ஷன் : சங்ககிரி ராச்குமார். டிஜிட்டல் பார்ட்னர் : ஆஹா ஃபைண்ட், டிஸ்ட்ரிபியூசன் பார்ட்னர் : புரொடியூஸர் பஜார். நடிகர்-நடிகைகள் : ராச்குமார்,வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம் மாணிக்கம், இந்திராணி, சிவாரத்னம், எஸ்.எம்.செந்தில்குமார், பெரியசாமி, மோகனப்ரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சசிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா. ஒளிப்பதிவு : முரளி கணேஷ், இசை : தாஜ் நூர்,ஆர்ட் டைரக்டர் : மார்ட்டின். பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
விஜய் டி.வியில் கோபிநாத் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டி சொல்லும் நிஜக்கதையின் மூலம் இந்தப் படம் ஆரம்பிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வெங்காயம்’ என்ற படத்தை தயாரித்து டைரக்ட் பண்ணி, சினிமா புள்ளிகளையும் ரசிகர்களையும் கவனம் ஈர்த்தவர் சங்ககிரி ராச்குமார். அந்தப் படத்தை எடுத்து, அதை ரிலீஸ் பண்ண அவர் பட்ட கஷ்டங்களை மனவலிகளை, ஒரு படத்தில் சொல்வது தான் இந்த ‘பயாஸ்கோப்’.
சங்ககிரி ராச்குமார் ஒரு கதை எழுதி, அதில் நடிப்பதற்கு கார்த்தி, நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை யோசித்து, அவர்களின் கால்ஷீட் பிரச்சனை, சம்பளப் பிரச்சனை போன்ற பெரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என முடிவு பண்ணி, தனது நண்பர்கள், தங்கை மோகனப்ரியா, அப்பா மாணிக்கம் , பாட்டிகள் முத்தாயி,வெள்ளையம்மாள், தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்.
கடன் வாங்கி கேமரா வாங்குகிறார். உள்ளூர் லேத் பட்டரைக்காரரின் உதவியுடன் கேமராவைத் தள்ளும் டிராலி செய்கிறார். நண்பன் ஒருவன் வேன் கொடுத்து உதவ, அதையே யூனிட் வேனாக்கி, ஷூட்டிங்கும் முடித்து, கீத்துக் கொட்டகை தடுப்புக்குள் டப்பிங், எடிட்டிங் வேலைகளையும் முடித்து, ‘பயாஸ்கோப்’ என்ற அந்தப் படத்தை விற்பதற்கு சென்னைக்கு வந்து சிக்கிச் சீரழிகிறார். ‘பயாஸ்கோப்’ ரிலீசாச்சா? என்பதை உண்மைக்கு நெருக்கமாக மட்டுமல்ல, உண்மையாக சொல்லியிருக்கும் க்ளைமாக்ஸ் தான் இப்படம்.
சின்னப் படம் எடுத்துவிட்டு, அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் நொந்து நொம்பலமான சேதிகளை எத்தனையோ சினிமா மேடைகளில், அந்தத் தயாரிப்பாளர்களே சொல்வதை நேரடியாக கேட்டிருக்கிறோம். பத்திரிகைகள் மூலம் அப்படிப்பட்ட செய்திகளைப் படித்திருக்கிறோம்.
அதே போல் நூறு கோடி, இருநூறு கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து, அதற்கு சில கோடிகள் செலவழித்து புரமோஷன் பண்ணி, ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணி, அதில் பல படங்கள் மண்ணைக் கவ்விய செய்திகளையும் பார்த்திருக்கோம்.
இதையெல்லாம் கலந்துகட்டி, ஒரு படம் எடுத்த கதையை, ஒருபடமாக எடுத்த சங்ககிரி ராச்குமாரைப் பாராட்டலாம். தாத்தா –பாட்டிகளின் இயல்பான நக்கல், நையாண்டி, அதிரடி சரவெடி காமெடிகளை அங்கங்கே வைத்து ரசிக்க வைக்கிறார் ராச்குமார். சின்னப் படங்கள் என்றால், ரிலீசான மறுநாளே, ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே கொடுக்கப்படும் தியேட்டர்காரர்கள், அதையும் மறுநாளே தூக்கிவிடும் நிதர்சனத்தையும் இந்த ‘பயாஸ்கோப்’பில் தைரியமாக பதிவு செய்துள்ளார் ராச்குமார். அதே போல் ஜோசியக்காரர்களின் பித்தலாட்டைத்தை ஒரு காதல் ஜோடி மூலம் கனெக்ட் பண்ணி, அதை தனது தங்கை கேரக்டர் மூலமே பேச வைத்து, ஜோசிய மூடநம்பிக்கையாளர்களை சாட்டையால் [ இது அண்ணாமலை அடித்துக் கொண்ட டூப்ளிகேட் சாட்டையல்ல, நிஜ சாட்டை ] அடித்திருக்கிறார் சங்ககிரி ராச்குமார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாத்திகராக சத்யராஜ், ‘பயாஸ்கோப்’ பை ரீரிலீஸ் பண்ணும் டைரக்டர் சேரன், படத்தைப் பார்த்து தானாக முன்வந்து புரமோட் பண்ணும் டைரக்டர்கள் மிஷ்கின், ரவிக்குமார் ஆகியோர் கெளரவ வேடத்தில் வந்து ‘பயாஸ்கோப்’பிற்கு பலமும் பெருமையும் சேர்த்துள்ளார்கள்.
சங்கரி ராச்குமாரின் இந்த கடின முயற்சியைக் கண்டெடுத்து ரிலீஸ் பண்ணுவதற்கு சப்போர்ட்டாக இருக்கும் ‘ஆஹா ஃபைண்ட்’ ஓடிடி பிளாஸ்ட்ஃபார்முக்கும் வினியோகத்தில் பெரும் உதவியாக இருந்த புரொடியூஸர் பஜாருக்கும் தாராளமாக சபாஷ் போடலாம்.
— மதுரைமாறன்.