சின்ன குக்குருவன் அல்லது செம்மார்புக் குக்குறுவான் என்று ஒரு குருவி. ஆங்கிலத்தில் இதை Coppersmith or Crimson-breasted barbet என்பர்.
சிட்டுக் குருவியின் பருமன் கொண்ட இந்தக் குருவியின் பிரதான நிறம் கரும் பச்சை. முன் தலையிலும் மேல் மார்பிலும் இரத்தச் சிவப்பான சிறகுகளும், கழுத்திலும் கண்களுக்கு மேலு கீழும் வெள்ளை சிறகுகளும் இருக்கும். கீழ் மார்பு, வயிறு இவற்றில் சற்றே மஞ்சள் கலந்த பச்சை நிறம் மற்றும் வெள்ளை சிறகுகளில் நடு நடுவே கருப்பு சிறகுகளுமாக இருக்கும்.
சின்ன குக்குருவன் தனது அலகினால் ஒரு பட்டடுப் போன மரக்கிளையில் சுமார் ஒன்றரை அங்குல விட்டமுள்ள துளை செய்து தன் கூட்டினைத் தயார் செய்யும். ஒரு தடவை தயார் செய்த கூட்டினையே மீண்டும் மீண்டும் வருடா வருடம் உபயோகிக்கும், அந்தக் கிளையை யாரும் வெட்டாதிருந்தால்.
இந்த குக்குருவானுக்கு ஜியாமெட்ரி பாக்சிலிருந்து காம்பெஸை எடுத்து மரத்தில் வட்டம் போட்டுத் தருவது யார்? இவ்வளவு அழகாக வட்ட வடிவில் துளை போடுகிறதே! நம்மால் முடியுமா காம்பஸ் துணை இன்றி மரத்தில் இவ்வளவு அழகாக வட்டம் போட?
‘பார்பெட்’ என்று இக்குருவிக்கு பெயர் வரக் காரணம் இதன் மேல் அலகின் அடிப்புறம் காணப் படும் பூனை மீசை போன்று சில ரோமங்கள் இருப்பதால்தான் (‘பார்ப்’ என்றால் ஆங்கிலத்தில் முள் என்று பொருள்).
ஆல், அரசு போன்ற மரங்களில் அதிகமாக வாழ்ந்தாலும் குக்குருவனை தோட்டங்களிலும் சாலைகளிலும் உள்ள பெரிய மரங்களிலும் காணலாம். தப்பு… தப்பு… காணலாம் என்று சொல்வதைவிட கேட்கலாம் என்று சொல்வதே சரியாகும். காரணங்கள் இரண்டு. அது என்ன, என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம் …
தொடரும்.
ஆற்றல் பிரவீன்குமார்,
சூழல் செயல்பாட்டாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.